கிளிநொச்சி விவகாரம் தலையிடுமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை – கூட்டமைப்பு  

2014 மார்ச் 13 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரியில் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற விதவைப் பெண் மற்றும் விபூசிக்கா என்ற அவருடைய 13 வயதேயான மகளை கைது செய்தமைக்கு எதிராகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பலத்த எதிர்ப்பை தெரிவிக்கின்றது. என்பதுடன் இந்த விவகாரத்தில் சர்வதேசம் தலையிடவேண்டும் என்றும் கோரியுள்ளது. இது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜெயக்குமாரியின் வீட்டுப் புறத்தில் இருந்து துப்பாக்கி வேட்டு சப்தங்கள் கேட்டதாகவும், அதைத்தொடர்ந்து ஒரு பொலிஸ்காரருக்கு குண்டடி பட்டு காயம் ஏற்பட்டதாகவும், ஜெயக்குமாரியின் வீட்டிட்குள்ளேயே துப்பாக்கி சூடு நடத்திய நபர் அல்லது நபர்கள் பதுங்கி இருப்பதாக தமக்கு தென்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.  பொதுவாக வட மாகாணத்தில், காணாமல் போனோரின் குடும்பத்தார் நடத்தும் கவன ஈர்ப்பு  போராட்டங்கள் அனைத்திலும் ஜெயக்குமாரி பங்கேற்பதுண்டு. இதற்கான காரணம், அவருக்கு இருந்த மூன்று ஆண் மக்களில் இருவர் யுத்தத்தில் மாண்டு போனதன் பின், யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட 2009 மே மாதத்தில் எஞ்சியிருந்த தன்னுடைய மூன்றாவது மகனை ஜெயக்குமாரி பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தாலும், அதன் பின் அந்த மகனை பற்றிய எந்த தகவலும் ஜெயக்குமாரிக்கு இன்றளவிலும் கிடைக்கவில்லை என்பதேயாகும். அநேகமாக ஜெயக்குமாரிக்கு தற்போது உயிரோடு எஞ்சியிருக்கும் ஒரே பிள்ளை அவருடன் கைது செய்யப்பட டுள்ள மகள் விபூசிக்காவாகவே இருக்கலாம். சுமார் 700 பேர் கொண்ட பட்டாளம் ஒன்று கடந்த நாள் மாலை ஜெயக்குமாரியின் வீட்டை முற்றுகையிட்டது. அதன் பின் அவருடைய கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றிய அதிகாரிகள் சுமார் நான்கு மணி நேரம் ஜெயக்குமாரியிடம் கேள்விகளை கேட்டதன் பின் அவரையும் அவருடைய மகள் சிறுமி விபூசிக்காவையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். பிறகு விதவைத் தாயும் அவருடைய சேயும் வவுனியாவில் உள்ள ஒரு முகாமில் நேற்று இரவு முழுவதும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பொதுவாக மறுநாள், அதாவது 14 மார்ச் தாயும் சிறுமியும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்றே நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கவலை கொண்ட பொது மக்கள் பலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஆர். சரவணபவன் இருவரும் நாள் முழுவதும் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் மாலை மூன்று மணியான பின்பும் ஜெயக்குமாரியையோ அவருடைய மகளையோ எவரும் நீதிமன்றத்திற்கு  அழைத்து வரவில்லை. பிறகு கிடைத்த தகவலின் படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவுரைப் படி பயங்;கரவாத தடுப்புச் சட்டம் எனும் கெடூரமான சட்டத்தின் கீழ் ஜெயக்குமாரியையும் அவருடைய மகள் சிறுமி விபூசிக்காவையும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. கைது செய்யப்படும் ஒரு சந்தேக நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்ற நியதியை மீறும் அதிகாரத்தை பயங்கரவாத தடுப்புச் சட்டம் தருகின்றது. ஜெயக்குமாரி மற்றும் அவருடைய மகள் விடயத்தில் அதிகாரிகள் நடந்து கொண்டுள்ள இரக்கமற்ற விதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தந்துள்ளது. அரசின் செயற்பாடுகள் ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் கடும் விமர்சனத்திற்கு இலக்காகி வரும் இந்நாட்களில் கூட அரசு துணிச்சலாக ஒரு தாயும் சேயும் விடயத்தில் நடந்து கொண்டுள்ள கொடூரமான விதத்தை பார்க்கும் போது, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை தாம் சிறிதளவேனும்பொருட்படுத்துவதில்லை என்பதை மறைமுகமாக அரசு கூறுவதாகவே கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறிருந்த போதிலும், ஜெயக்குமாரியையும் அவருடைய மகள் விபூசிக்காவையும் உடனடியாக  நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவர்களை விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் தமிழ் பெண்கள் விடயத்தில் அதிகரித்து வரும் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை கருத்தில் கொள்ளும் போது ஒரு இளம் விதவையும் அவருடைய இளம் வயது மகளும் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அவர்களுடைய உயிர் மற்றும் மானத்திற்கு பங்கம் ஏற்படக் கூடிய நிலையை உருவாக்கி விடுமோ என தமிழத் தேசியக் கூட்டமைப்பு கவலை கொள்கின்றது.

ஆகையால், ஜெயக்குமாரிவையும் விபூசிக்கா சிறுமியையும் காப்பாற்றுவதற்காக சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சர்வதேச சமூகத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

அரசுக்கு புலிகளை உயிர்ப்பிக்க வேண்டியுள்ளது- சிவசக்தி ஆனந்தன்

தெற்கில் அரசியல் செய்வதற்கு அரசு விடுதலைப்புலிகளை உயிர்ப்பிக்க வேண்டிய தேவையுள்ளது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பா. ஜெயக்குமாரியை விடுதலை செய்யக்கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாறறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்- இந் நேரத்தில் ஜெயக்குமாரியின் குடும்ப நிலையை சொல்லவேண்டிய தேவையுள்ளது. அவருடைய கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார். அவருடைய இன்னுமோர் மகன் இந்த போராட்டத்தில் வீரச்சாவு அடைந்துள்ளார். அதேபோல் இன்னொரு மகன் முள்ளிவாய்க்கால் போரில் செல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந் நேரத்திலேயே அவருடைய மூன்றாவது மகன் இடம்பெயர்ந்து வவுனியா முகமில் தங்கியிரு;த நேரத்தில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார். அந்த வகையில் ஜெயக்குமாரியின் மூன்று பிள்ளைகள் இன்று இல்லாமல் போயிருக்கின்றார்கள். இந்த வேளையிலேயே தனது 13 வயதான விபூசிகாவின் படிப்பு மற்றும் பொருளாதாரத்திற்காக ஜெயக்குமாரி நாளாந்தம் தினக்கூலி வேலை செய்தே காப்பாற்றி வந்துள்ளார். எனவே ஜனநாயக ரீதியான போராட்டத்தை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரியின் விடுதலைக்கு குரல் கொடுக்கவேண்டும் என நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த நிலையிலேயே காணாமல் போன மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஜெயக்குமாரியும் அவருடைய மகளும் போராட்டங்களில் பங்கு பற்றியிருந்ததன் அடிப்படையில் ஊடகங்களில் முக்கியமான இடம்பிடித்திருந்தமையினால் தற்சமயம் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமை தொடுர்பான கூட்டத்தொடரிலே ஜெயக்குமாரியோ அல்லது அவருடைய மகளோ சாட்சியமளித்து விடக்கூடாது என்பதற்காக மிக திட்டமிட்டு இந்த கைது இடம்பெற்றுள்ளது. இந்த கைதுக்கு பல காரணங்கள் சொல்லபப்டுகின்றது. ஆனால் இந்த காரணங்கள் இன்றைக்கு உண்மையை மறைக்கும் விதத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களாககவுள்ளது. இந்த ஜெனீவா கூட்டத்தொடரில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் ஆயுதங்கள் வைத்தீரக்கின்றார்கள் அல்லது பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுகின்றது என பல புனைகதைகளை கூறி இன்று சோடிக்கப்படுகின்றது. இன்று யுத்தம் முடிந்து 5 வருடம் கடந்துள்ள நிலையில் எந்தவொரு இடத்திலும் துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை. அல்லது குண்டுத்தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த சம்பவம் கூட திட்டமிட்டு சோடிக்கப்படும் கதையே ஆகும். ஆகவே மீண்டும் இந்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளையும் ஆயதபோராட்டத்தையும் வலிந்து இழுக்கும் தேவையுள்ளது. அதற்கு காரணம் தெற்கில் அவர்களின் அரசியலை முன்னெடுத்து செல்வதற்கு வடக்கிலும் கிழக்கிலும் இந்த ஆயத போராட்டத்தை உயிர்ப்பிக்க வேண்டிய தேவை இந்த அரசுக்கு உள்ளது. ஆகவே இந்த திட்டமிட்ட கைதுகள் கண்டிக்கப்படுவதோடு ஜெயக்குமாரி விடுதலை செய்யப்படவேண்டும். அத்தோடு அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என தெரிவித்தார்

துடுப்பாட்டப் போட்டி நிகழ்வில் கைகலப்பு- ஒருவர் பலி

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி இன்று சனிக்கிழமை (15) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்நெல் மைதானத்தில் நடைபெற்றுகொண்டிருந்த போது ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இரண்டு கல்லூரிகளின் பழைய மாணவர்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனையடுத்தே கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில்  புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரியின் பழைய மாணவனான செட்டியார்தெரு யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த ஜெயரட்னம் தர்ஷன் அமல்ராஜ்(வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.