மன்னாரில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம்-
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று மன்னார் பொதுவிளையாட்டரங்கு மைதானத்தில் இன்றுமுற்பகல் 10மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்கள், துன்பங்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்படும் மோசடிகள், மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமை, இந்திய வீட்டுத் திட்டத்தில் மீள்குடியேற்ற கிராமங்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்படுகின்றமை, நில அபகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும், மனிதப் படுகொலைகளுக்கு பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும், காணாமற் போனோரை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டும்; என வலியுறுத்தியும் இந்த அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோதரராரலிங்கம், சிவசக்தி ஆனந்தன், அரியநேந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், குருகுலராஜா, பா.டெனிஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மதகுருமார், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் எனப் பலரும் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.