35 நாட்களில் 682 முறைப்பாடுகள் பதிவு-கபே-

cafeமேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து நேற்று வரையிலும் தமக்கு மொத்தமாக 682 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அறிவித்துள்ளது இவற்றில் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் தொடர்பில் 273 முறைப்பாடுகளும் சட்டவிரோதமான தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பில் 354 முறைப்பாடுகளும் மேலும் வன்செயல்கள் தொடர்பிலும் 29 முறைப்பாடுகளும் இதர சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் இதுவரையும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கபே குறிப்பிட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளில் 400 முறைப்பாடுகள் மேல் மாகாணத்திலிருந்தும் 266 முறைப்பாடுகள் தென்மாகாணத்திலிருந்தும் கிடைத்துள்ளன. இதேவேளை இரண்டு மாகாணங்களுக்கும் பொதுவாக 16 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கு நியூசிலாந்து கிறீன் கட்சி ஆதரவு-

இலங்கைமீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த நியூசிலாந்து பூரண ஆதரவளிக்க வேண்டும் என அந்நாட்டு கிறீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நியூசிலாந்து கிறீன் கட்சியின் பேச்சாளர் ஜேன் லோகீ இக் கோரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைத்துள்ள பிரேரணைக்கு நியூசிலாந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம் எனவும், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஜெனீவாவில் வலியுறுத்தப்படும் எனவும் கிறீன் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கை வைக்க முடியாது என ஜேன் லோகீ கூறியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

யுத்தம் தொடர்பில் வவுனியாவில் கண்காட்சி-

யுத்தத்தின் தாக்கமும் அதன் பின்னரான காலமும் என்னும் தொனிப்பொருளில் சி.ஆர்.சி. நிறுவனத்தின் ஏற்பாட்டில் புகைப்பட கண்காட்சி இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆரம்பமான இக் கண்காட்சி இன்றும் நாளையும் இடம்பெறுகின்றது. வடபகுதியில் யுத்த காலங்களில் இடம்பெற்ற மனித படுகொலைகள், வெடிப்பு சம்பவங்கள், புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், மக்களின் அவலநிலை தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பாக இக் கண்காட்சி வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது. வடமாகாண ஆளுனர் சந்திரசிறியினால் அரம்பித்து வைக்கப்பட்ட இக் கண்காட்சியை வவுனியா பாடசாலை மாணவர்கள் பார்வையிடுகின்றனர்.

இலங்கை நிலை குறித்து கனடா கவலை-

பொதுநலவாய நாடுகளின் தவிசாளராக உள்ள இலங்கையின் நிலை கண்டு கவலை கொள்வதாக கனேடிய பிரதமர் ஸ்டிபன் ஹாப்பர் தெரிவித்துள்ளார். நேற்று கொண்டாடப்பட்ட பொதுநலவாய தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 21ஆம் நூற்றாண்டில் பொதுநலவாய அமைப்பின் தவிசாளர் பதவி இலங்கைக்கு வழங்கப்பட்டமை பொதுநலவாய நாடுகளின் நம்பகத்தன்மையின் பெறுமதிக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும், இலங்கை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கனேடிய பிரதமர் ஸ்டிபன் ஹாப்பர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் பேச்சுவார்த்தை தீர்மானம் எட்டப்படவில்லை.

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ளவர்கள் மற்றும் அதன்போது பேசப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த இயக்கத்தின் வடக்கு, கிழக்கு மீனவ இணைப்பாளர் அந்தோனி ஜேசுதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 12ஆம் திகதி சென்னையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டவர்கள் மீன்பிடி அமைச்சரின் சார்பானவர்களே என அன்தோனி ஜேசுதாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மதங்களுக்கிடையிலான நல்லிக்கத்தை ஏற்படுத்தும் அமைப்பு-

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் கண்காணிப்பு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனையடுத்தே இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிரதான மதங்ககிடையே நல்லிணக்கத்தை ஏற்டுத்தும் முகமாக இந்த செயற்றி;ட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எதிர்காலத்தில் அரச தரப்பினருடனும் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூறியுள்ளார்.

போலிக்கடவுச் சீட்டுகளுடன் பயணித்த இருவர் கைது-

போலி இந்திய கடவுச் சீட்டுகளை பயன்படுத்தி பூனேயிலிருந்து டுபாய் நோக்கி பயணிக்க முயன்ற இலங்கை பிரஜைகள் இருவர் நேற்று இந்திய பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இரண்டு வியட்னாம் பிரஜைகள் பூனே காவல்துறையினரை ஏமாற்றிய சார்ஜா நோக்கி பயணித்துள்ளனர். அவர்கள் தரையிறங்கிய பின்னர் கைதுசெய்யப்பட்டு மீண்டும் பூனேக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் கடந்த பல வருடங்களாக சென்னையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பெயர்களில் பயணித்த அவர்களின் கடவுச் சீட்டுகள் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டுவரை செல்லுபடியானவை என கூறப்படுகிறது.

தூக்கிலிடும் பணிக்கு துரித விண்ணப்பம்-

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிட்டு கொல்பவர் பதவிக்கான வி;ண்ணப்பங்களை மீளவும் துரிதமாக கோரவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அண்மையில் அளுகோசு பதவிக்காக நியமிக்கப்பட்டவர் தமது பணியை நிறைவேற்ற முடியாது என தெரிவித்து எழுத்து மூலம் அறிவித்து விட்டு விலகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுராதபுரம் நொச்சியாக பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இலங்கை இனப்படுகொலைக்கு இந்திய கடற்படையும் ஒரு காரணம் – யஷ்வந்த் சின்

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சியினை பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். சென்னை எழும்பூரில், மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான யஷ்வந்த சின்கா, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காந்திய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் யஷ்வந்த் சின்கா பேசும்போது, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கு துணை நின்றது காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான். அந்த இரு கட்சிகளுக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது பாவச்செயல். இலங்கை இனப்படுகொலைக்கு இந்திய கடற்படையும் ஒரு காரணம். பிரதமர் மன்மோகன் சிங் வெளியுறவுக் கொள்கையை பலவீனமாக கையாள்கிறார். மத்தியில் நிலையான ஆட்சியை கொண்டுவருவதன் மூலம், இலங்கையில் சமநிலையை கொண்டுவர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.