உறுப்பு நாடுகளே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கும் – ஐ.நா-
ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பில், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்கும் என ஐ.நா சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் நேற்றைய நாளாந்த செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்கும். ஏற்கனயே சட்டத்தரணி யாசீம் சூகா தயாரித்து வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா சபை உள்ளக ஆய்வினை மேற்கொண்டிருந்தது. எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறும் நிலையிலிருந்து விலக முடியாது என்ற நிலைப்பாட்டில் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் உறுதியாக இருக்கிறார் என ஐ.நா சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பிரேரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை-
இம்முறை அமெரிக்கா முன்வைக்கவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்கவில்லை என்றால், அது மனித உரிமைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய துரோகமாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரிஹனன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை கோரும் பிரேரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்காது என்று, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் தெரிவித்திருந்தார். அத்துடன் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு எதிராகவும், அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை பிரித்தானிய மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டிருந்தது. இதனையடுத்தே லி ரிஹனன் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது-
வவுனியா சிறீராமபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான இவர்கள் கடந்த சில வருடங்களாக வவுனியாவில் வசித்துவந்தனர். வட மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் தேடுதல்களையும் சுற்றிவளைப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா நகர்ப்பகுதியில் லோகநாதன் என்ற குடும்பஸ்தர் நேற்றிரவு 7 மணியளவில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் புலனாய்வு பிரிவினரால் நேற்றிரவு சிறீராமபுரம் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது லோகநாதனின் மனைவியான லோ. மங்கலேஸ்வரி, அவர்களது மகன்களான லோ. பாரதி கண்ணன் (வயது 8) மற்றும் லோ. கண்ணன் (வயது 6) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் மன்னாரில் கைது-
மன்னார் வங்காலைப்பாடு பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடற்படையினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வங்காலைப்பாட்டில் கடல் தொழிலில் ஈடுபட்டுவரும் இவர் சிறுத்தோப்பு கிராமத்தில் தங்கி இருந்தவேளை கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வடமாகாணம் எங்கும் பெருவாரியாக சோதனைகளும், தேடுதல்களும் இடம்பெற்றும் வரும்நிலையில், கிளிநொச்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் என்ற காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த இளைஞர் விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவரை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலீசார் கூறியுள்ளனர்.
வட்டுக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு மக்கள் பதற்றம்-
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் சுமார் 500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இன்று காலைமுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காலை 5 மணிமுதல் இராணுவத்தினர் மாவடி, சங்கரத்தை, வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களை சுற்றிவளைத்துள்ளனர். இப் பிரதேசத்திலிருந்து யாரும் வெளியே செல்லக் கூடாதென்றும், அதே போன்று யாரும் உள்ளே வரக்கூடாதென்றும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதன்போது பிரதேசத்திலுள்ள வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிரதேசத்தின் இளைஞர்கள் 300 பேருக்கும் அதிகமானோர் அரசடி மைதானத்திற்கு அழைத்துச்சென்று இராணுவ அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இளைஞன் ஒருவரின் புகைப்படத்தை வைத்திருந்த இராணுவத்தினர், அந்நபர் கிளிநொச்சியிலிருந்து தப்பிவந்தவர் எனவும், வட்டுக்கோட்டை பிரதேசத்தில் மறைந்திருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது எனவும் கூறியுள்ளனர். அந்த நபரை தேடியே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சுற்றிவளைப்பின்போது 25ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைதி காக்கும் படையினர் குறித்தும் முறைபாடு பதிவு-
இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக கிழக்கு மாகாணத்திலும் மூன்று முறைபாடுகள் பதிவாகியிருப்பதாக, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் எச்.டபிள்யு.குணதாசவை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மடக்களப்பில் தற்போது விசாரணை நடத்தி வரும் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, செங்கலடியில் விசாரணை மேற்கொண்டபோது, இந்த முறைபாடுகள் பதிவாகியுள்ளன. இதன்போது 250 புதிய முறைபாடுகள் கிடைத்தாகவும், அவற்றில் மூன்று முறைபாடுகள் இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆணைக்குழு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் விசாரணை நடத்தியபோதும் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிரான முறைப்பாடு பதிவாகியிருந்தது. எனினும் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசாரணைக்கான காலகட்டத்தினுள், இந்திய அமைதிகாக்கும் படையினரின் விடயம் உள்ளடங்காத நிலையில், இம்முறைபாடுகள் தொடர்பில் தம்மால் ஏதும் செய்ய முடியாது என ஜனாதிபதி ஆணைக்குழு முன்னதாகவே அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 108பேர் கைது-
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் இதுவரை கிடைத்துள்ள முறைபாடுகளுக்கமைய 108பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த இரு மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் 115 முறைபாடுகள் பொலிஸாருக்குப் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலேயே இக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 34 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவற்றுள் மூன்று அரச வாகனங்களாகும். தேர்தல் தொடர்பான சட்டங்கள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பின்வாங்கப் போவதில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, மாகாண சபை தேர்தலுடன் தொடர்புடைய 20 மனித உரிமைமீறல் சம்பவங்கள் தம்மிடம் பதிவாகியுள்ளதாகவும்,. தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்துவதற்கு இடமளிக்காமை மற்றும் விளையாட்டு மைதானங்களை ஒதுக்கிக் கொடுக்காமை போன்ற காரணிகள் தொடர்பில் இந்த முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பிரதிபா மகாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்-ஹெல உறுமய-
தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டியது அவசியம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்யாததன் காரணமாகவே, இன்று மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் அனைத்து வரப்பிரசாதங்களையும் பயன்படுத்தி இந்த தமிழ் பிரிவினைவாத நாசி வாதிகள் மீண்டும் எழுச்சி பெற முயற்சிக்கின்றனர். புலிகளின் பல தலைவர்கள் இன்று சர்வதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் நிஷாந்த சிறி வர்ணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் -ரணில் விக்கிரமசிங்க-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் சர்வதேச நாடுகளுக்கு பதில் கூறமுடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க எதிர்க்கட்சி தயாராகவுள்ளது. எனினும், இதற்கு முன்னதாக அரசாங்கம் தமது பங்கை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அமெரிக்கா கூறுவதை கேட்க வேண்டும் என்றோ அல்லது பிரித்தானியாவின் பிரதம மந்திரி டேவிட் கெமொரோன் கூறுவதை கேட்க வேண்டும் என்றோ தாம் கூறவில்லை. எனினும், இந்நாட்டு மக்கள் கூறுகின்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்போது அமெரிக்காவோ, அல்லது வேறு எந்த நாடுகளோ குற்றங்களை சுமத்த முடியாது. இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் 17வது அரசியல் யாப்பு திருத்தத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்போது, எதிர்கட்சியான நாம், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமன்றி, ஏனைய எதிர்க்கட்சிகளும் அரசசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரமுடியும். இதன்போது எட்டப்படும் இணக்கத்தை சர்வதேசத்திற்கு கொண்டு சென்று அங்கு இலங்கையுடன், இணக்கத்துடன் இணைந்து செயல்படுமாறும் கோர முடியும் என்றார் அவர்.