தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்கவே அரசு விரும்புகிறது-புளொட் தலைவர் சித்தார்த்தன்-
தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடக்குமுறைகளுக்குள் வைத்திருப்பதற்கே அரசாங்கம் விரும்புகின்றது எனத் தெரிவித்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இதற்கமையவே தற்போது சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், விசாரணைகள் வடக்கு மாகாணம் முழுவதும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
யாழ். சுழிபுரம் வறுத்தோலை சிவன் சனசமூக நிலையத்தில் அப்பகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இங்குள்ள மக்கள் வாழ்வாதார ரீதியாக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு மாகாண சபையினூடாக உதவிகளைச் செய்து கொடுப்பதற்கு என்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். தற்போதும் இந்தப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் முதல் பல்வேறு தரப்பினர்களுக்கும் பல உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றோம். இதேபோன்று தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம். இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பதுடன், அவர்களின் வாழ்வாதார ரீதியான முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து உழைப்போம்.
இங்கு மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கே போராடுகின்ற நிலையில் தமது வாழ்க்கையை முன்னெடுக்க முடியாத வகையில் தொடர்ந்தும் பல தரப்பினர்களாலும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டையில் இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு நடத்தி பலரையும் கைதுசெய்து சென்றனர். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டம் முழுவதும் தற்போது வீதிச் சோதனைகளையும், சுற்றிவளைப்புகளையும் ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்தும் பொதுமக்களை அச்சுறுத்தி அடக்குமுறைகளுக்குள் வைத்திருப்பதற்கே அரசாங்கம் முயற்சி செய்கின்றது. இதன் வெளிப்பாடே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சோதனைகளும் சுற்றிவளைப்புக்களுமாகும்.ஆகவே, தமிழ் மக்கள் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசின் அடக்குமுறைகளினால் தமிழ் மக்களை அடிபணிய வைக்க முடியாது என்று தெரிவித்தார்.