நெல்லியடியில் எதிர்ப்புப் போராட்டம், மகஜரும் கையளிப்பு-
பெண்கள்மீதான பாலியல் வன்முறைகள், குற்றச் செயல்கள் மற்றும் மது பாவனைக்கு எதிராக யாழ். வடமராட்சி நெல்லியடி பஸ் நிலையத்தில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்றுகாலை 10.30மணிக்கு ஆரம்பமான போராட்டம் பேரணியாக நகர்ந்து கரவெட்டி பிரதேச செயலகத்தை சென்றடைந்ததுடன் பிரதேச செயலர் சிவசிறி அவர்களிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நீதி வேண்டும் நீதி வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை நிறுத்து, சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடு, பெண்கள் என்ன போதைப் பொருளா? என கோஷம் எழுப்பியதுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ச.சுகிர்தன், வே.சிவயோகன், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் க.மு.தம்பிராசா, மாகாணசபை வேட்பாளர் தர்மலிங்கம் மற்றும் மகளிர் அமைப்புக்கள், பொதுமக்கள் என பெருமளவிலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வலி மேற்கில் அபிவிருத்தித் திட்டங்கள்-
யாழ்ப்பாணம் வலி மேற்கில் மக்கள் பங்கேற்புடன் அபிவிருத்தித் திட்டங்கள் தயார் செய்யப்படுகின்றது. வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவு ரீதியாகவும் அம் மக்களது தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய செயல் திட்டங்கள் தொடாபாக வலி மேறகு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்களின் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர், கிராம சேவையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் துறைசார் வல்லுனர்களின் உதவியுடன் இச் செயல்திட்டம் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு பொதுமக்களும் தமது கருத்துக்களை முன்வைக்கக் கூடியவாறு இச்செயற் திட்டம் அறிமுகப்படுத்த்பபட்டுள்ளது. இவ்வாறு பொதுமக்கள் தமது கருத்துக்களை முன்வைத்ததன் பின்னர் முதன்மைத் திட்டத்தினை தெரிவுசெய்வதற்கு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு அதிகூடிய வாக்கை பெற்ற திட்டம் முதன்மைப்படுத்தப்படுகின்றது. கடந்த வாரம் ஆரம்பமாகிய இச் செயல் திட்டம் எதிர்வரும் 27ம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறுமென கூறப்படுகிறது.
மன்னாரில் 21இல் உண்ணாவிரதம்-
மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களும் இணைந்து இந்த உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மன்னாரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலும், மன்னார் மனித புதைகுழி தொடர்பிலும் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் ஆகியவற்றுக்கு நீதிவேண்டுமென கோரி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடுமையான பிரேரணையை நிறைவேற்ற ஒத்துழைப்பு கோரல்-
இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணை ஒன்றை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் பிரித்தானியா கோரியுள்ளது. இதனை பிரித்தானிய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் அவர் சமர்ப்பித்துள்ள எழுத்துமூல அறிக்கை ஒன்றில் இதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்த தீர்மானம் கைவிடப்படவில்லை. இதனை மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், மற்றும் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய திணைக்கள அமைச்சர்களும், அதிகாரிகளும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துக்கு நாடுகளுடன் பேச்சு நடத்துகின்றனர். இவ்வாறான மற்றுமொரு பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மன்னார் நகரசபையிடம் சர்ச்சைக்குரிய காணி கையளிப்பு-
மன்னார் சாவற்கட்டு 30 வீட்டுத் திட்டத்தின் முன்பாகவுள்ள காணி நேற்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மன்னார் நகர சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணிக்கான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுற்பகல் மன்னார் நகர சபையில் இடம்பெற்றது. இதன்போது தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மன்னார் முகாமையாளர் டி.யூட் செல்வராஜா குலாஸ் மன்னார் நகரசபை முதல்வர் எஸ். ஞானபிரகாசத்திடம் காணிக்காண ஆவணத்தினை வழங்கிவைத்தார். இதில் நகரசபையின் உபதலைவர் யோசுதாசன் ஜோம்ஸ் நகரசபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மற்றும் நகரசபையின் ஊழியர் எஸ்.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த அரச காணியை தனியார்கள் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, பின் மன்னார் நகரசபை மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக இக் காணி அபகரிப்பு முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரேரணைக்கு ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா மும்முரம்-
இலங்கைக்கு எதிரான தமது பிரேரணைக்கு ஆதரவை திரட்டிக் கொள்ளும் வகையிலான மற்றுமொரு கூட்டத்தை அமெரிக்க அரசாங்கம் ஜெனீவாவில் எதிர்வரும் 18ம் திகதி நடத்தவுள்ளது. அமெரிக்கா ராஜதந்திரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏழாம் திகதி அமெரிக்கா இவ்வாறான சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. இதில் பிரித்தானியா, மொரீஷியஸ் உள்ளிட்ட 30 நாடுகள் பங்கு பற்றி இருந்தன. இந்த நிலையில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மேலும் பல நாடுகள் பங்கேற்கும் என அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. இதேவேளை அமெரிக்கா ஜெனீவா மாநாட்டுக்கு சமாந்தரமாக நடத்துகின்ற இவ்வாறான தனிப்பட்ட கூட்டங்களுக்கு ஜெனீவாவில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மீனவர்களின் விடுதலையின் பின்பே இருதரப்பும் பேச்சுவார்த்தை-
இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையே எதிர்வரும் 25ஆம் திகதி இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இரு நாடுகளினதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்வதான உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் இந்தியா அதிக அக்கறைகாட்டி வருகின்றது. இலங்கை சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், இலங்கை – இந்திய மீனவப் பிரதிநிதிகளுக்கிடையே எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்பதாக இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மீனவர்கனை விடுதலை செய்வதற்கான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
தமிழக மாணவர்கள் உணவுத்தவிர்ப்பு போராட்டம்-
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் சுயாதீனமான பிரேரணை ஒன்றை முன்வைக்குமாறு இந்தியாவை வலியுறுத்தி தமிழகம் திருச்சி அரச கல்லூரி மாணவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். 12 மாணவர்கள் இவ்வாறு உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டிருப்பதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். இதேவேளை அவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கான கூடாரத்தை அமைக்க பொலீசார் தடை விதித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கூடாரமின்றி திறந்தவெளியில் தங்களின் போராட்டத்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
அலுகோசு பதவிக்கு அவுஸ்திரேலியர்கள் விண்ணப்பம்-
இலங்கையின் அலுகோசு பதவியில் தங்களை சேர்த்துக்கொள்ளுமாறு இரண்டு அவுஸ்திரேலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவரும் மின்னஞ்சல் மூலம் இதற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார். எனினும், அலுகோசு பதவிக்காக இதுவரை விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. ஏற்கனவே அலுகோசு பதவிக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டவர் பதவியை கைவிட்டுச் சென்றார். எனினும், குறித்த நபர் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்காக ஒருமாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எனினும் வெளிநாட்டவர் ஒருவரை இங்கு அலுகோசு பதவிக்கு நியமிக்க முடியாதென தெரிவிக்கப்படுகிறது.