மன்னார் எல்லை பலவந்தமாக கைப்பற்றப்படுவதாக குற்றச்சாட்டு-
வில்பத்து சரணாலயத்தின் வடக்கிலுள்ள முள்ளிக்குளம் பகுதியில் மன்னார் எல்லையை சுத்தம்செய்;து அங்கு 300 குடும்பங்கள் கூடாரங்களை அமைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியே இந்த செயற்பாடுகளுக்கு பின்னால் இருப்பதாக கூறப்படுகின்றது. இதேவேளை நாட்டுக்குள் தனியான முஸ்லிம் வலயங்களை நிர்மாணிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது. வில்பத்து சரணாலயம் தற்போது அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில், வில்பத்து முதல் மன்னார் வரையில் எஸ்.எச் ஜஸஸ்மின் சிட்டி என்ற பெயரில் பாரியதொரு வீடமைப்புத் திட்டம் அமைச்சர் ரிஷாட் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், வீடமைப்புத் திட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் பொது பல சேனாவின் பொதுச் செயலர் வண. குலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோபியின் தாயாரும் மற்றொரு பெண்ணும் கைது-
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் புலிகளின் புதிய தலைவர் எனக் கூறப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவ்விருவரும் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரான செல்வநாயகம் ராசமலர் என்பவரும் அவருடன் தங்கியிருந்த மற்றுமொரு பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை-மத்திய அரசு–
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 07 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை என இந்திய மத்திய அரசு, உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த தகவலை தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரம் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே காணப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்கால சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 07 பேரையும் விடுதலை செய்வதற்கு கடந்த மாதம் 19ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தை நியாயப்படுத்திய தமிழக அரசுக்கு பதில் மனுவின் ஊடாக மத்திய அரசு இவ்விடயத்தினை தெரிவித்திருந்தது. இக் குற்றமானது நன்கு திட்டமிடப்பட்ட, கொலை சதி முயற்சி எனவும் மத்திய அரசு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர்-பவ்ரல்–
பொலிஸார் இம்முறை தேர்தலில் பக்கச்சார்பாக செயற்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சில பகுதிகளில் பொலிஸார் பக்கசார்பாக செயற்படுகின்றமை குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட சிலர், பொலிஸாரின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சட்டவிரோத பிரசாரங்களை கட்டுப்படுத்தும் பொலிசாரை இம்முறை தேர்தலில் காணமுடியாதுள்ளதாக கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான தேர்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்காத பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன முற்றாக நிராகரித்துள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இம்முறை தேர்தலிலும் சிறப்பாக செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேட்பாளர்களும், ஆதரவாளர்களுமே சட்டத்திற்கு மாறாக நடந்துகொள்வதாகவும், தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவது பொலிஸாருக்கு மாத்திரம் உள்ள கடமையல்ல என்பதுடன், இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜி-8 உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறாது-
இந்த வருடத்திற்கான ஜி-8 உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறாது என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார். முன்னர் திட்டமிட்டது போல ரஷ்ய நகரான சோச்சியில் இந்த மாநாடு இடம்பெறாது எனவும், உக்ரேன் தொடர்பாக ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரேனிலிருந்து க்ரைமியாவை பிரித்தற்கு எதிராக, ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடையினை விதிக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹேக்கில் இடம்பெற்ற அணு ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் டேவிட் கமரோன், பராக் ஒபாமா மற்றும் ஏனைய ஜ7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இருந்து அழகிரி நிரந்தர நீக்கம்-
மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்த மு.க.அழகிரியிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது. ஆனால், அவர் கட்சியையும் தி.மு.க. தலைவர்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இது குறித்து பொதுச் செயலாளரும் நானும் கலந்து பேசி தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்குவது என முடிவு செய்தோம். அதன்படி அவர் நிரந்தரமாக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அறிவித்துள்ளார்.