பிரேரணையுடன் ஒத்துழைத்து செயற்பாட்டால் இலங்கைக்கே நன்மை-மிச்சேல் ஜே சிசோன்-

ஐக்கிய நாடுகளில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையைத் தொடர்ந்து, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கம் இடையிலான ராஜதந்திர உறவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே சிசோன் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதகரத்தின் இணையத்தளத்தில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தாம்இலங்கை தொடர்பில் கவலை வெளியிட்டிருந்த மறுசீரமைப்பு செயற்பாடுகளின் முன்னேற்றமின்மை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்கதல்கள் போன்றன இந்த வருடமும் கவலைக்குறிய விடயங்களாக இருக்கின்றன. துரதிஸ்டவசமாக இந்த வருடமும் அவற்றில் மாற்றம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும் இலங்கை மக்களின் சுபீட்சமான எதிர்காலத்துக்காக, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் இணைந்து ஒத்துழைத்து செயற்பட அமெரிக்கா தயாராக இருக்கிறது. இதேவேளை சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு கோரியுள்ள அமெரிக்காவின் பிரேரணையுடன் இலங்கை ஒத்துழைத்து செயற்படுவதால், இலங்கைக்கு நன்மைகளே ஏற்படும் என்று மிச்சேல் ஜே சிசோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பிரேரணையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை-

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை முழுமையாக அமுலாக்கப்பட்டு, சர்வதேச விசாரணை நடைபெறுவதற்கு, சர்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் பொறுப்புக்கூற வேண்டிய செயற்பாடுகளும், மனித உரிமை மற்றும் மீளமைப்பு செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இந்த செயற்பாடுகள் இலங்கையை நிலையான சமாதத்துடன் கூடிய பலமான நாடாக மாற்றும். இந்நிலையில் அவற்று வழி செய்யும் வகையில், அமெரிக்காவின் பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்பு என்பவற்றின் உறுப்பு நாடுகளுடன் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என டேவிட் கெமரோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம்-வை.கே.சின்ஹா-

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. இதற்காக இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைத்து நடக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

கொடிகாமத்தில் தனியார் பேருந்து வழிமறித்து சோதனை-

யாழ். பருத்தித்துறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் மர்மப்பொருள் இருப்பதாகக் தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து அந்த பேருந்து கொடிகாமத்தில் வைத்து வாகனத்தில் வந்த பொலிஸாரினால் இன்று சோதனையிடப்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த பயணிகள் இறக்கப்பட்டு அவர்களின் உடமைகள் அனைத்தும் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இன்றுகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையினால் அவ்விடத்தில் பதற்றநிலைமை ஏற்பட்டிருந்தது. அந்த பஸ்ஸிலிருந்து எவ்விதமான மர்மப் பொருட்களும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்காமை அரசியம் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு-

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை குறித்து, இந்தியா வாக்களிக்காதிருக்க மேற்கொள்ளப்பட்ட முடிவானது, அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்டது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் நலன் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே வெளிவிவகார செயலர் சுஜாதா சிங் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தமிழர் ஆதரவு அமைப்புகள் மௌனம்-

எதிர்வரும் லோக்சபா தேர்தல் தொடர்பில், தமிழகத்தில் இயங்கும், ஈழ ஆதரவு அமைப்புகள் இன்னும் தங்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இம்மாதம் 24ம் திகதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. எனினும் இந்த தேர்தல் நிமித்தம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அங்கு செயற்படுகின்ற அமைப்புகள் தங்களின் செயற்பாடுகளை இன்னும் வெளிப்படுத்தாதிருக்கின்றன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மே 17 இயக்கம், தங்களின் இறுதி நிலைப்பாட்டை இன்னும் தீர்மானிக்கவில்லை என கூறியுள்ளது. அதேநேரம் ஜெயலலிதாவின் அனைத்திந்திய அ.தி.மு.கவுக்கு ஆதரவளிப்பதாக நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

வட மாகாணத்தில் 9982 மாணவர்கள் சித்தி-

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளில் வட மாகாணத்தில் 9982 பேர் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி தமிழ் பாடசாலைகளில் முதலிடத்திலும் அகில இலங்கை ரீதியில் ஆறாவது இடத்திலும் உள்ளது. நடந்து முடிந்த 2013ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இம்முறை வடக்கில் 65.33வீத மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதன்படி கடந்த 2013ஆம் ஆண்டில் வட மாகாணத்தைப் பொறுத்த வரையில் 15ஆயிரத்து 820பேர் பரீட்சைகளுக்கு தோற்றி 9ஆயிரத்து 982பேர் உயர்தரத்திற்கு தகுதியடைந்துள்ளனர். வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் 8396 பரீட்சார்த்திகளும், வவுனியாவில் இருந்து 2478 பேரும், மன்னாரிலிருந்து 1517 பேரும், முல்லைத்தீவிலிருந்து 1318 பேரும், கிளிநொச்சியிலிருந்து 1571 பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர். அதேபோல் இம்முறை சாதாரண தரப் பரீட்சைகளில் வட மாகாணத்தினை பொறுத்தவரையில் 131பேர் அனைத்து பாடங்களிலும் சிறப்பு சித்திபெற்றுள்ளதோடு 356பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பரீட்சையில் சித்தியடைந்த வீதத்தின்படி பாடசாலை மட்டத்தில் ஒப்பிடுகையில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரி அகில இலங்கை ரீதியில் ஆறாவது இடத்திலும் தமிழ் பாடசாலைகள் அடிப்படையில் முதல் இடத்திலும் உள்ளது. அதேபோல் யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு பாடசாலையான யாழ். இந்துக் கல்லூரி அகில இலங்கை ரீதியில் 27வது இடத்தில் உள்ளது. அதேபோல் மாகாண அடிப்படையில் நோக்குகையில் சாதாரணத்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பரீட்சார்த்திகளின் விகிதாசாரத்தின்படி கொழும்பு மாவட்டம் முதல் இடத்தில் உள்ள நிலையில் வவுனியா மாவட்டம் மூன்றாவது இடத்திலும், மன்னார் மாவட்டம் நான்காவது இடத்தையும், யாழ். மாவட்டம் எட்டாவது இடத்தையும், முல்லைத்தீவு மாவட்டம் 24வது இடத்தையும், கிளிநொச்சி மாவட்டம் 25வது இடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டு பெறுபேறுகளின்படி மாகாண அடிப்படையில் 8வது இடத்தில் வட மாகாணம் இருந்த போதிலும் இம்முறை பெறுபேறுகளின் அடிப்படையில் ஆறாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.