தொல்புரம் அம்பாள் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்டப் போட்டி-
யாழ்ப்பாணம், தொல்புரம் அம்பாள் விளையாட்டுக்கழகம் கடந்த 31.03.2014 திங்கட்கிழமை அன்று மாலை உலக தரிசன நிறுவனத்தின் உதவியுடன் மாலைநேர கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை ஆரம்பித்தது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமண்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன்;, இரு அணியைச் சேர்ந்த வீரர்களுக்கும் கைலாகு கொடுத்து விளையாட்டுப் போட்டியினை ஆரம்பித்து வைத்தனர்.
ஜெனீவா தீர்மானத்தை அரசு ஏற்க வேண்டும்-முஸ்லிம் காங்கிரஸ்-
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அந்தத் தீர்மானத்திக்கு முகம்கொடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை நிரபராதிகள் என நிரூபிப்பதால் மட்டுமே அபாண்டமான குற்றஞ்சாட்டுபவர்களை மண்கவ்வச் செய்ய முடியும் என கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யாமல், விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் எனக் கூறுவது குற்றம்சாட்டுபவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் எனும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தக் கூடும் எனவும், குற்றச்சாட்டுகளை தைரியமாக எதிர்கொண்டு அக் குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதே சாலச் சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுளளார்.
வலிமேற்கு பிரதேச சபையில் சர்வதேச நீர் தினம்-
உலக தரிசன நிறுவனத்தின் உதவியுடன்; வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் வலி மேற்கு பிரதேச சபையில் எதிர்வரும் 08.04.2014 செவ்வாய்க்கிழமை அன்று சர்வதேச நீர் தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந் நிகழ்வில் உலக தரிசன நிறுவனப் பணிப்பாளர் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார் இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக சமுதாய மருத்துவ துறையின் தலைவர் வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமார், யாழ். பல்கலைக்கழக புவியியல்துஐற பேரசிரியர் கலாநிதி இ.இராஜேஸ்வரன், யாழ். பல்கலைக்கழக புவிவியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி பிரதீபா விபுலன், யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.பிரதீபராஜா, பொதுசுகாதார பரிசோதகர் ப.சோளன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 26 பேர் கைது-
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பயணித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் 26 இலங்கைத் தமிழர்களை அந்தமான் கரையோரத்திற்கு அப்பால் கைதுசெய்த இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினர், அவர்களை இலங்கைக்கு இன்றுகாலை திருப்பி அனுப்பியுள்ளனர். மேற்படி 26பேரும் அந்தமான் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன்பின் அந்தமான் பொலிஸார் இவர்களை விமானம்மூலம் இலங்கைக்கு அனுப்பிவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 26 இலங்கையர்களுடன் பயணித்த இப்படகை 02 நாட்களுக்கு முன் ரோந்தில் ஈடுபட்டிருந்த கரையோர பாதுகாப்புப் பிரிவினர் இடைமறித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் இலங்கைக்கு உணவு மானியம் வழங்கியது-
ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 203 மில்லியன் ரூபாய் பெறுமதியான உணவு மானியத்தை வழங்கியுள்ளது. உலகு உணவுத் திட்டத்தின்கீழ் இந்த மானியம் வழங்கப்பட்டிருப்பதாக ஜப்பானிய தூதரகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை உணவுத் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்துக்கு உதவும் வகையில் இந்த மானியம் ஜப்பானினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பொதி செய்யப்பட்ட மீன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடல் வள பாதுகாப்பு கூட்டம்-
கடல்வள பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தொடர் ஒன்று அமெரிக்க நிவ்யோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் இடம்பெற்று வருகிறது. சர்வதேச கடல்வள மீளுருவாகத்தை உறுதிப்படுத்தும் வகையிலான சர்வதேச பொறிமுறை ஒன்றை ஆராயும் பொருட்டு, இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இக் கூட்டத்துக்கான இணை தலைமை உறுப்பினராக ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித்த கோஹன செயற்படுகின்றார்.
ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க விஜயம்-
அமெரிக்கா மெசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் சர்வதேச மாநாட்டில் உரையாற்றுவதற்காக தாம் அங்கு செல்லவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான அழைப்பிதழ் தமக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிடைக்கப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், மனித உரிமைகள் மாநாடு நிறைவடையும் வரை மேற்கத்தைய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளாதிருப்பதற்கு தாம் தீர்மானித்து இருந்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டால் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல முடியும்-
போர்குற்றம் புரியப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றுக்கு இலங்கையை அழைத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிய அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் இலங்கைமீது அவதானத்தை அதிகரிக்க வேண்டும் என, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவகத்தின் தலைவர் ஹெலீனா கெனடி தெரிவித்துள்ளார். இலங்கையின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தும் பிரேரணையை சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்கிறது. எவ்வாறாயினும் மனித உரிமைகள் மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலேயே இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இவை மிகவும் கண்டனத்துக்கு உரியவை. எனவே சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் இலங்கை தொடர்பில் எச்சரிக்கையுடனும் மிகுந்த அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும் தாம் வலியுறுத்துவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.