ஜ. நா. நவநீதம்பிள்ளை, இலங்கை ஜனாதிபதிக்கு த.வி.கூ. ஆனந்தசங்கரி கடிதம்-
ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர், நவநீதம்பிள்ளை மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம், திரு. வீ.ஆனந்தசங்கரி தனித்தனியாக இரண்டு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார். நவநீதம்பிள்ளைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவின் தீர்மானம் – திருத்தத்துக்கான வேண்டுகோள் ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அழைக்கப்படும் அணியில் ஒரு கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக நான் செயற்படுகின்றேன். ஆனால் தமிழ் மக்கள் சம்பந்தமான எந்த விடயத்திலும் என்னுடன் கலந்தாலோசிக்காமல் அரசியலில் அனுபவமற்ற சிலருடன் இணைந்து சிலர் மட்டும் தனித்து தீர்மானித்து செயற்படுகின்றனர்.
நான் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் – பாராளுமன்ற உறுப்பினராக ஏறக்குறைய 17 ஆண்டுகள் எதிர்க்கட்சியில் இருந்து செயற்பட்டேன். 2006ஆம் ஆண்டுக்குரிய பொறுமையையும் அகிம்சையையும் முன்னெடுக்க வழங்கப்படும் யுனெஸ்கோவின் மதன் ஜீத் சிங் விருதைப் பெற நான் தெரிவு செய்யப்பட்டேன். புலம்பெயர்ந்த சிலரின் வழிகாட்டலிலேயே இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த நான் அமெரிக்க நெறிப்படுத்தலில் வரஇருக்கும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட முன்பு சில விடயங்களைத் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
1. எனது நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்டு அமெரிக்கத் தீர்மானத்தின் 8ஆம் பிரிவில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் இருதரப்பினரில் ஒரு தரப்பினராகிய விடுதலைப் புலிகளை எத்தகைய விசாரணைக்கும் உட்படுத்தக் கூடாதெனவும் கருதுகிறேன். அது ஓர் சட்டவிரோதமான இயக்கம் மட்டுமல்ல அவர்களின் செயற்பாடுகள் பற்றிய எதற்கும் எதுவித ஆதாரமும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களின் கடும்போக்காளர்கள் எவரையும் தொடர்பு கொள்ளவும் முடியாது. எதுவித ஆதாரமும் இன்றி புலிகள் என சந்தேகித்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளும், அவர்களின் உறவுகளுமே மேலும் கஷ்டத்துக்கு ஆளாவார்கள். ஏற்கனவே தடைகள் அமைத்து சோதனைகள் செய்யும் பணி பெருமளவில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் படையினரால் முடக்கிவிடப்பட்டு சொல்லொணாத் துன்பங்களை மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனைய பகுதிகளுக்கும் இச்செயற்பாடு பரவ வாய்ப்புண்டு. இந்த நிலை உருவாகியதற்கு அனுபவமற்ற தமது சுயநலம் கருதி செயற்படுகின்ற அரசியல்வாதிகளின் சிந்தனையற்ற உரைகளும் அறிக்கைகளும் இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளன.
2. எனது அபிப்பிராயப்படி சுயாதீனமான நம்பகத்தன்மையுடைய சர்வதேச விசாரணைகூட மாற்றப்பட்டு பொருத்தமான உள்நாட்டு மாற்று ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். ஒரு நாட்டின் கௌரவமே முக்கியமாக – முதலாவதாக கவனிக்கப்பட வேண்டுமேதவிர புலம்பெயர்ந்தவர்கள் விரும்புவதுபோல தனிப்பட்ட நபர்களுடைய கௌரவம் அல்ல. இவ்விசாரணையின் தாக்கம் நாட்டிலுள்ள பொது மக்களையே பாதிக்குமே ஒழிய புலம்பெயர்ந்த மக்களை அல்ல. இந்த விடயத்தில் எனது ஆலோசனை யாதெனில் அமெரிக்க தீர்மானத்தை முன்னெடுத்த நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து இந்தியப் பிரதிநிதியை இக்குழுவுக்கு தலைமைதாங்க வைத்து தீர்மானத்தில் கூறப்பட்ட பல்வேறு விடயங்களை அமுல்படுத்தும் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருபகுதியினரையும் சமனாக விசாரிக்க வேண்டும் என்ற ஆலோசனை அபத்தமும் தற்கொலைக்கும் சமமானதாகும். பிழையான ஆலோசனையை வழங்கியமைக்காக தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தப்பட்டவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.
அம்மணீ, எனது ஆலோசனைகள் தங்களுக்கு ஏற்புடையதற்றதாக இருப்பின் என்னை மன்னிக்கவும். நான் அகிம்சைக்கு கட்டுப்பட்டவன் ஆகையால் இதைவிட வேறு வழி எனக்குத் தெரியவில்லை.
பிற்குறிப்பு – இந்திய அரசின் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கும் முடிவு எனக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள போதும், தீர்மானத்தின் தீர்மானத்தின் 8ஆவது பிரிவு திருத்தப்பட வேண்டும் என்ற எனது முடிவில் மாற்றமில்லை. இந்த ஒரே வழிமூலம்தான் சங்கடமான நிலையையும் வேறு புதிய பிரச்சினைகளும் வராது தடுத்து சாதகமான ஓர் எதிர்காலத்துக்கு வழி அமைக்கலாம். எனது பிரேரணையை பிரதமர் மேன்மைதங்கிய மன்மோகன் சிங் அவர்களுக்கு பிரேரணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டு அனுப்பிவைத்துள்ளேன்.
ஜனாதிபதிக்கு கடிதம்
அமெரிக்கத் தீர்மானம் எனும் தலைப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்காவின் அனுசரணையுடன் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையில் கூடி விவாதித்து வாக்கெடுக்கும் திகதி நெருங்கிவந்து கொண்டிருப்பதால் அவசரஅவசரமாக நான், நம்நாடு இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்காது இருப்பதற்காகவும், நாட்டின் பெயர் எமது சரித்திரத்தில் கண்டனத்துக்குள்ளானது என்ற அவப் பெயரைத் தவிர்ப்பதற்காகவும் எனது ஆலோசனைகளை வழங்குகிறேன். நான் வருவதை முன்கூட்டி கூறுபவனுமல்ல. சாத்திரம் சொல்பவனுமல்ல. ஆனால் நான் நாட்டையும், நாட்டு மக்களையும் உள்ளன்போடு நேசித்து அக்கறை கொண்டுள்ளவனாவேன். கடந்த காலத்தை நினைவுபடுத்தி எனது மனதை மேலும் புண்படுத்தவிரும்பவில்லை. ஆனால் நான் எவ்வாறு எனது நாட்டிலும், இங்கு வாழும் மக்களிலும் அக்கறைகொண்டு கடந்த கசப்பான காலங்களில் எடுத்த திடகாத்திரமான முடிவு இருதடவைகள் பாராளுமன்றத் தேர்தலில் என்னைத் தோற்க வைத்ததும் துரோகி என்ற கௌரவப் பட்டத்தையும் பெற்றுத் தந்தது. மிகவும் அதிகாரமுடையவர் என்பதால் என்னுடைய கௌரவம் நேர்மை பற்றி திடகாத்திரமாக கூறக்கூடியவர் நீங்கள் ஒருவரே! நான் என்றைக்கும் எதுவித உதவியையும் உங்களிடம் கேட்டவனுமல்ல. நீங்களும் ஏதேனுமுதவியை எனக்கு வழங்கி என்னை வசப்படுத்தியவருமல்ல. சொந்த இலாபத்துக்காக என்னுடைய நிலையை துஷ்பிரயோகம் செய்தவனுமல்ல. கிளிநொச்சியுடன் எனது தொடர்பு அரைநூற்றாண்டுக்கு மேலாக இருந்தும், கிளிநொச்சியிலோ அல்லது வேறுஎங்காவதோ ஒரு சிறு துண்டுக் காணிகூட சொந்தமாக இல்லாதவன். 45 ஆண்டுகாலமாக நான் வாழ்ந்த வீட்டின் சொந்தக்காரர் தமது வீட்டை மிக சொற்ப விலைக்குத் தந்துதவியதால் அவ்விடத்தில் வந்து பழகிய தமிழ்த் தலைவர்கள் முதியோர், இளையோர் என்ற பாகுபாடின்றி அனைவரினதும் பொது ஞாபகச் சின்னமாக பாதுகாக்க உத்தேசித்துள்ளேன்.
அடிக்கடி உங்களுக்கு பலதடவைகள் ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். அவற்றில் எவற்றையேனும் எடுத்து செயற்பட்டதாக நானறியேன். புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தனிப்பட்ட ஒருவரோ அல்லது ஒரு குழுவினரோ வென்றெடுக்கவில்லை. அது பலரின் ஒரு கூட்டுமுயற்சியே! இதற்கான அர்ப்பணிப்புக்கள் இராணுவத்தினர், பலாத்காரமாக போராட்டத்தில் இணைக்கப்பட்ட இளைஞர்கள், பல்வேறு இன மதத்தைச் சார்ந்த மக்கள் ஆகியோரின் முயற்சியால் பெறப்பட்டதே! இதற்குரிய உதவி பலதரப்பட்டவர்களால் பல்வேறு இடங்களிலுமிருந்து கிடைத்தன. அனேகமாக எல்லா நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளை தத்தம் நாட்டில் தடைசெய்திருந்தன. அவைகளில் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஸ்கன்டினேவியன் நாடுகள் போன்றவை அடங்கும். எல்லாவற்றுக்கும் மேலாக எமது அயல்நாடான இந்தியாவின் தமிழ்நாட்டுப் பொலிசாரின் கியூ பிரிவு தாங்கள் இன்றேல் நாடு அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நிரூபித்துக்காட்டினர்.
ஜனாதிபதி அவர்களே! நீங்கள் செய்த மிகப் பெரிய தவறு அமெரிக்கத் தீரமானத்தை ஆதரிப்பதாகக் கருதப்பட்ட நாடுகளைக் கண்டித்தவர்களை தடுத்து நிறுத்த தவறியதாகும். ஏதாவதொரு நாடு உள்நோக்கோடு எம்மைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது எனக்கூறினால் நம்நாட்டில் எதை எடுப்பதற்கு அந்நாடு அவ்வாறு செயற்பட வேண்டும்? அமெரிக்கப் பிரேரணையை ஆதரிப்பதா அல்லது நடுநிலை வகிப்பதாகக் கூறுகின்றவர்கள் அத்தீர்மானங்கள் பௌத்த மதத்திற்கு மாறுபட்டதல்ல என்பதால் இப்போதாயினும் இதைக் கண்டித்தவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றி தீர்மானங்களை வரவேற்பர்.
நீங்கள் செய்த இரண்டாவது தவறு உலகத்தைச் சுற்றிவந்து பல நாடுகளிடம் இத்தீர்மானத்தை எதிர்க்கும்படி கேட்பதாகும். மிக நெருக்கமான நட்புநாடு கூட ஒன்றில் இத்தீர்மானத்தை ஆதரிக்கும் அல்லது குறைந்தபட்சம் நடுநிலை வகிக்கும் என்பதை தயவுசெய்து உறுதியாக நம்புங்கள். இதற்கு ஒரு காரணம் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தமது மூதாதையர்கள் செய்த தவறால் விரக்தியடைந்து இருந்திருக்கலாம். இவர்களுக்கு பழைய சம்பவங்களை நினைவு படுத்துவதால் எதிர்மாறான விளைவுகள் உருவாகுமேயன்றி எதுவித பிரயோசனமும் கிடையாது. எம்மை ஒருவர் பார்த்து எகலபொல குடும்பத்துக்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள் என்றால் எமது பதில் என்னவாக இருக்கும்?
யுத்தம் முடிவில் பல மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளமையை யாரும் மறக்க முடியாது. ஆனால் அதற்கு எல்லா படை வீரர்களையும் பொறுப்பாளியாக்க முடியாது. இராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஓர் தப்பான கட்டளையின் விளைவை த சார்ஜ் ஒப் த லைற் பிறிகேட் என்ற கவிதையில் ஒரு கவிஞன் மிக அழகாக விளக்குகிறார். ‘ஒருவன் தவறு செய்து விட்டான் என தெரிந்தும் அவர்களால் தட்டிக் கேட்க முடியாது. அவர்களால் நியாயப்படுத்தவும் முடியாது. இட்ட பணியை செய்து முடிக்க வேண்டியதுதான். பள்ளத்தாக்கை நோக்கி 600 பேரும் சவாரி செய்கின்றனர். பீரங்கிகள் அவர்களின் இடப் பக்கமும், வலப் பக்கமும், எதிராகவும் ஒரே நேரத்தில் வெடிக்கின்றன. ஆனால் அந்தப் போர் வீரர்களோ கேள்வி கேட்க முடியாது. பள்ளத்தாக்கில் அந்த 600 பெரும் சவாரி செய்து இறுதியில் மாண்டனர்’ யுத்த முனையிலிருந்த போர் வீரர்களின் நிலையும் இவ்வாறாகத்தான் இருந்திருக்கும். அவர்களைத் தண்டித்து அவர்களுடைய மனித உரிமைகளையும் மீறாது செயற்பட வேண்டும். ஆனால் உங்களுக்கு ஒரு கடமை உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிப்பதோடு நீங்கள் ஆளுகின்ற மக்களுக்கு உங்களுடைய கடமையைச் செய்யும் அதேவேளை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் குற்றம் சாட்டப்படுகின்ற போர்வீரர்களை தண்டனையிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதாகும்.
மூன்றாவது தவறு ஏற்கனவே கூறப்பட்ட இரண்டு காரணங்களைவிட முக்கியமானது. அதாவது 13ஆவது திருத்தத்திலும் கூடுதலான அதிகாரத்தை வழங்குவதாக இந்திய அதிகாரிகளுக்கு கூறியதை அமுல்நடத்த தவறியதே. இதுவே எல்லாவற்றையும்விட மோசமான தவறாகும். என் பார்வைக்கு எமது நாடு இந்தியா இராஜதந்திரம், நேர்மை ஆகியவற்றிலிருந்து பாடம் கற்க தவறியதாகும். எனது பழைய ஆவணங்களில் இருந்து 25.05.1995 திகதியிட்டு என்னால் எழுதப்பட்ட கட்டுரையும், தினமின என்ற சிங்கள நாளேட்டில் இருநாட்களின் பின் வெளியான கட்டுரையும் அகப்பட்டன. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றதாக அவை அமைந்திருந்தன. அவற்றில் சில பகுதிகளை இங்கே குறிப்பிடும் வேளையில் அவ்விரு ஆவணங்களின் பிரதிகளை நீங்கள் பார்வையிட்டு கவனம் எடுக்க வேண்டும் என்பதற்காக இத்துடன் இணைத்துள்ளேன்.
அக்கட்டுரை ‘இன்றைய நிலையில் இலங்கை இந்திய உறவு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் உள்ள 20 மைல் தூரம், இருநாடுகளுக்குமிடையில் இருக்க வேண்டிய உறவு, வெறும் நட்பு நாடாக அல்ல – தேவையைப் பொறுத்து விரைந்து வந்து உதவக்கூடிய நாடாக இருக்க வேண்டும் என்றும் அக்கட்டுரையில் இந்தியா எமது பிரச்சனைகளில் பங்கெடுக்க மிகத் தயாராக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளேன். மேலும் நேரு கொத்தலாவல ஒப்பந்தத்தில் இருந்து சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் வரை எடுத்த தீர்மானத்துக்கு அமைய எதுவித தயக்கமும் இன்றி பெருந்தொகையான இந்திய வம்சாவளியினரை இந்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. கொள்கையளவில் எமது கட்சி இந்த ஏற்பாட்டுக்கு மாறாக இருந்தாலும் தங்களின் பிரச்சினை இல்லாத ஒரு விடயத்தில் இந்திய அரசு இலங்கைக்கு எவ்வாறு உதவ முன்வந்தது என்பதை இச்செயலில் காண முடிகிறது.
இன்று மிகவும் பிரச்சினைக்குரிய விடயம் கச்சதீவு ஆகும். அதுபற்றி அக்கட்டுரையில் பின்வருமாறு நான் கூறியிருந்தேன். ‘ஸ்ரீமதி இந்திரா காந்தி அவர்கள் இலங்கைக்கு இந்தியா கச்சதீவைப் பாரமளிக்கின்றபோது மிகப்பெரிய எதிர்ப்பும் ஆட்சேபணையும் இருந்தது. ஆட்சேபித்தவர்களுக்கு இதுஒரு பெறுமதியற்ற கற்பாறை நிறைந்த தீவு என சமாதானம் கூறும்பொழுது தான் அவ்வாறு செய்வதால் இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு காலத்தில் பங்கம் ஏற்படும் என்பதை நன்கு அறிந்திருந்தார். இது உண்மையில் இந்திரா காந்தி அம்மையாருடைய நட்பு நிறைந்த நற்செயலாகும். இலங்கை ஒருபோதும் தமக்கு துரோகம் செய்யாது என நம்பிக்கை கொண்டிருந்தார்.
அக்கட்டுரையில் நான் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளேன். அவற்றில் சில முக்கியமானவையும் நம் இருநாடுகள் சம்பந்தப்பட்டவையுமாகும்.
ஏனையவை ஒருபுறமிருக்க, கச்சதீவு சம்பந்தமாக எழுதப்பட்டுள்ள பகுதியை ஊன்றிப் படியுங்கள். அன்றைய இலங்கைப் பிரதமர் கௌரவ சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய கச்சதீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டபோது இந்திய மாநிலங்கள் சில – குறிப்பாக தமிழ்நாடு பெரும் எதிர்ப்புக் காட்டியது. கச்சதீவை விடுதலைப் புலிகள் தமது தளமாக உபயோகிக்க வாய்ப்பு உண்டு என அவர் கருதியிருந்தார். கச்சதீவு எதுவித பெறுமதியுமற்ற கல்லுப்பூமி என கூறி எதிர்ப்பாளர்களை ஸ்ரீமதி இந்திரா அம்மையார் மௌனப்படுத்தி அதுசம்பந்தமாக பெரிதாக எதிர்க்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் அப்போது பின்நாட்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என அறிந்திருந்தார். அவ்வாறு ஒருவர் இன்றும் சிந்திப்பதில் தப்பில்லை. விசேடமாக எமது நாடும் சீனாவும் காட்டிவரும் நெருங்கிய உறவும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுமாகும்.
இந்திய சாணக்கியத்திலும் ஜனநாயகத்திலும் இருந்து நாம் கற்க வேண்டிய பலவிடயங்கள் உண்டு. கச்சதீவு சம்பந்தமாக நமது நாடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இந்திய மீனவருக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. இருந்தும் இன்று கச்சதீவு இலங்கையின் ஏக சொத்தாகும். கச்சதீவு இன்று ஓர் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு அரசு உட்பட இந்தியாவின் பல மாநிலங்கள் கச்சதீவை இந்திய அரசு மீளப் பெறவேண்டும் என பெரும் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்தக் கோரிக்கையும் அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களும் இந்திய அரசுக்கு மிக சங்கடமான நிலைமையை உருவாக்கியுள்ளது. விடயம் நீதிமன்றம் வரை சென்றுள்ளமையால் இந்திய அரசு எதுவித ஆரவாரமுமில்லாமல் கச்சதீவை மீளப் பெற்றிருக்க முடியும். இலங்கை அரசுகூட மௌனம் சாதித்திருக்கும். இந்திய அரசு விரும்பியிருந்தால் உயர் நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருக்கும். ஆனால் பெரும் அபூர்வ சம்பவம் என்னவெனில் உயர்நீதிமன்றம் மத்திய அரசின் அபிப்பிராயத்தை கேட்டபோது, அதிர்ச்சி தரக்கூடிய ஆனால் பாராட்டப்பட வேண்டிய பதில் கையளிக்கப்பட்டதுதான். மீளப் பெறமாட்டோம் என நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியதோடு ஒருபடி மேலே சென்று இந்திய மீனவர் அங்கே மீன்பிடிக்கப்படாது என்றும் தெரிவித்தது. நான் உங்களைக் கேட்பது இப்பேற்பட்ட ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? என்று.
ஜனாதிபதி அவர்களே! இந்திய அரசின் முடிவை ஆராய்ந்து பார்ப்பீர்களேயானால் ஒரு விடயம் தெளிவாகின்றது. சரியோ பிழையோ ஒர் தலைவி எடுத்த முடிவுக்கு மாறாக அவருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த அரசு விரும்பவில்லை. அத்தலைவி இறந்து 30 ஆண்டுகள் கடந்த பின்பும்கூட அவரின் கௌரவத்துக்கு களங்கம் ஏற்படுத்த அரசு தயாரில்லை. மிகப்பாராட்டுதலுக்குரிய விடயம் யாதெனில் அண்மையில் வரஇருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்த விடயம் முக்கிய இடம்பெறும் என்பது உறுதி. ஒர் பெரும் அரசியல் தலைவர் கூறியதுபோல தான் விசுவாசமாக நேசிக்கும் சமூகத்திடம் பொய்களைக்கூறி வெற்றிபெறுவதைவிட உண்மையைக் கூறி தோல்வியைத் தழுவிக் கொள்வது மேலானதாகும் என காங்கிரஸ் கூட்டாட்சி எண்ணுவதுபோல் தோன்றுகிறது. இதே கொள்கைதான் நான் 55 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு பிரவேசித்த காலம்தொட்டு கடைப்பிடித்து வருகின்றேன்.
1947ஆம் ஆண்டு கலைக்கப்பட இருந்த சட்டசபையின் தமிழ் உறுப்பினர்களுக்கு தேசபிதா என வர்ணிக்கப்படும் அதிமரியாதைக்குரிய அமரர் டி.எஸ். சேனநாயக்கா அவர்கள் கொடுத்த வாக்குறுதி இந்திய பிரஜா உரிமைச் சட்த்தின் அமுலாக்கத்துடன் மீறப்பட்டது பற்றி இங்கே குறிப்பிடுவதில் தப்பில்லை என நம்புகிறேன். அத்துடன் அமரர் பண்டாரநாயக்கா அவர்கள் தந்தை செல்வநாயகத்துடன் செய்து கொண்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் எதிர்க்கட்சியின் ஆட்சேபணையால் அமரர் பண்டாரநாயக்கா அவர்களாலேயே கிழித்தெறியப்பட்டது. அதன்பின் ட்டலி – செல்வா ஒப்பந்தத்திற்கும் அதே கதிதான். ஆனாலும் தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி செய்த டட்லி அரசு ஒப்பந்தத்தை கையில் எடுக்காமலேயே ஆட்சியை நடத்தி முடித்தது. அதனை அடுத்து உங்களால் உருவாக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கை கூட இயற்கை மரணமெய்தியது.
ஜனாதிபதி அவர்களே! இப்போது நான் தங்களை கேட்பது கடந்த காலத்தைப் போல் அல்லாமல் நாடு எதிர்நோக்கியுள்ள இன்றைய அவலநிலையை மனதில் கொண்டு எமது நாட்டுக்கு அமைதியைத் தேடித்தர அயராது உழைத்து தன் உயிரையே தியாகம் செய்த இந்திய முன்னை நாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் முயற்சியால் உருவாகிய 13ஆவது திருத்தச் சட்டத்தை துணிச்சலுடன் அமுல்படுத்துங்கள். இதுவே நீங்கள் கௌரவம் மிக்க பெரும் நாடாகிய இந்தியாவுக்கும் அந்த நாட்டின் ஒப்பற்ற மகனாகிய ராஜீவ் காந்தி அவர்களுக்கும் காட்டும் பெரும்மரியாதையாகும். இந்தியா என்றும் எம்மக்களுக்கோ எமது நாட்டுக்கோ எதுவித தீங்கும் விளைவிக்கவில்லை. விளைவிக்கவும் மாட்டாது.
13ஆவது திருத்தத்தை உடன் அமுல்படுத்துவதால் அமெரிக்காவின் தீர்மானத்தின் பலபகுதிகளை நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதோடு முதல் கட்டமாக சர்வதேச விசாரணைக்கு செல்லவிடாது தவிர்க்கவும் உதவும். ஈற்றில் முடிவுரையாக நான் வலிந்து கேட்பது உங்கள் பிரதிநிதிகள் மூலம் ஓர் திருத்தப் பிரேரணைக்கு ஆதரவு கேளுங்கள். ஏனைய விடயங்களாகிய உயிருக்கும் உடமைக்கும் நஷ்டஈடு, யுத்தகால குற்றங்கள் போன்ற அத்தனையையும் விசாரிப்பதற்கு, தீர்மானத்தை முன்வைத்த நாடுகளையும் உள்ளடக்கி இந்திய பிரதிநிதியின் தலைமையில் ஓர் குழுவை அமைக்குமாறு கோருவது.
நாட்டின் கௌரவத்தை காப்பாற்றுவது இப்போது உங்கள் கையில். எந்த நாட்டுக்கும் மக்களுக்கும் மனச்சங்கடமோ வேதனையையோ ஏற்படுத்தாமல் கடமை உணர்வுள்ள ஓர் இலங்கைப் பிரஜையாக என் கடமையைச் செய்துள்ளேன் என திருப்தி அடைகிறேன்.
அன்புடன், வீ. ஆனந்தசங்கரி, செயலாளர் நாயகம், தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழ்மிரர்)