இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு வரவேற்பு-
மனித உரிமை மீறப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக பிரான்ஸின் அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது. எட்டு வருடங்களுக்கு முன்னர் மூதூரில் தமது தன்னார்வத் தொண்டர்கள் 17 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவமும் மனித உரிமை மீறல்களில் உள்ளடங்குவதாக அரச சார்பற்ற அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், அதேபோன்று எமது அமைப்பும் அடைந்த வெற்றியாகும் என நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சர்ஜே பிரெய்சியை மேற்கோள்காட்டி ரொய்டர் தெரிவித்துள்ளது. நாம் நியாயம் கோரி ஏழு வருடங்களாக செயற்பட்டோம். இறுதியில் எமது சகோதரர்களின் மரணம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை கிடைத்துள்ளது. அதன்மூலம் ஒரு செய்தி தெளிவாகிறது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் என்பதே அந்த செய்தியாகும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்- பான் கீ மூன்-
இலங்கை சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐ.நா சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கியத்துவம் குறித்து கூடிய கவனம் செலுத்தியுள்ளளேன். இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், பொறுப்புக்கூறல் என்ற விடயம் அவசியமான ஒன்றாகும். ஜெனீவா யோசனைக்கு மதிப்பளித்து சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பை இலங்கை வழங்க வேண்டும் என பான் கீ மூன் கோரிக்கை விடுத்திருப்பதாக ஐ.நா செயலர் பான் கீ மூனின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் இன்னும் 82 கிலோமீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடிகள்-
82 சதுர கிலோமீற்றர் பரப்பிலேயே வடக்கில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படாதுள்ளன விரைவில் அவையும் அகற்றப்பட்டுவிடும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கண்ணிவெடி அகற்ற வேண்டிய 2004 சதுர கிலோமீற்றரில் 82சதுர கிலோமீற்றரே எஞ்சியுள்ளது. அதுவும் வனப்பகுதியாகும். கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் ஒத்துழைப்பு கிடைக்கிறது. வடக்கு கிழக்கு பகுதிகளில், மக்களை மீள்குடியேற்றக்கூடிய சகல பகுதிகளிலும் நிலகண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. இதன்படி கண்ணிவெடி அகற்றும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
காணாமல் போனோரது குடும்பங்களுக்கு ஆலோசனை-
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் தினங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதன் பொருட்டு, குறித்த தரப்பினருடன் தற்போது பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக ஆணைக்குவின் செயலர் எம். டபிள்யூ. குணதாச கூறியுள்ளார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே. சண்முகம் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை சந்திப்பார் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை வரும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன், இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இரட்டை வரிவிதிப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
15 வருடங்களின் பின் பாசிக்குடா – கொழும்பு பஸ் சேவை ஆரம்பம்-
மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து சுமார் 15 வருடங்களின் பின்னர் கொழும்பிற்கான நேரடி இரவுநேர பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பஸ் சேவை இலங்கை போக்குவரத்து சபையினால் நேற்றிரவு 8.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பாசிக்குடாவிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் நன்மை கருதியே இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வாழைச்சேனை பொது முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார்.