கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி-
யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி நேற்று (29.03.2014) பிற்பகல் 2மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கடந்த 14வருடங்களாக கோப்பாய் கல்வியியற் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கிவரும் திரு லயன்ஸ் ஈ.எஸ்.பி நாகரட்ணம் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கோப்பாய் ஐங்கரன் வெதுப்பக உரிமையாளர் ஆர்.பொன்குமார் மற்றும் பாலசிங்கம் சிவசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கல்லூரியின் வளாகத்திலிருந்து பாண்ட் வாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. போட்டிகளின் நிறைவில் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்தக் கல்லூரி ஆசிரியர்களை உருவாக்கக்கூடிய ஒரு கல்லு{ரியாகும். எங்களுடைய சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதென்றால் கல்விதான் முக்கியமானதொரு விடயமாக இருக்கின்றது. கல்வி ஒன்றின் மூலம்தான் எங்களுடைய சமூதாயத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும், இதிலே ஆசிரியர்களாகிய உங்களுடைய பங்குதான் மிகவும் பெரியதாக இருக்கும். நீங்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கப் போகின்றீர்கள். ஆகவே நீங்கள் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு உங்களால் இயன்றளவுக்கு பாடுபட வேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய ஆசிரியர்களுள் பெரும்பாலானோர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள். அதுபோல் நீங்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றோம் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.