தமிழ் மக்களைப் பொறுத்தவரை முன்னேற்றகரமான தீர்மானம்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

Sithar ploteஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்க அனுசரணைடனான தீர்மானம் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் வரவேற்கத்தக்க முன்னேற்றகரமானதொன்றாகும் என புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவினால் மூன்றாவது தடவையாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க அதேவேளை முன்னைய தீர்மானங்களை விட முன்னேற்றகரமானதுமாகும். இருந்தபோதும் இத்தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருக்கின்றது. இது தொடர்பில் ஐ.நா என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றத என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டிய நிலைமை இருக்கின்றது. மேலும், இந்தியா இம்முறை வாக்களிக்காது நடுநிலைமை வகித்தது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஏமாற்றமாக இருந்தாலும் அவர்கள் என்ன காரணத்திற்காக வாக்களிக்கவில்லை என்பது குறித்து இந்தியா சரியானதொரு, தெளிவான பதிலைக் கூறவில்லை. இந்தியா மிக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு நேரடியாக ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றபோதிலும் இம்முறை வாக்களிக்காதது ஒரு புரியாத ஏமாற்றமாகவே இருக்கின்றது. ஆகவே, இது தொடர்பில் நாம் இந்திய அதிகாரிகளுடன் பேசி தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைமையை உருவாக்க வேண்டும்.
மேலும், இந்தப் பிரேரணை மூலம் இலங்கை அரசுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஐ.நா கொடுத்திருப்பதாகவே நான் பார்க்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை சரியாகப் பயன்படுத்தி நியாயமான விசாரணையொன்றை நடத்த முன்வருவதுடன், மனித உரிமைகள் பேரவைக்கு ஆதரவு வழங்கி தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்க முன்வரவேண்டும். அதைவிடுத்து. தீர்மானத்தை நிராகரிக்கிறோம். சர்வதேசத்துடன் ஒத்துழைத்துச் செல்லமாட்டோம் என்று இலங்கை, வருகின்ற சந்தர்ப்பங்களையெல்லாம் தட்டிக்கழித்துக் கொண்டிருக்குமானால் முழு நாட்டையும் சிக்கலானதொரு நிலைக்குத்தான் கொண்டுசென்று விடும் என்றார்.