அமரர் க.உமாமகேஸ்வரன் நினைவில்லம் புனரமைப்பு-
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் நினைவில்லம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்ட நிலையில் காட்சி தருகின்றது. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பு மற்றும் மேற்பார்வையின்கீழ் வவுனியா உமா மகேஸ்வரன் வீதி, கோயில்குளம் பகுதியில் அமைந்துள்ள மேற்படி நினைவு இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி உமாமகேஸ்வரன் சமாதி, வளாகம், உமா மகேஸ்வரன் ஞாபகார்த்த வாசிகசாலை, நினைவில்லத்தின் சுற்றுமதில், பூந்தோட்டம் ஆகியன புனரமைப்பு செய்யப்பட்டு அழகாக காட்சிதருகின்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் ஜூலை மாதம் 13ம் திகதிமுதல் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் க. உமாமகேஸ்வரன் அவர்களின் மேற்படி நினைவில்லத்திலேயே இடம்பெற்று வருகின்றது. இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலராஞ்சலி என்பன இடம்பெறுவதுடன், இரத்ததானம், சிரமதான், அன்னதானம் என பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.