சுழிபுரம் சிவன் சனசமூக நிலையத்தினர் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் சந்திப்பு-

யாழ். சுழிபுரம் வறுத்தோலை சிவன் சனசமூக நிலையத்தினர் தமது சனசமூக நிலையத்தின் பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக கடந்த 21.03.2014 அன்று புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை சனசமூக நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அப்பகுதி மக்கள் அன்றாடம் தாம் அனுபவிக்கும் பிரச்சனைகள் தொடர்பில் இதன்போது எடுத்துக் கூறினர். இந்த நிலைமைகளை விரிவாக ஆராய்ந்த வடமாகாண சபை உறுப்பினர் திரு. சித்தார்த்தன் அவர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி இதற்குரிய தீர்வினை வெகு விரைவில் முன்னெடுப்பதாக கூறினார். இதேவேளை எதிர்வரும் காலங்களில் புலம்பெயர் நண்பர்களின் உதவியுடன் சனசமூக நிலையத்திற்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள முயற்சி எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வலிமேற்கு பிரதேசசபை தவிசாளரின் பஜனைப் பாடசாலைத் திட்டம்-

யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது 100 பஜனை பாடசாலைத்திட்டம் சுழிபுரம் வறுத்தோலை கிராமத்தில் அமைந்துள்ள கொட்டையடைப்பு பேரன் சிவன்கோவிலில் 21.03.2014 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்து அங்கு வருகை தந்திருந்த 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். கௌரவ த. சித்தார்த்தன் அவர்கள் இங்கு உரையாற்றியபோது, இவ்வாறான பஜனை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது வரவேற்கத்தக்க விடயம் என்பதோடு, தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் இத்திட்டத்தினை வரவேற்பதாகவும், இவ்வாறான திட்டங்கள் வாயிலாக எமது சமுதாயத்தின் பல சீரழிவுகள் கட்டுப்படுத்தப்படுவதோடு ஒர் ஆரோக்கியமான சமுதாயத்தினையும் உருவாக்க முடியும் எனவும் கூறினார். மேற்படி பஜனை பாடசாலைத் திட்டமானது தொடர்ச்சியாக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திருநாவற்குளம் நூலகத்திற்கு தளபாடங்கள், நூல்கள் வழங்கிவைப்பு-

thirunavatkulam (1)thirunavatkulam (3)

வவுனியா திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் ஆரம்பிக்கப்படுகின்ற புதிய நூல் நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் (22.03.2014) விஜயம் செய்த புளொட் முக்கியஸ்தரும், வவுனியாவின் முன்னைநாள் உப நகர பிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க. சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கோயில்குளம் இளைஞர் கழக இணைப்பாடவிதான செயற்பாட்டுக் குழுவினால் வழங்கப்பட்ட தளபாடங்கள் மற்றும் ஒருதொகை நூல்களை நூல் நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் சாரணர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார். இந்த நிகழ்வின்போது கருத்து தெரிவித்த திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் மாணவர்களின் துல்லியமானதும் ஆக்கபூர்வமானதுமான இந்த செயற்பாட்டினைப் பாராட்டியதுடன், எமது குடியேற்ற கிராமத்தில் உள்ள மாணவ செல்வங்களின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய நூல் நிலையத்தை உருவாக்க திட்டமிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் திருக.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், கோயில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த கண்ணதாசன், சதீஸ், காண்டீபன், செல்வம், பிரபா, தினேஷ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வதேச விசாரணை நிலைப்பாட்டில் மாற்றம் – அமைச்சர் நிமல்-

nimal sribalaஇலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதனை முன்னிட்டு மகிழ்ச்சி அடைய முடியும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா சென்றிருந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடு திரும்பியுள்ள நிலையில், பிரேரணை குறித்து இந்த ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தினார். இலங்கையை பழிவாங்கும் நோக்கிலேயே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து பிரேரணையை முன்வைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்க மற்றும் பிரித்தானிய அழுத்தங்களுக்கு ஏனைய நாடுகள் அடிபணிந்துள்ளதாகவும், ஆனால் எந்தவொரு நாடும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை எனவும் வாக்கெடுப்பின் பின்னரே அதனை அறிந்து கொள்ள முடியும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மருதனாமடத்தில் ஆர்ப்பாட்டம்-

jaffna_student_arpadam_005jaffna_student_arpadam_002jaffna_student_arpadam_001யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் தாக்கப்பட்டமையை கண்டித்தும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் இன்று மருதனாமடம் நுண்கலைப் பீட வாளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நுண்கலைப் பீட மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்வதில் பொலீசார் அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்ட மாணவர்கள் குறிப்பிட்டனர். எனினும் தாக்குதலுடன் தொடர்புடைய பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுன்னாகம் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

பதவி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை-

மூன்று தூக்கிடுதல் பதவி வெற்றிடங்கள் உள்ளிட்ட 10 வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் சந்ராரத்ன பல்லேகம் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் பணிபுரியும் சில பணியார்களின் செயற்பாடுகள் காரணமாக அங்கு பணியாற்றுவதில் ஏனையவர்களுக்கு பிரச்சினை நிலை தோன்றியுள்ளதாகவும் ஆணையாளர் சந்ராரத்ன பல்லேகம் மேலும் கூறியுள்ளார்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மாகாண சபை வேட்பாளர் மீட்பு-

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் மேல் மாகாணசபை வேட்பாளர் ஒருவர் காருக்குள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்தபோது மீட்கப்பட்டுள்ளார். குறித்த வேட்பாளரின் மனைவி, தமது கணவர் காணாமற்போயுள்ளதாக இன்றுகாலை மத்துகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் இன்றுகாலை குறித்த வேட்பாளரை கண்டுபிடித்துள்ளனர். கை கால்கள் கட்டபட்ட நிலையில் இந்த வேட்பாளர் மத்துகம பகுதியிலுள்ள தோட்டமொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் -அமைச்சர் ராஜித-

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தையின் நிமித்தம், கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டால் மாத்திரமே நாளை கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய முடியாது எனவும், நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி நடைபெறவிருந்த மீனவர் பேச்சுவார்த்தைக்கு தமிழக மீனவர் பிரதிநிதிகள் சமூகமளிக்காமையினால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 121பேர் கைது-

ajith rohanaதேர்தல் சட்டங்களை மீறிய 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 123 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடைய 38 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 03 அரச வாகனங்களும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாக்களிப்பு தினத்தில், வாக்காளர்களை சட்டவிரோதமாக வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கட்சி அல்லது சுயேட்சை குழுக்களின் ஆதரவாளர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. அவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டு, அவற்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் கூறியுள்ளார்.

புலிகளின் தலைவர்களை தேடி கிழக்கில் சுவரொட்டிகள்-

puli thalaivarkalபுலிகள் இயக்க புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி எனப்படும் கசியன் மற்றும் நவநீதன் எனப்படும் அப்பன் ஆகிய இருவரும் தேடப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவலான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த இருவரின் புகைப்படங்களும் பிரசுரத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த இருவரும் அதிகளவிலான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் இவர்களைப் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் சன்மானம் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் அறிந்தவர்கள் 0766911617 அல்லது 0113135680 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அறியத் தாருங்கள் என அந்த பிரசுரத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போகம்பறை சிறையை சனிக்கிழமை வரை பார்வையிட அனுமதி-

கண்டி, போகம்பறை சிறைச்சாலையை பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 29ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. போகம்பறை சிறைச்சாலையை மக்கள் பார்வையிடுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் கடந்த 15ஆம் திகதி முதல் அனுமதி வழங்கியிருந்தது. இதுவரை, 300,000 பேர் பார்வையிட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாத்திரம் 84,000 பேர் சென்றிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 138 வருட வரலாற்றைக் கொண்ட போகம்பறை சிறைச்சாலை 1876ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் 408 கைதிகளைத் தடுத்து வைக்கக்கூடிய வசதியுடன் காணப்பட்டது. இந்த சிறைச்சாலை மூடப்படும் போது 2600 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த சிறைச்சாலையிலிருந்த சிறைக்கைதிகள் தும்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையின் திறப்புக்கள் கடந்த வருடம் ஏப்ரல் 18ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு-

makalir thinam nallur (1)makalir thinam nallur (2)makalir thinam nallur (3)யாழ். நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது. நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் பிரதேசசெயலாளர் செந்தில்நந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதில் நல்லூர் பிரதேசக பிரிவில் மிக திறமையாக சமுகநலன் திட்டங்கள், அபிவிருத்திப்பணிகளில் கூடிய பங்களிப்புகளைச் செய்த 8 பெண் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஜெய்ப்பூர் நிறுவனத் தலைவி ஜெயதேவி கனேசமூர்த்தி, சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களப் பணிபாளர் ஜெ.ஜெ.சி.பெலிசியன், யாழ் மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் உதயணி தவரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.