போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து தாக்குதல்

ctb busயாழிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது மடத்தடியில் வைத்து இன்று காலை வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டதில், அதில் பயணம் செய்த பெண் மற்றும் குழந்தை ஆகியோர் காயமடைந்ததுடன், பேருந்தின் முன்பக்க கண்ணாடிகளும் முற்றாகச் சேதமடைந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான பேருந்து, பேருந்து நிலையத்தில் தரித்து நின்றவேளை அங்கு வந்த சிலர் பேருந்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டுவதற்கு முயன்றுள்ளனர். அதனை சாரதியும், நடத்துனரும் மறுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி பேருந்து மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இலங்கையை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது- இரா.சம்பந்தன்

sampanthanஇலங்கையை தண்டிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில முக்கியமாக ஆற்றப்படவிருந்த கடமைகளை இலங்கை அரசாங்கம் இதுவரையில் முன்னெடுக்கத் தவறியுள்ளமையை சுட்டிக்காட்டுவதே நோக்கம். இலங்கை அரசாங்கம் வலுவான, ஸ்திரமான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமாக கருதப்பட்ட போதிலும், பிழையான பாதையில் செல்வதே வருத்தமளிக்கின்றது. தேசிய பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். வட மாகாண ஆளுனரின் மீது தனிப்பட்ட குரோதங்கள் எதுவும் கிடையாது .எனினும், இராணுவ அதிகாரியொருவர் அதுவும் அரசாங்கத்திற்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஒருவரை ஆளுனராக நியமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் பல்வேறு பொதுமக்கள் விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகதவும். மாகாணசபை முறைமை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என த.தே.கூ நாடாளுமன்ற குழு தலைவர் இரா. சும்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்

மழை வேண்டி மட்டக்களப்பில் பிரார்த்தனை

batticaloaஇலங்கையில் இந்த ஆண்டுக்கான பருவமழை குறைந்ததன் காரணமாக குளங்கள் மற்றும் ஆறுகளை நம்பிப் பயிரிடும் சிறுபோக நெல் வேளாண்மைச் செய்கை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலையும் வெளியிட்டுள்ளார்கள். பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பெய்யவேண்டிய பருவமழை இன்னமும் பெய்யாத நிலையில் அநேகமான பிரதேசங்களில் வரட்சி நிலை காணப்படுகின்றது. மழை இல்லாத நிலையில் விவசாய நீர்ப்பாசனக் குளங்களிலும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்டமும் குறைந்து வருகின்றது. நாட்டின் தற்போதைய வரட்சி நிலையை நீக்க அரசாங்கத்தின் வேண்டுகோளின்பேரில் மழை வேண்டி பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான பருவமழைக் குறைவு காரணமாக சிறுபோக நெல் வேளாண்மைச் செய்கையை மட்டுப்படுத்துமாறு நீர்ப்பாசன இலாகாவினால் விவசாயிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தங்களது வேளாண்மைச் செய்கையில் விதிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் சிறுபோகச் செய்கைக்கு அடையாளம் காணப்பட்டுள்ள 60, 000 ஏக்கரில் இந்த ஆண்டு 17, 500 ஏக்கரில் மாத்திரம் நெற் பயிரிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் சேவைகள் உதவி ஆணையாளர் என். சிவலிங்கம். நகைக்கடை உரிமையாளர் ஒருவரை அவர் பயணித்துக்கொண்டிருந்த காருடனேயே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று காரையும் பணத்தையும் கொள்ளையிட்டுவிட்டு காட்டில் இறக்கிவிட்ட சம்பவமொன்று வாகரை, புல்லாவி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நகைக்கடை உரிமையாளரை கடத்தி கொள்ளை

imagesCAOTQVDZதிருகோணமலையில் இருந்து நேற்று ஞாயிற்றக்கிழமை மட்டக்களப்பு நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருந்த நகைக்கடை உரிமையாளர் உட்பட இருவர், வாகரை, புல்லாவி பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத இரு சந்தேகநபர்களால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். வாகரை, காயங்கேணி பாலத்திற்கு அருகில் மலசலம் கழிப்பதற்காக காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பற்றைக்கு சென்றபோதே அங்கு வந்த சந்தேகநபர்கள் இருவரும் இவர்கள் இருவருக்கும் துப்பாக்கியை காட்;டி அச்சுறுத்தியுள்ளதுடன் இருவரின் கைகளை பின்புறமாக கயிற்றால்கட்டி காருடன் புல்லாவி பிரதேச காட்டிற்குள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட கார் காட்டின் உட்பகுதிக்குச் சென்றதும் அங்கு வேறு நான்குபேர் கடத்தல்காரருடன் இணைந்துள்ளனர். பின்னர் இன்று திங்கட்கிழமை காலை நகைக்கடை உரிமையாளரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கைதொலைபேசி என்பற்றுடன் காரையும் கொள்ளையிட்டுவிட்டு  இருவரையும் காட்டில் விட்டுச்சென்றுள்ளனர். இது தொடர்பில் நகைக்கடை உரிமையாளரால் 119 பொலிஸ் அவசர சேவைக்கு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கடத்தப்பட்ட காரை, வாகரை கஜயுவத்தை கடற்படைமுகாமிற்கு அருகாமையில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் விசாரணைக்காக கொழும்பில்

imagesCA5PZGM2கிளிநொச்சியில் தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்ற தாயாரும், அவருடைய 14 வயதுடைய மகளும் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாகவே மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாகிய ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற மனித உரிமைகள் ஆவண மையத்தின் ஆலோசகராகிய ருக்கி பெர்னாண்டோ, யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் பணிப்பாளராகிய அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகிய இருவரும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டபோது தர்மபுரம் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இவர்கள் தகவல்களைத் திரட்டச் சென்றிருந்த வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ‘காணாமல் போயுள்ளவர்களுக்காக அவர்களது உறவுகள் போராடினால் கடத்தப்படலாம் அல்லது கைதுசெய்யப்படலாம். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் செயற்பட்டாலும் அவர்களும் கைதுசெய்யப்படலாம் அல்லது காணாமல் போகச் செய்யப்படலாம் என்பதை வெளிப்படுத்துவதாகவே கிளிநொச்சியில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் அமைந்திருக்கின்றன.இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கோரியிருக்கின்றது.