ஊர்காவற்துறையில் சர்வதேச நீர் தினம் அனுஷ்டிப்பு-



சர்வதேச நீர் தினம் யாழ். ஊர்காவற்துறை பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்டன் யோகநாதன் அவர்களின் தலைமையில் 21.03.2014 இன்று நடைபெற்றது இந் நிகழ்சியில் வளவாளர்களாக வைத்தியக் கலாநிதி சிவராஜா மற்றும் யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந் நிகழ்வில் பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்டன் யோகநாதன் அவர்கள் உரையாற்றும்போது, தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேசம் மிக கடுமையான நீர் பற்றாக்குறையை தற்சமயம் எதிர்கொண்டிருப்பதாகவும், இவ்வாறான நிலையில் வருடந் தோறும் இப்பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வைப் பெற சமுக ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந் நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச சபை செயலாளர், பொது சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விசாரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்காது-
ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று கோரப்பட்டால், அதற்கு அவுஸ்திரேலியா பெரும்பாலும் ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப்பை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு விடயங்களில் சிறந்த முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அவசியமில்லை. எனவே சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் அமெரிக்க பிரேரணையின் இறுதிவடிவத்தை கண்ட பின்னரே இது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்குமென ஊடகத் தகவல்-
அமெரிக்காவினால் இலங்கை அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இந்த முறையும் இந்தியா ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்கி அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த கடந்த ஐந்து வருடங்களாக இனப்பிரச்சினை தீர்வு குறித்து இந்திய அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக 13ம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்களை இந்திய அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகின்றபோதும், இன்னும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. பிரேரணையில் இலங்கையின் சிறுபான்மை மக்கள் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரேரணையின் நான்காம் சரத்தில், இலங்கையில் சிறுபான்மை மக்களின் கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள்மீதான தாக்குதல்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலும் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில் இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டு, இம்முறையும் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவளிக்க இந்தியா தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முதலாவது சிறைச்சாலைகள் பாடசாலை திறந்து வைப்பு-
இலங்கையின் முதலாவது சிறைச்சாலைகள் பாடசாலை இன்று ஹோமாகம வட்டரெக்க பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் தோற்றாத கைதிகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இந்த பாடசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரத்ன பள்ளேகம தெரிவித்துள்ளார். 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட கைதிகளுக்கு முறையான கல்வியை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறைகைதிகளுக்கான இந்த பிரத்தியேக பாடசாலையில் 4 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.
தேர்தல் தொடர்பில் 900 முறைப்பாடுகள் பதிவு-
மாகாண சபைத் தேர்தல் சட்டமீறல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். தமது அமைப்பிற்கு இதுவரை சுமார் 900 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சட்டவிரோத தேர்தல் பிரசாரம் மற்றும் அரச வளங்கள் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 614 சம்பவங்கள் தம்மிடம் பதிவாகியுள்ளதாக பவ்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மஹிந்த சமரசிங்க முஸ்லிம் நாடுகளுக்கு விளக்கமளிப்பு-
மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி அமைச்சர் மகிந்தசமரசிங்க ஜெனீவாவில் வைத்து, முஸ்லிம் நாடுகளின் ஒழுங்கமைப்புக்கு, இலங்கை தற்போதைய சூழ்நிலை தொடர்பில் விளக்கமளித்துள்ளார். ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் உள்ள பெலேய்ஸ் டெஸ் நேசன் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மனித உரிமைகள் விடயங்களில் இதுவரையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அவரால் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் இலங்கை நீண்டகாலமாக பல்லின சமூகமாக இருப்பதாகவும், இங்கு மதங்களுக்கு இடையிலான பிரிவினைகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ புனிதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஐ.டியினால் ஒருவர் கைது-
பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் யாழ். வடமராட்சி கரணைவாய் வடக்கைச் சேர்ந்த துரைராஜா ஜெயக்குமார் என்பவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம், முசிலம்பிட்டி இந்திய வீட்டுத் திட்டப்பகுதியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறித்த நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபர் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு அவர்மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்பிராந்தியத்தினுள் நுழைய சீனாவுக்கு இந்தியா மறுப்பு-
காணாமல் போன மலேசிய வானூர்தியை தேடும் பணிக்காக சீன கடற்படைக்கு இந்திய கடற்பிராந்தியத்தில் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் சீன கடற்படையின் 4 கப்பல்களும் விடுத்த கோரிக்கையயை இந்தியா நிராகரித்துள்ளது இந்திய பாதுகாப்பு தரப்பின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, காணாமல்போன மலேசியா விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் பொருட்களை தேடும் பணிகள் 2ஆவது நாளாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து இராணுவ விமானங்களிலும் ஒரு சிவில் விமானமும் இத்தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 239பேருடன் கடந்த 8ம் திகதி இந்த விமானம் காணாமல் போனது. இதனை இந்து சமுத்திரத்தின் பல பகுதிகளில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. Read more