அராலி கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச் சங்க பொதுக்கூட்டம்-

யாழ். அராலி கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வு 27.03.2014 வியாழக்கிழமை அன்றுமாலை அராலியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது, சிறு துளி பெரு வெள்ளம் என்ற சொற்பதத்திற்கு அமைய இவ் அராலி கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளமை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இவ்வாறான சங்கங்களின் வாயிலாக உள்ளுரில் சுழற்சி முறையில் கடன் வழங்கும் எமது நிதி எமது சழூகத்தினுள்ளே சுழற்சிக்கு உட்படும் இச் செயற்பாடு எமது சழூகத்தின் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும். இன்று பல புதிய நிதி நிறுவனங்களும் இங்கு செயற்படுகின்றன. இந் நிறுவனங்களின் ஊடாகவும் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்ய நிதியினை பெற்றுவருகின்றனர் இவ்வாறு பெற்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவே உள்ளனர். கூடுதலான நிதி நிறுவனங்கள் பெண்களின் அபிவிருத்தி நோக்கியதாகவே இக் கடன்களை வழங்கி வருவதும் குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இன்றும் இந் நிகழ்வில்கூட பெண்களே அதிகமாக உள்ளனர். இது பெண்களின் செயற்பாடுகளிலேயே கிராமிய பொருளாதாரம் தங்கியுள்ளது என்பதனை மிக தெளிவாக காட்டி நிற்கின்றது. இதேவேளை நிதி நிறுவனங்கள் குறித்த ஒரு செயற்பாட்டிற்காக கடனை வழங்கும்போது குறித்த அச் செயற்பாடு நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதனையும் ஆராய்தல் அவசியமான ஒன்றாக உள்ளது. நிதி நிறுவனங்கள் வெறுமனே கடனை அறவிடும் செயற்பாடுகளில் மட்டும் ஈடுபடக் கூடாது உரிய நோக்கம் நிறைவு செய்யப்பட்டதா என்பது குறித்து ஆராய வேண்டும் என குறிப்பிட்டார். இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் .ஈ.சரவணபவன் அவர்கள் மற்றும் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான த.நடனேந்திரன். த.சசிதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீர்மானத்தை நிராகரிப்பதால் திணறப்போவது இலங்கையே-யஷ்மின் சூகா-

ஐ.நா.மனித உரிமைகள் சபையுடன் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்குமானால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும். அவற்றில் பொருளாதாரத் தடையும் உள்ளடங்கலாம் என இலங்கையின் போர் மீறல்கள் தொடர்பான ஐ.நாவின் ஆலோசகர் யஷ்மின் சூகா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருப்பதும், அதனை இலங்கை அரசு உடனடியாக நிராகரித்ததும் தெரிந்ததே. அவ்வாறான ஒரு நிலை நீடிக்குமானால் என்ன நடக்கும் என்பது பற்றி கருத்து வெளியிட்டுள்ள யஷ்மின் சூகா, பொருளாதாரத் தடைகள் பல்வேறு விதமாக செயற்படுத்தப்படக் கூடும். அவை பற்றி விரிவாக இப்போது கூற முடியாது. ஆனால் சர்வதேச விசாரணைக்கு அவர்கள் இணங்க மறுத்தால் அவை மிக பாரதூரமானவையாக இருக்கும். சர்வதேச விசாரணையை நிராகரிப்பது என்பது ஆணையாளர் நவிப்பிள்ளையை நிராகரிப்பதாக கருதக்கூடாது. அது ஐ.நா. மனிதஉரிமைகள் சபையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக இருக்கும் என்று இலங்கை போர் மீறல்கள் தொடர்பான ஐ.நா ஆலோசகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

20 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை-

votingஇந்த மாகாண சபை தேர்தலில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 20 லட்சம் வாக்களர்கள் வாக்களிக்கவில்லை என்று புள்ளிவிபரவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தென் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் எண்ணிக்கை 18 லட்சத்து 73 ஆயிரத்து 804 ஆகும். எனினும் இவர்களில் 12 லட்சத்து 52 ஆயிரத்து 296 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளனர். இதன்படி தென் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 508 பேர் வாக்களிக்கவில்லை. இதனிடையே, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்களார்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 24 ஆயிரத்து 624 ஆகும். எனினும் இவர்களில் 26 லட்சத்து 69 ஆயிரத்து 316 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 15 லட்சத்து 52 ஆயிரத்து 734 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதிலும், அவர்களில் 10 லட்சத்து 21 ஆயிரத்த 188 மாத்திரமே வாக்களித்துள்ளனர். இதனிடையே கம்பஹா மாவட்டத்தில் 15 லட்சத்து 90 ஆயிரம் வாக்களர்களும், களுத்துரை மாவட்டத்தில் 8 லட்சத்து 81 ஆயிரம் வாக்களார்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், அங்கு சராசரியாக 35 வீதமானவர்களே வாக்களித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பு புலம்பெயர் அமைப்புக்கு அடிமை-சுதர்சன நாச்சியப்பன்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்தோர் அமைப்பிற்கு அடிமையாகியுள்ளதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இந்தியாவின் வர்த்தக அமைச்சர் சுதர்சண நாச்சியப்பன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதனிடையே, ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில், இந்தியாவின் பிரதிபலிப்பு சாதாரணமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்காமை தொடர்பில் இந்தியாமீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் இதற்கு பதிலளித்த நாச்சியப்பன், தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியா பாரிய ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. இந்நிலையில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காவிட்டால், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும். இலங்கை மீதான சுயாதீன விசாரணையை இந்தியா நிராகரிக்கிறது. இவ்வாறான ஒரு நிலைமை நாளை இந்தியாவுக்கும் வரலாம் என சுதர்சன நாச்சியப்பன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீதுவை தனியார் வங்கியில் கொள்ளை-

bank robbery....கட்டுநாயக்க – சீதுவை பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் இன்றுகாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முகத்தை மூடிய வண்ணம் நால்வர் இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளையிடப்பட்ட நாணய தாள்களின் தொடர் இலக்கங்கள் ஜீ கிடைக்கோடு 1239037451 தொடக்கம் ஜீ கிடைக்கோடு 1239037500 என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் இலக்கங்களுடன் ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வருமாயின் பொதுமக்கள் அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த தனியார் வங்கி முகாமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொது சுகாதர பரிசோதகர்களை நியமிக்க கோரி கவனயீப்பு-

aarpaattamவட மாகாணத்தில் உள்ள பிரதேச சபைகளுக்கு பொது சுகாதார பரிசோதகர்ளை நியமிக்க கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு முன்பாக சபையின் தலைவர் க.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் வட மாகாணத்தில் உள்ள 3 பிரதேச சபைகளில் பணியாற்றிய பொது சுகாதார பரிசோதகர்களை இடமாற்றியுள்ளமையை கண்டித்தும் அதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாகவும் இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி தேர்தல் இல்லை-ஜனாதிபதி-

2016ஆம் ஆண்டுவரை என்னிடம் ஜனாதிபதி தேர்தல் பற்றி கேட்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தென் மாகாணத்தின் டி.ஏ.ராஜபக்ஷ மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவுசெய்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்படி கூறியுள்ளார். மக்கள் இப்பொழுது புலனாய்வு தகவல்கள் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்கள் ஜனநாயகத்தினை விரும்புகிறார்கள். ஆகையினால், அவர்களின் எதிர்பார்ப்பு ஒருபோதும் வீண்போகாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா படகு விபத்து, பெண் ஊடகவியலாளரும் பலி-

journalist deadவவுனியா, மாமடு குளத்தில் படகு கவிழ்ந்து உயிரிழந்த மூவரில் ஒருவர், இளம் பெண் ஊடகவியலாளர் என அடையாளங் காணப்பட்டுள்ளார். வவுனியா, செட்டிகுளத்தை பிறப்பிடமாகவும் பட்டைக்காடை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் ஜான்ஸி (வயது 26) என்ற பெண் ஊடகவியலாளரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், இலங்கை இதழியல் கல்லூரியில் கடந்த 2010ஆம் ஆண்டு அச்சு ஊடகத்தில் கல்வி பயின்று பின், தினகரன் மற்றும் சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் ஊடகவியாளராக பணியாற்றியுள்ளார். திருமணம் முடித்து நான்கு மாதங்களே ஆன நிலையில் இவர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளார்.