தீர்மானம் குறித்து மிஷேல் வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கம்-

இலங்கைமீது ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷேல் ஜே.சிஸன் நேற்று விளக்கியுள்ளார். மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகம், மனித உரிமைகள் தொடர்பான இலங்கைமீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டுமென கூறினும், இலங்கையில் சுயாதீனமான நம்பகமான விசாரணை இலங்கைக்கு நன்மையானதாக அமையுமென அவர் கூறியுள்ளார். இந்த தீர்மானம் காரணமாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவில் எந்த மாற்றமும் ஏற்படாதெனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் வடக்கு கிழக்கில் மனித உரிமை பிரச்சினைகள், ஊடகவியலாளர்கள்மீதான தாக்குதல்கள், சிறுபான்மை மதத்தினர்மீதான தாக்குதல்கள் போன்ற விடயங்களும் முன்னேற்றமின்றி அப்படியே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேல் மற்றும் தென் மாகாண சத்தியப்பிரமானங்கள்-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமானம் செய்து கொண்டுள்ளனர். இரு மாகாணசபைகளிலும் முன்னாள் முதலமைச்சர்களான ஜான் விஜேலால் டி சில்வா மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் சந்திப்பிரமாணம் செய்துகொண்;டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இதுதவிர, ரஞ்சித் சோமவன்ச, நிமல் லன்சா, உதய கம்மன்பில மற்றும் உபாலி கொடிகார ஆகியோர் மேல்மாகாண சபையின் அமைச்சர்களாக நியமனம் பெற்றுக்கொண்டனர். இதனிடையே, தென் மாகாண சபையின் அமைச்சர்களாக டி.வி.உப்புல், யு.டி.ஆரியதிலக்க மற்றும் சந்திமா ராசபுத்ர ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இதற்கு மேலதிகமாக மாகாண சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து தெரிவாகிய உறுப்பினர்களும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் படையினர் குடும்ப விபரங்கள் சேகரிப்பு-

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடும்பங்களின் விபரங்களை இராணுவம் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை, சித்தங்கேணி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 01ஆம் திகதி தொடக்கம் குடும்பங்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பொதுமக்களின் விபரங்கள் மற்றும் குடும்பத் தகவல்களைத் திரட்டும் பொருட்டு சுமார் 42வினாக்கள் அடங்கிய வினாக்கொத்து இராணுவத்தினரால் பூர்த்தி செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

முல்லைத்தீவில் எறிகணைகள் மீட்பு-

முல்லைத்தீவு, கற்சிலைமடு பகுதி கிணறொன்றிலிருந்து 17 எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் அவ்விடத்தில் ஆயுதங்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் தேடுதல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கற்சிலைமடுவிலுள்ள வீட்டு கிணற்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டினை வாடகைக்கு எடுத்த நிறுவனமொன்று வீட்டின் கிணற்றினை துப்புரவு செய்யும் வேளையிலேயே மேற்படி எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.