தாய் ஜெயக்குமாரி பூஸாவில், மகள் நன்னடத்தை நிலையத்தில்- நீதிமன்றத்தீர்ப்பு

missing_peopleகிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் வியாழனன்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதுடைய மகளும் வெள்ளியிரவு கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். தாயாராகிய ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு மேல் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவருடைய 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது அந்த நபர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததையடுத்து, அந்த உத்தியோகத்தர் காயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேடப்பட்டுவரும் குற்றவாளி ஒருவரைத் தமது வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பதற்காகவே, விஜயக்குமாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற சம்பவத்திற்கும், இந்தப் பெண்களுக்கும் சம்பந்தமில்லை. காணமல் போயுள்ள தனது மகனுடைய விடுதலைக்காகப் போராட்டம் நடத்தியமைக்காகவே இந்தப் பெண்ணும் அவருடைய மகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  கிளிநொச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும், முறைப்படி யாழ் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், வவுனியா சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றமற்ற அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமாரி பாலேந்திரனின் விடுதலை கோரி கவனயீர்ப்பு போராட்டம்- வவுனியா

11(966)18(141)jeyakumari_protestகிளிநொச்சி தர்மபுரம் இந்திய வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பாலேந்திரன் ஜெயக்குமாரி, பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூஸா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயகுமாரியின் மகள் விபுசிகா பாலேந்திரன் சிறார் நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டிருந்தார். இவர்கள் கைதைக் கண்டித்தும் ஜெயக்குமாரியையும், மகளையும் விடுதலை செய்யக் கோரியும்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியோரது ஏற்பாட்டில் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடந்துள்ளது. வடமாகாண சபை அமைச்சர்களும், உறுப்பினர்களும், கட்சிப் பிரமுகர்களும், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சட்ட விரோத கைதுகளை நிறுத்தக் கோரியும், இராணுவத்தினரை வடக்கிலிருந்து வெளியேறச்சொல்லியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் பல்வேறு சுலோகங்களை கையிலே தாங்கியிருந்தனர்

ஆறு மாதங்களுக்கு முன் காணமல் போனவர் உருக்குலைந்த சடலமாக மீட்பு

 imagesCA1ABWOEஆறு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியாவில் இருந்து சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் கோப்பாய்க்குச் சென்றபோது  விஞ்ஞான ஆசிரியராகிய கார்த்திகேசன் நிருபன் காணாமல்போயிருந்தார். மாங்குளம் பிரதேச மாதர் சங்கம் ஒன்றிற்கு அலுவலகம் அமைப்பதற்காக ஏ9 வீதியோரத்தில் ஒதுக்கப்பட்டிருந்த காடு அடர்ந்த காணித் துண்டு ஒன்றை கடந்த புதன்கிழமை துப்பரவு செய்தபோது, பற்றைக்குள் சிதறிய நிலையில் மண்டையோடு உட்பட்ட மனித எச்சங்களும், கைத்தொலைபேசியொன்று, குறிப்புப் புத்தகம், உள்ளிட்ட சில முக்கிய தடயப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பொருட்களில் இருந்து இறந்தவர் தனது சகோதரன் என்று நிருபனின் சகோதரி அடையாளம் காட்டியிருந்தார். குடும்பத்தினரும், ஆசிரியர் சங்கத்தினரும் அழுத்தம் தந்தும்கூட காவல்துறையினர் இதுவரை சரியான விசாரணைகளை நடத்தியிருக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சுமத்தினார். ‘மாங்குளத்தில் மீட்கப்பட்டுள்ள மனித சடல எச்சங்களும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்தப் பரிசோதனையின் முடிவு வரும் வரையில் மரணம் என்ன காரணத்தினால் ஏற்பட்டது என்பதைக் கூறுவது கடினம். எனினும் எங்களுக்குக் கிடைத்துள்ள தடயங்கள், தகவல்களின் அடிப்படையில் நாங்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றோம்’ என காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை

fishermen_exchangeஇலங்கையின் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மீன் பிடிப்பதற்காக வருகின்ற மீனவர்களை விட, அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர்களே இந்த அத்துமீறலுக்கு முக்கிய பொறுப்பு என்றும், அதனால், கைதுசெய்யப்படுகின்ற மீனவர்கள் சிறைகளில் தடுத்து வைத்து பின்னர் குறிப்பிட்ட காலத்தில் விடுதலை செய்கின்ற வேளையில், அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளைப் பறிமுதல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இருநாட்டு மீனவர்களுக்கிடையில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக, இலங்கை அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காகவே நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அந்த அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். 25ஆம் திகதி நடைபெறவுள்ள மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின்போது தாம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை குறித்து இந்திய தரப்பினருக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாக்கு நீரிணை கடற்பரப்பில் மீன்பிடிப்பது தொடர்பில் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் தொடர்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இருநாட்டு மீனவர்களுக்கிடையில் இந்தியாவில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுக்களையடுத்து, இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் இம்மாதம் 13 ஆம் திகதி நடபெறும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது,

ஆயினும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நிபந்தனை விதித்திருந்தார். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு முதல்நாள், 116 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், இந்திய தரப்பினர் குறித்த திகதியில் பேச்சுக்களில் கலந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்து, வேறு ஒரு திகதிக்கு பேச்சுக்களை ஒத்தி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் 25 ஆம் திகதி இந்தப் பேச்சுக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.