தொல்புரம் சக்தி முன்பள்ளி சிறுவர் விளையாட்டுப் போட்டி-
யாழ். தொல்புரம் மத்திய சனசமூக நிலையத்தின் சக்தி முன்பள்ளியின் 2014ம் ஆண்டுக்கான சிறுவர் விளையாட்டுப் போட்டிகள் தொல்புரம் பொக்கனை விளையாட்டு மைதானத்தில் சனசமூக நிலையத் தலைவர் ச.சதீஸ்வரன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் ஆற்றிய உரை,
இன்று நாம் ஒரு மாறிவரும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம். இவ் நிலையில் எமது இனம் பல சவால்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளது. காலம் காலமாக நாம் காத்துவந்த பல பண்பாட்டு அம்சங்கள் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலை தொடருமாக இருந்தால் எமது இனத்தினுடைய இருப்பு கேள்விக்கு உள்ளாக நேரிடலாம். இந் நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றுவது காலத்தினுடைய கட்டாயம் ஆகும். இன்று எமது கைகளுக்கு கட்டுப்பட்டு நிற்கின்ற இந்த சிறார்களே நாளைய எமது சமுதாயத்தின் தூண்கள் இவர்களை நாம் சரியாக வழிநடத்த தவறும் சந்தர்ப்பத்தில் இவர்கள் தவறான பாதையைநோக்கி திரும்பப்படலாம். திட்டமிட்ட வகையில் பல கவனக்கலைப்பான்கள் எமது பகுதியில் உருவாக்கி விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் ஒரு இலட்சியத்தினை நோக்கி உங்கள் பிள்ளைகள் நகர ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு உயரிய இலட்சியம் அவர்கள் மனதில் விதைக்கப்படவேண்டும் இந்நிலை அவர்களை வாழ்வில் உயர்வடைய செய்யும். இப் பகுதியில் பல கல்விமான்கள் காணப்படுகின்றனர். அவர்களையே முன் மாதிரியாக கொள்ள முடியும். இன்றைய மிக நெருக்கீடான சூழலில் வெறும் பொருளாதார தேற்றத்திற்கே நாம் அனைவரும் முக்கியத்துவம் அளிக்கின்றோம். இந்நிலையில் பிள்ளைகளின் கல்வி மற்றும் விளையாட்டுமீதான ஆர்வம் குறையும் நிலை உருவாகின்றது. இது ஆரோக்கியமான ஒர் நிலை அல்ல. இதேவேளை நாம் இன்று புத்தக கல்விக்கே அதிக முக்கியத்துவம் வழங்குகின்றோம். விளையாட்டிலும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் முழுமையான கல்வி பெறப்படும் என குறிப்பிட்டார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கலாச்சார உத்தியோகஸ்தர் வி.குணபாலா, சங்கானை கோட்டக் கல்விப்பணிப்பாளர் செல்வி எஸ் மரியாம்பிள்ளை, தொல்புரம் அ.த.க.பாடசாலை அதிபர் வி.சிவநேசன், யூனியன்ஸ் அசுரன்ஸ் சங்கானை கிளை முகாமையாளர் எம்.கஜமுகன், வலிமேற்கு முன்பள்ளி இனைப்பாளர் செல்வி நா.நிறஞ்சனா மற்றும் தொல்புரம் கலாலயம் மன்றத் தலைவர் மு.சடாச்சரம் உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.