மேல், தென் மாகாண சபைகளுக்கான ஆசனங்களின் விபரம்-
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய மேல் மாகாண சபை மற்றும் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாண சபை ஆகிய இரண்டு மாகாண சபைகளுக்குமான போனஸ் ஆசனங்களை உள்ளடக்கிய ஆசனங்களின் விபரங்கள் பின்வருமாறு
மேல் மாகாண சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1,363,675 ஆசனங்கள் 56
ஐக்கிய தேசியக் கட்சி – 679,682 ஆசனங்கள் 28
ஜனநாயகக் கட்சி – 203,767 ஆசனங்கள் 09
மக்கள் விடுதலை முன்னணி – 156,208 ஆசனங்கள் 06
ஜனநாயக மக்கள் முன்னணி – 51,000 ஆசனங்கள் 02
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 49,515 ஆசனங்கள் 02
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 15,491 ஆசனம் 01
தென் மாகாண சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 699,408 ஆசனங்கள் 33
ஐக்கிய தேசியக் கட்சி – 310,431 ஆசனங்கள் 14
மக்கள் விடுதலை முன்னணி – 109,032 ஆசனங்கள் 05
ஜனநாயகக் கட்சி – 75,532 ஆசனங்கள் 03
மேல் மற்றும் தென் மாகாண சபைகள் ஆளும் கட்சியின் வசம்-
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளதுடன், இந்த மாகாண சபைகளின் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மூன்று மாவடங்களுக்குமான தொகுதி வாரியான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு தொகுதியைத் தவிர்ந்த ஏனைய அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துள்ளது.
தென் மாகாணத்தில் மொத்தமாக ஆறு இலட்சத்து 99 ஆயிரத்து 408 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளதுடன், மாகாணத்தின் அதிகாரத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதன் பிரகாரம் தென் மாகாண சபையின் 31 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வசப்படுத்தியுள்ளது.
காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதியை மாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சி தன்வசப்படுத்தியுள்ளது. பலபிட்டிய , அம்பலாங்கொடை, பெந்தர-எல்பிட்டிய, ஹபராதூவ, கரந்தெனிய, ஹினிதும, ரத்கம, பத்தேகம, அக்மீமன, ஆகிய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து தொகுதிகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மொத்தமாக ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 687 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 8 ஆசனங்களும், 79 ஆயிரத்து 829 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு நான்கு ஆசனங்களும், 39 ஆயிரத்து 345 வாக்குகளைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணிக்கு இரண்டு ஆசனங்களும் கிடைத்துள்ளன.
மாத்தறை மாவட்டத்தில் இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 102 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 10 ஆசனங்கள் கிடைத்துள்ளன. 96 ஆயிரத்து 297 வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி நான்கு ஆசனங்களையும் 39 ஆயிரத்து 158 வாக்குகளைப் பெற்று மக்கள் விடுதலை முன்னணி இரண்டு ஆசனங்களையும் வெற்றிகொண்டுள்ளன மாத்தறை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 501 வாக்குகளை பெற்ற ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாண சபைக்கான தேர்தலின் ஒட்டுமொத்த முடிவுகள் வெளியாகியுள்ளதன் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளது. மேல் மாகாணத்தில் மொத்தமாக 13 இலட்சத்து 63 ஆயிரத்து 367 வாக்குகளைப் பெற்று, 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 56 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தன் வசப்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக ஆறு இலட்சத்து 79 ஆயிரத்து 682 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், 28 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி மேல் மாகாணத்தில் மொத்தமாக இரண்டு இலட்சத்து மூவாயிரத்து 767 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்த மாகாணத்தில் மக்கள் விடுதலை முன்னணி மொத்தமாக ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 208 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், 6 ஆசனங்களை வசமாக்கியுள்ளது. இதுதவிர மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக கட்சி 51 ஆயிரம் வாக்குகளை பெற்று, 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாணத்தில் 49 ஆயிரத்து 515 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், 2 ஆசனங்களை பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15 491 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், ஆசனம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் மூன்று இலட்சத்து 30 ஆயிரத்து 924 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளதுடன், 13 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 924 வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி, 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஜனநாயக கட்சி 43 ஆயிரத்து 685 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும், 25 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் ஐந்து இலட்சத்து 82 ஆயிரத்து 668 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிப்பதுடன், இந்த மாவட்டத்தில் 23 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு இலட்த்து 49 ஆயிரத்து 220 வாக்குகளுடன் 10 ஆசனங்களை தன்வசப்படுத்தியுள்ளது. ஜனநாயக் கட்சி 88 ஆயிரத்து 557 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 4 ஆசனங்களை வென்றுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் 56 ஆயிரத்து 405 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாவட்டத்தில் 17 ஆயிரத்து 296 வாக்குகளைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 10 தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது. இதற்கமைய தெஹிவலை, இரத்மலானை, கொலன்னாவை, கோட்டே, கடுவெல, அவிசாவளை, ஹோமாகம, மஹரகம, கெஸ்பேவ மற்றும் மொரட்டுவை தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி, பொரளை, கொழும்பு கிழக்கு மற்றும் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.