யாழில் ஆயர்வேத வைத்தியசாலைகள் உட்பட மூன்று வைத்தியசாலைகள் திறந்துவைப்பு-

hospitals opened 13.03 (1) hospitals opened 13.03 (2)யாழ். தெல்லிப்பழையில் துர்க்காதேவி கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை நேற்றுக்காலை 11 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ப.கஜதீபன், வட மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் திருமதி. துரைரட்ணம், துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன், வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், திரு. திருமுகன் மற்றும் வைத்தியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதற்கு முன்பு நேற்றுக்காலை குரும்பசிட்டி ஆரம்ப வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது. இதேவேளை நேற்றுமாலை 2மணியளவில கொடிகாமம் ஆரம்ப வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் யாழ். குடாநாட்டில் குரும்பசிட்டி, தெல்லிப்பளை, கொடிகாமம் ஆகிய இடங்களில் மேற்படி மூன்று வைத்தியசாலைகளும் புதிதாக திறந்துவைக்கப்பட்டுள்ளன. இதன்படி தெல்லிப்பளை மற்றும் கொடிகாமம் பிரதேசங்களில் இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. குரும்பசிட்டி பிரதேசத்தில் சாதாரண ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் வைத்தியசாலை திறக்கப்பட்டுள்ளது.

க.மு தம்பிராசாவின் போராட்டம் ஒத்திவைப்பு, 27, 28இல் தொடரும்-

1வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசா அவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் 21ஆவது நாளான நேற்றுடன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி வெகுஜன போராட்டமாக ஆரம்பித்து 28ஆம் திகதிவரை நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்போராட்டம் தொடர்பில் க.மு. தம்பிராசா அவர்கள் தெரிவிக்கையில்,
எமது போராட்டத்தின் 20ஆவது நாளான நேற்று முன்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் ஹென்ரி மகேந்திரன் அவர்கள் வருகை தந்து போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இதன்போது இந்த வலிவடக்கு சம்பூர் கிராம மக்களின் துன்ப துயரங்களைத் துடைத்தெறிய, அவர்களை மீள்குடியேற்ற, தத்தமது சொந்தக் காணியில் அந்த மக்கள் குடியேறி சுதந்திர சுவாசத்தை அனுபவிக்க நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களால் இயன்ற அனைத்து செயற்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் மிகவும் வற்புறுத்திக் கூறினார். அது மட்டுமல்லாமல் தங்களுடைய தார்மீக ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்திச் சென்றிருந்தார்.
21ஆவது நாளான நேற்றையதினம் தையிட்டி கிராம முன்னேற்றச் சங்கத்தினர் மற்றும் வலிவடக்கு மீள்குடியேற்ற சங்க இணைச் செயலாளர் தனபாலசிங்கம், பொருளாளர் குலசேகரம் ஆகியோர் கலந்துகொண்டு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்தப் போராட்டத்தை ஒத்திவைக்கின்றோம்.
இந்தப் போராட்டத்தை வருகிற 27ஆம் திகதி முற்பகல் 10.30மணிக்கு வலி வடக்கிற்கு மிக அண்மையிலுள்ள ஒரு பிரதேசத்தில் வெகுஜன அமைப்புக்களின் ஆதரவுடன் ஆரம்பித்து 28ஆம் திகதி யாழ். மாவட்ட அனைத்து மக்களும் தங்களுடைய அனைத்துக் காரியங்களையும் பகிஸ்கரித்து வலிவடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான போராட்டத்தில் பங்குகொண்டு, அதையொரு கறுப்புநாளாக வெளிக்காட்டி, யாழ் மாவட்ட மக்கள் அனைவரும் சேர்ந்து பங்குபற்றிய ஒரு போராட்டமாக முன்னெடுப்பதற்காக ஒத்திவைத்திருக்கின்றோம் என்றார்.