மொரீஷியஸ் தொடர்பில் இலங்கை அதிருப்தி-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டுவரும் இணை-அனுசரணை நாடுகளில் ஒன்றான மொரீஷியஸ் தொடர்பில் இலங்கை அதிருப்தி கொண்டுள்ளது.. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், மொன்டநேக்ரோ, மசெடோனியா ஆகிய நாடுகளுடன் மொரீஷியஸும் இணைந்து முன்மொழிந்து கொண்டுவருகின்ற தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயல் என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும் தெரிவித்துள்ளார். இது உள்நாட்டு விவகாரத்தில் அத்துமீறி நுழையும் நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார. இந்நிலையில் மொரீஷியஸ் வெளியுறவமைச்சர் அர்வின் பூலெல் கூறுகையில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல்கொடுக்கும் தங்கள் அரசின் நிலைப்பாடு காரணமாகவே இலங்கை மீதான பிரேரணையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து கொண்டுவருகிறோம்.’ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவிநீதம் பிள்ளையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவுகளின் படியும் காமன்வெல்த் மாநாட்டின் இறுதி முடிவுகளின் அடிப்படையிலுமே நாங்கள் இந்த பிரேரணைக்கு அனுசரணை வழங்குகிறோம். காமன்வெல்த் சாசனம் மற்றும் ஐநா மனித உரிமைகள் சாசனம் ஆகிய ஏற்பாடுகளுடன் முற்று முழுதாக இசைந்து நடக்க வேண்டும் என்ற தங்களின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.
தற்போது விவாத மட்டத்தில் இருக்கும் இலங்கை மீதான தீர்மானத்தின் முன்வரைவில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் மனித உரிமை விழுமியங்களைப் பாதுகாத்தல் என்ற முக்கிய கடப்பாட்டில் கருத்தொற்றுமை ஏற்படும்.
இலங்கையில் சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும் சில முக்கிய மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினாலேயே இலங்கை மீதான தீர்மானத்தை முன்னின்று கொண்டுவருவதாகவும்.
இலங்கை மீதான தீர்மானம் ஒட்டுமொத்த இலங்கைப் பிரஜைகளுக்கும் பொதுவான, உலக மக்களுக்கே பொதுவான மனித உரிமை விழுமியங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதால் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைப்; பயணிகளை எதிர்பார்ப்பதாக மலேசியா தெரிவிப்பு-
மலேசியா இந்த வருடத்தில் 70 ஆயிரம் இலங்கை சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்திருப்பதாக மலேசிய பொதுத்திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் டடுக் அசிசான் நூர்டின் தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு இந்த வருடத்தில் சுமார் 200 நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும், மலேசியாவுக்கு இலங்கை, எந்த தருணத்திலும் முக்கியமான சந்தையாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்தில் 64 ஆயிரத்து 51 பேரும், 2012ஆம் ஆண்டில் 62 ஆயிரத்த 821 பேருமாக இலங்கை சுற்றுலாப்பயணிகள் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். இந்த வருடத்தில் சுற்றுலாப்பயணிகள் தொகையை 10 தொடக்கம் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் நோக்கில் புதிய உற்பத்திகளையும், சுற்றுலாத் தளங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மலேசிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய புதிய தொலைபேசி இலக்கம்-
இந்த வருடம் சுமார் 170 பேஸ்புக் கணக்குகளை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை கணணி அவசர பிரதிபலிப்புக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் முறைக்கேடுகள் தொடர்பில் இதுவரை 250 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார். இதில் 80 வீதமான முறைப்பாடுகள் போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை செய்ய முடியும் என இலங்கை கணணி அவசர பிரதிபளிப்புக்கள் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை மட்டுப்படுத்தப்பட்டது-
ஆட்பதிவு திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவையை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜீ.ஏ.ஆர். தேவசிறி தெரிவித்துள்ளார். கடந்த தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழியில் தேசிய அடையாள அட்டையில் தகவல்கள் சேர்க்கப்படும் செயற்பாடு காரணமாக ஏற்பட்ட தாமதமே இதற்காக காரணம் என்றும் ஜீ.ஏ.ஆர் தேவசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் கட்ட விசாரணை-
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் கட்ட விசாரணைகள் எதிர்வரும் 20ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமானவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச் டபிள்யூ குணதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரையிலும் 800 முறைப்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் தமது ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எச். டபிள்யூ குணதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா பிரேரணைக்கு பிரான்ஸூம் ஆதரவு-
பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜீன் போல் மோன்சு இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீயை சந்தித்துள்ளார். அத்துடன் வட மாகாணசபையின் தவிசாளர் சிவிகே சிவஞானத்தையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது கருத்துரைத்த பிரான்ஸ் தூதுவர், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அமரிக்க பிரேரணைக்கு பிரான்ஸ் ஆதரவை வழங்கும் என தெரிவித்ததாக வட மாகாணசபை தவிசாளர் சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.