கல்விதான் நிரந்தர சமூக வளர்ச்சி, வவுனியாவில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-
இன்று வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மூத்த உறுப்பினர் அமரர் தோழர் கோன் அவர்களின் நினைவாக பல நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது நிகழ்வாக, வவுனியா தாண்டிக்குளத்தில் புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரான அமரர். தோழர் செல்லர் இராசதுரை (கோன்) அவர்களது நினைவாக லண்டனில் வசிக்கும் தோழர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் அமைக்கப்பட்ட பேரூந்து தரிப்பு நிலையத்தை இன்றுகாலை 10 மணிக்கு புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திறந்து வைத்தார். அவருடன் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், பிறமண்டு வித்தியாலயத்தின் அதிபர் திருமதி. மஞ்சுளா திருவருள்நேசன் மற்றும் புளொட்டின் பல சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் மேற்படி திறப்பு விழா நடைபெற்றது. இவ் திறப்பு விழாவில் அமரர். தோழர் செல்லர் இராசதுரை (கோன்) அவர்களின் சகோதரி மகேஸ்வரி மைத்துனர் தர்மகுலசிங்கம் வவுனியா பிறமண்டு வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் இரண்டாம் நிகழ்வாக புளொட் தலைவர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களால் துவிச்சக்கர வண்டியொன்று பொன்னாவரசன்குளத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் வைஷ்ணவிக்கு வழங்கிவைக்கப்பட்டது. இன்றைய ஆரம்ப நிகழ்வின்போது விருந்தினர்கள் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களினால் மாலைகள் அணிவிக்கபட்டு பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து லண்டனில் வசிக்கும் தோழர். தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பின்கீழ் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பாடசாலை வலைப்பந்தாட்ட அணிக்குரிய சீருடைகள், கூடைப்பந்தாட்ட அணிக்குரிய சீருடைகள் என்பனவற்றை வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி திருவருள்நேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் (முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் கௌரவ விருந்தினர்களாக வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் முறைசாரா பிரிவு ஆலோசகர் திரு கே.திருவருள்நேசன், கல்வி மேம்பாட்டு ஆலோசகர் திருமதி யு.சுஜாத்தா, தொழில் ஆலோசகர் திருமதி கிறேனியர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். பாடசாலை அதிபர் தனது தலைமை உரையில், பல வருட இடப்பெயர்வுகள், அகதி முகாம்கள் காரணமாக இயங்காமல் இருந்து தற்போது தமது கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்கும் இக்கால வேளையில் மனவேதனை அளிப்பது யாதெனில் எமது பாடசாலையை சூழ்ந்த கிராம மாணவர்கள் நகர்ப்புற பாடசாலைக்கு செல்கின்றனர், இதற்கு காரணம் தனிப்பட்ட இடத்தில் பாடசாலை அமைந்துள்ளதுதான். நகரத்தை அண்டிய பாடசாலையாக இருந்தும் வள பற்றாக்குறையுடன் இயங்கினாலும் லண்டனில் வசிக்கும் நாகராஜா அவர்களின் பங்களிப்பால் எமது பாடசாலை அதிக வளப்பலம் பெற்று வருகிறது. எனினும் நிரந்தர காவலாளி இன்மையால் பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்று உரையாற்றியதுடன் இதனை நிவர்த்திசெய்யுமாறு நலன்விரும்பிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்வில் உரையாற்றிய பிரதம விருந்தினரும் புளொட் அமைப்பின் தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், அமரர் தோழர் கோன் நினைவாக தோழர் நாகராஜா தொடர்ந்து செய்துவரும் உதவிகளுக்கு எமது அமைப்பின் அனைவரது சார்பிலும் நன்றியை தெரிவிக்கின்றேன். தமிழர்களில் நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் இன்றும் எமது சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. வடமாகாண மாணவர்களின் கல்விநிலை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது மிகப் பாரிய பின்னடைவை அடைந்து படிப்படியாக உயரும் இன்றையநிலையில் பலதடைகள் இருப்பினும் எமது சமூகத்தில் கல்விதான் நிரந்தர சமூக வளர்ச்சியாகும். புலம்பெயர் உறவுகளுக்கு எமது அமைப்பின் மூலம் நாளாந்தம் பல தகவல்கள் அனுப்பபட்டு உதவிகள் மேற்கொள்ளபட்ட வண்ணமுள்ளதை யாவரும் அறிவீர்கள். கல்வி வளர்ச்சிக்கு பௌதீக வளங்கள் மட்டும் அல்ல, அதிபர், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படும்போது எமது சமூகம் ஓர் உன்னத வளர்ச்சிப்பாதையில் செல்லமுடியும், எனினும் பெற்றோர்களும் கூடிய கவனம் செலுத்தவேண்டும். இன்றைய இளைஞர்களை சரியான பாதையில் கொண்டுசெல்ல நல்லொழுக்கம், கல்வி, விளையாட்டு போன்றவற்றில் அவர்களை அக்கறைகொள்ள வைக்க வேண்டும், தோல்வியும் வெற்றியும் மாறிமாறி வந்தாலும் மீண்டும் எமது சமூகம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிதான் எமது சமூக வாழ்கையை மாற்ற முடியும். இன்று எமக்கு முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் தீர்க்க முடியாவிட்டாலும், கல்வி வளர்ச்சியில் என்றும் முயற்சி எடுக்க பின்னிக்கபோவதில்லை என தெரிவித்தார். இங்கு உரையாற்றிய சிறப்புவிருந்தினர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள், எமது அமைப்பின் மூத்த உறுப்பினர் அமரர் தோழர் கோன் நினைவாக லண்டனில் வசிக்கும் தோழர் நாகராஜா அவர்களின் பங்களிப்பில் நடைபெற்றுவரும் இவ் நிகழ்வுகள் எமது கழகத்திற்கு பெருமையளிக்கிறது. 1983 காலபகுதியில் தோழர் கோன் கழகத்துடன் இணைந்து எமது மக்களுக்காக ஆற்றிய சேவைகள் அளப்பெரியது. பெற்ற தாயை அநாதை இல்லங்களில் சேர்க்கும் இக் காலத்தில் தோழர் நாகராஜாவின் உதவிகள் எமது மாணவர்களுக்கு சொல்லில் அடங்காத உதவிகள். இவ்வாறு சமூகபணியில் கிளிநொச்சி, வன்னி என பல பகுதிகளில் சேவையாற்றும் தோழர் நாகராஜா குடும்பத்தார் சீரும் சிறப்புற்று வாழ வாழ்த்தினார், இதனை சிறப்புடன் பயன்படுத்தி மாணவர்கள் சமூகத்தில் தலைநிமிர வாழ்த்துகளையும் கூறினார். சிறப்புவிருந்தினர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் உரையாற்றும்போது,
இன்றைய விழாவின் சிறப்பு விருந்தினர் எமது புளொட் அமைப்பின் தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய யாழ் மாவட்ட வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் எமது வன்னி மாவட்டத்தில் இரண்டு தடைவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து ஆற்றிய சேவைகளே இன்றும் எம் கண்முன் நகரெங்கும் காட்சியளிக்கிறது, அந்த காலபகுதியில் வவுனியா நகரசபையில் எமது அமைப்பே ஆளும் கட்சியாக இருந்தது. குறிப்பாக வவுனியா வைத்தியசாலையின் கட்டிடங்கள்,வன்னியின் அறிவொளியாய் திகழும் பொதுநூலகம், மைதானங்கள், பெரியாரின் சிலைகள் இப்படியே சொல்லிக்கொண்டு போக முடியும். இன்று 10 வருடங்கள் கடந்தும் அவையே நகரெங்கும் அபிவிருத்திபோல் காட்சியளிக்கிறது. எனினும் இன்று மக்கள் சேவைகளை மறந்ததன் காரணமாக இப்படிப்பட்ட வன்னிமண் பெருமைகாத்த இவரை யாழ் மண் பெற்று சிறப்படைகிறது. இந்த பாடசாலையில் இவ்வளவு மாணவர்கள் கல்வி கற்கிறார்கள் எனில் அதற்கு காரணமும் இவர் தலைமையிலான எமது அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட திருநாவற்குள குடியேற்றமே காரணம். இனிவரும் காலங்களில் எமது மாணவ செல்வங்கள் கிடைக்கும் உதவிகளை நன்றாக பயன்படுத்தி வளம்பெற வேண்டுமென வாழ்த்தினார். கௌரவ விருந்தினர் திருவருள்நேசன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று ஒரு மாபெரும் சேவகன் உங்கள் பாடசாலைக்கு வருகை தந்தது நல்லதோர் வரப்பிரசாதம், எதற்காக இவ்வாறு கூறுகிறேன் எனில் பலர் அறிந்த ஒன்றுதான் யாழ் கல்வியல் கல்லூரிக்கு பெரு நிலப்பரப்பை அன்பளிப்பு செய்து எமது கல்வித்தூணை தலைநிமிர்த்திய பெருமை கௌரவ தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்களையே சாரும் என தெரிவித்தார்.