மன்னார் முசலியில் ஆர்ப்பாட்டம்
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மறிச்சுக்கட்டி, மரைக்கார்தீவு கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணிகளைத் திருப்பித் தரவேண்டும் எனவும், மீள்குடியேறியுள்ள காணியற்ற குடும்பங்களுக்குக் காணிகள் வழங்க வேண்டும் எனவும் கோரி சாலை மறிப்புப் போராட்டம் நேற்று ஞாயிறன்று நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டதையடுத்து. இடம்பெயர்ந்து சென்று 2010ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீள்குடியேறிய இந்தக் கிராமங்களின் வயல் காணிகளின் ஒரு பகுதியைக் கடற்படையினர் படை முகாம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தியுள்ளனர். இதனால் தமது வாழ்வாதாரத்திற்கான விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும். அத்துடன், இடம்பெயர்ந்திருந்த இருபது வருட காலத்தில் அதிகரித்துள்ள குடும்பங்கள் குடியேறுவதற்கு போதிய காணிகள் இல்லாத நிலைமையும் ஏற்பட்டிருப்பதாகவும்.
கையகப்படுத்தப்பட்ட விவசாய காணிகளைத் தரவேண்டும், காணியற்ற குடும்பங்கள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது போன்ற தமது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினாலேயே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக மரைக்கார்தீவு கிராம மக்களின் தலைவர் மெலளவி மஹ்முத் தௌபிக் தெரிவித்தார்.