ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை அதிகரிப்பு-

IPKF muripaduவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை 1983 ஜனவரி 01ஆம் திகதிமுதல் 2009 மே 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் காணாமல்போனவர்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஆணைக் குழுவுக்கு பெருமளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கால நீடிப்புக்கான அறிவிப்பு நேற்றிரவு வெளியான ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக விடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலத்தையும் 2014 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை ஜனாதிபதி நீடித்துள்ளார். விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் 393ஆம்; அத்தியாயம் 04ஆம் உறுப்புரையின் கீழான ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார். இதற்கு முன்னர் இதற்கான காலப்பகுதி 1990 முதல் 2009 வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 1031 முறைப்பாடுகள் பதிவு-

cafeமேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் என்கிற கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 982 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 49 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இதில் 598 முறைப்பாடுகள் மேல் மாகாணத்திலும் 360 முறைப்பாடுகள் தென்மாகாணத்திலும் பதிவாகியுள்ளதுடன். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம்307 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கபே இயக்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மன்னார் பள்ளிமுனையில் குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பம்-

mannar pallimunai kudineerஉலக நீர் தினத்தையொட்டி மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மன்னார் பள்ளிமுனை 41 வீட்டுத்திட்டம், 49 வீட்டுத்திட்டம், 50 வீட்டுத்திட்டம் மற்றும் கோந்தைப்பிட்டி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் இணைப்புக்களை இன்று வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் 150 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். ஆரம்ப நிகழ்வின்போது மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறுப்பதிகாரி டி.யசோதரன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஆர்.சுகர்னராஜா ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் இணைப்பை வழங்கி வைத்துள்ளனர்.

தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு-

elections_secretariat_68மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவுக்கு பின்னர் வேட்பாளர் பிரசார காரியாலயம், பிரசார பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் அலங்கார காட்சிப்படுத்தல்கள் என்பனவற்றை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அவற்றை அகற்றுவதற்கு வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் செயலகம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் தொகுதி மட்டத்தில் தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலயங்கள் நாளை நள்ளிரவு வரை நடத்திச் செல்ல முடியும் என்பதுடன், பிரசார பணிகளை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.