ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றியிருந்தால் ஜெனிவாவில் தப்பித்திருக்கலாம்-சந்திரிகா-

chandrikaநாட்டில் இருக்கின்ற மதஸ்தலங்களை பாதுகாக்கவேண்டும் என்பதுடன் ஜனநாயகத்திற்கான நெறிமுறைகளை பின்பற்றியிருந்தால் ஜெனீவாவில் இலங்கை தானாகவே பாதுகாக்கப்பட்டிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் ஜெனீவாவில், இலங்கையை காப்பாற்றுவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுப்பீர்களா என வினவினர். அதற்கு பதிலளித்த சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டு மக்களும், அரசாங்கமும் இலங்கையும் ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றியிருந்தால் இலங்கை தானாகவே ஜெனீவாவில் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்துமாறு கோரிக்கை-

meelkudiyetramபோரினால் இடம்பெயர்ந்து அல்லற்படும் பெண்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வின்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினம் கடந்த 8ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் இது தொடர்பான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட மீறல் குறித்து 665 முறைப்பாடுகள் பதிவு-

elections_secretariat_68மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தல் நடவடிக்கையின்போது தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 665 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடல், பேரணி மற்றம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறித்து அதிகளவான முறைப்பாடுகளாக 183 கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பாதாதைகளை காட்சிப்படுத்தல் குறித்து 148 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. தேர்தல் இடம்பெறவுள்ள மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகளாக 189 பதிவு செய்யப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் 91 முறைப்பாடுகளும் கம்பஹாவில் 78 முறைப்பாடுகளும் மாத்தறை மாவட்டத்தில் 113 முறைப்பாடுகளும் காலியில் 72 முறைப்பாடுகளும் ஹம்பாந்தோட்டையில் 71 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

துரிதகதியில் தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்மாணம்-

tholilnudpa kallooriயாழ்ப்பாண உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழக கல்லூரியின் நிர்மாணப்பணி தற்போது துரித கதியில் நடைபெற்றுவருகின்றது. நீர்ப்பாசனத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சு,இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் கல்விமுறையை தொழில்நுட்பவியல் புரட்சிக்கு இட்டுச் செல்லும் தொலைநோக்கிலே குறித்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதியுடன் சந்திரிகா சந்திப்பு-

untitledநாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை விரைவில் சந்திக்கவுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவகத்தின் பொறுப்பாளராக சந்திரிகா கடமையாற்றி வருகின்றார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான நிறுவனத்தின் கொள்கைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இச் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதான கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தும் பேச்சு நடத்தப்படும் என சந்திரிகா தெரிவித்துள்ளார். மூன்று மஹாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பு நடத்தவுள்ளேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கவனம்-அமைச்சர் ராஜித-

unnamed2சென்னையில் இடம்பெற்ற இலங்கை இந்திய மீனவர்கள் பேச்சில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு, இந்திய மீனவர்களால் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகிறது என கடற்றொழில் அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. இதுவரை இவ்வாறான 8 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இணக்கப்பாட்டை மீறும் வகையில், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 172 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை இந்திய மீனவர்களின் அடுத்த கட்டப் பேச்சு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பேச்சில் இரண்டு நாடுகளினதும் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் 17 பேரும், 8 அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தக் கலந்துரையாடலில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மனித புதைகுழி; எச்சங்களை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்ப உத்தரவு-

fமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் உள்ளிட்ட தடயப் பொருட்களை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் நேற்று இடம்பெற்றதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கமைய, வெகு விரைவில் மனித எச்சங்களை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். மேற்படி புதைகுழியில் கட்டம் கட்டமாக 32 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 80 மனித மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளின் இந்திய விஜயம்-

tnaதமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த வாரம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வார்கள் என்று அதன் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை தொடர்பில் இந்திய அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருந்தது. இதனடிப்படையில் இந்த வாரம் தமது உறுப்பினர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஊடகத்திற்கு கூறியுள்ளார்.

எல்எல்ஆர்சி நடைமுறைப்படுத்த வேண்டும் – ரணில்

ranil01தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேசத்திற்கு முகங்கொடுக்க எல்எல்ஆர்சி அறிக்கையினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.