இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டது-தமிழ் தேசியக் கூட்டமைப்பு-

sampanthanஅமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைபு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் இது தொடர்பில் ஊடகத்திற்கு கருத்துக் கூறுகையில், அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கும் நன்றியினை தெரிவிக்கின்றோம். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஆதரிக்கின்றோம். இந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா எடுத்த நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றமாகும். இந்திய மத்திய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு வருத்தமளிப்பதாக இருந்தாலும், இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இந்தியா பொறுப்புடன் நடந்துகொள்ளும் என நாம் நம்புகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்-ப.சிதம்பரம்-

p.chitamparamஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட வரைவு தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என இந்திய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இந்திய மத்திய அரசு நடுநிலையான முடிவை எடுத்திருக்கிறது. இந்த முடிவு இந்திய வெளிவிவகார அமைச்சினாலேயே எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அமைச்சரகம் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் சிதம்பரம் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிகத்தில் உள்ள கட்சிகளும் ஒற்றுமை இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் 23 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து இருக்கின்றன. இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி பேச நிறைய வாய்ப்புகள், அரங்குகள் உள்ளன. அதனால் நல்ல கருத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கடமைகளில் 26 ஆயிரம் பொலிஸார் ஈடுபாடு-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளின் பொருட்டு 26 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு நிமித்தம் வாக்குச் சாவடிகளுக்கு அருகில் துப்பாக்கியுடன் இரு பொலிஸார் வீதம் இன்று முதல் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பெண்களுக்கான வாக்ளிப்பு நிலையங்களில் நாளைமுதல் பெண் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குச் சாவடிகளிலும், வாக்காளர்களிடம் வாக்குகளுக்காக மன்றாடுதல், வாக்காளர்களை வற்புறுத்தி வாகனங்களில் ஏற்றிச் செல்லல் என்பவற்றை தடுக்க வாக்குச் சாவடிகளுக்கு அருகிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவதுடன், மாவட்ட செயலகங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அருகிலுமாக மூன்று கட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தேர்தல் சட்டங்களை மீறுவோர் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான உரிய ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொள்வர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

யாழ். நோக்கி துப்பாக்கிகளுடன் சென்ற ஐவர் கைது-

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி காரில் சென்றவர்களிடம் போலி கைத்துப்பாக்கிகள் காணப்பட்டதையடுத்து அதில் பயணித்த ஐவர் வவுனியா பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற கார் ஒன்றினை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள கல்குனாமடு சந்தியில் வைத்து பொலிஸார் சோதனை செய்தபோது அதில் போலி கைத்துப்பாக்கிகள் 02, கையுறைகள் 10 மற்றும் வாகனத்திற்கான போலி இலக்க தகடுகள் சிலவும் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த காரில் பயணம் செய்த கொழும்பைச் சேர்ந்த நால்வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருமாக ஐவர் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களிடம் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாத்தறையில் தேர்தல் அதிகாரிகள் குழுவின் கடமைக்கு இடையூறு-

மாத்தறையில் உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்காக தேர்தல்கள் செயலகத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்றை மாத்தறைக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை கடற்கரை வீதியில் பொருத்தப்பட்டிருந்த வேட்பாளர் ஒருவரின் பிரசார பதாகைகளை அகற்றுவதற்கு சென்ற சந்தர்ப்பத்தில், விசாரணை அதிகாரிகளின் கடமைக்கு சிலர் இடையூறு விளைவித்துள்ளதுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் அனுப்பிவைப்பு-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் பொருட்டு வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் இன்றுகாலை 7மணிமுதல் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. 4, 253 நிலையங்களில் இம்முறை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். 58இலட்சத்து 98ஆயிரத்து 427பேர் இந்த இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். இதேவேளை, 608 வாக்கெண்ணும் நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மேல் மாகாணத்தில் 420 நிலையங்களிலும், தென் மாகாணத்தில் 188 நிலையங்களிலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளன.

சீன பிரதிநிதிகளுடன் உடன்படிக்கை-

எதிர்வரும் வாரம் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொள்ளவிருக்கும் சீனப் பிரதிநிதிகள் இங்கு பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 31ம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இந்நிலையில், அந்த குழுவுடன் சுற்றுலா, கைத்தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும், சீன பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு அடுத்தவாரம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்கு த.தே.கூட்டமைப்புக்கு அழைப்பு-

untitledஇனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான தேசிய ஒருமைப்பாட்டு மகாநாடு ஒன்று எதிர்வரும் ஏப்ரல் ஏழாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவிருக்கும் மேற்படி மாநாட்டுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியகட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் சுமார் 1500 பேர் வரையில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடையார்கட்டில் ரி.ஐ.டியினரால் ஒருவர் கைது-

imagesCA5PZGM2முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் வைத்து சின்னத்துரை சிறீகாந்தன் (35) என்ற இளைஞன் நேற்று இரவு 11 மணியளவில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் (ரி.ஐ.டி) கைது செய்யப்பட்டுள்ளார். புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான இவர் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்படடிருந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். புத்தூர் மேற்கைச் சேர்ந்த இவர் உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வந்தவர். அப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிய விசேட தேவையுடைய ஒருவரும் ரி.ஐ.டி யினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.