நிறைவேற்றப்பட்ட பிரேரணை அமெரிக்காவின் வஞ்சக செயற்பாடு-ரஜீவ விஜேசிங்க-
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது, அமெரிக்காவின் வஞ்சக செயற்பாடு என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க அல்ஜெசீரா ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். அமெரிக்கா தமது வஞ்சமான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த பிரேரணையை தந்திரமாக நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இதில் உள்ளடக்கப்பட்டுள்ள பெரும்பாலான விடயங்கள் பிரேரணைக்கு தேவையற்றவை. மதங்கள் மீதான அடக்குமுறை, மனித உரிமைமீறல் போன்ற விடயங்கள் தொடர்பில் அனைத்து நாடுகளையும் அறிக்கைப்படுத்தினால், அமெரிக்காவும் சிக்கலுக்குள்ளாகும் என்றார் அவர். இதேவேளை அல்ஜெசீராவுக்கு கருத்து வெளியிட்டுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத் தலைவர் பாக்கிசோதி சரவணமுத்து, இந்த பிரேரணை ஊடாக எவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமா? என்பதும் ஒரு சவாலான விடயமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது தொடர்பில் பதில் இல்லை-
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் நடத்துவது குறித்து இந்திய அரசாங்கம் இன்னும் பதில் கூறாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீன்பிடித்துறை திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையில் கடந்த ஜனவரியில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு தமிழக அரசு எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து மீனவர்களும் ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் இரண்டு தடவைகள் கோரிக்கைளை முன்வைத்திருந்த போதும், இந்திய அரசாங்கம் இன்னும் பதில் கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இலங்கை மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ள துரித திட்டம்-
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் அமைப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002-2009ஆம் ஆண்டுக்கிடையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரிய தீர்மானம் கடந்த மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கென விசேட நிபுணர்குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இவ் விசேடகுழு அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இக்குழு தனது விசாரணைகளை துரித கதியில் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையில் 27வது அமர்வின்போது இந்த குழு வாய்மொழிமூலமான அறிக்கையை முன்வைக்கவுள்ளது. இதன் பின்னதாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடரில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென கூறப்படுகிறது.
வில்பத்து பகுதியில் குடியேறிய முஸ்லிம்களை வெளியேறுமாறு உத்தரவு-
வில்பத்து வன விலங்குகள் சரணாலயம் மற்றும் வில்பத்து வனப்பாதுகாப்பு பிரதேசங்களில் அத்துமீறி குடியேறியிருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு வனவள பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. அவ்வாறு வெளியேறாவிட்டால் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் வனவள பாதுகாப்பு பிரதேசத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து திணைக்கள அதிகாரிகள் இக்குடும்பங்கள் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்துக்கு சொந்தமான இடத்திலா அல்லது அதற்கு வெளியிலா குடியேறியுள்ளனர் என்பதைக் கண்டறிய கடந்த வாரம் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது இக்குடும்பங்கள் சரணாலயத்துக்கும் வனவளப் பாதுகாப்பு பிரதேசத்திலும் குடியேறியிருப்பதாக தெரியவந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சகோதர மொழிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு விசா வழங்குவது குறித்து முடிவில்லை-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக் குழுவுக்கு நாட்டுக்குள் வருவதற்கு விசா வழங்குவது குறித்து இன்னும் அரசாங்கம் முடிவெடுக்கவில்லை என வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவிக்கின்றார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக் குழுவுக்கு விசா வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் விசாரணைக்குழு தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் விசா வழங்குவது குறித்து எதுவும் கூறமுடியாதெனவும் பிரதியமை;சசர் நியோமல் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடரும் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களின் பகிஷ்கரிப்பு-
குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இப் பணிப் பகிஷ்கரிப்பினால் கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்களுக்கான சிகிச்சைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பிரிவுப் பணிப்பாளர் டொக்டர் தீப்தி பெரெரா குறிப்பிட்டுள்ளார். பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் இரு தரப்பினருக்கும் தெளிவுபடுத்தியுள்ள போதிலும் அவர்கள் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகளை வழங்குவது தொடர்பிலும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவத்தாதி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மகப்பேற்று பயிற்சியை நிறுத்துமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயம்-
பாகிஸ்தானின் பாதுகாப்பு படையணிகளின் இணைத் தலைமைத் தளபதி ஜென்ரல் ரஷாட் மஃமூட் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அவர் தளபதியாக பதவி ஏற்றதன் பின்னர் மேற்கொள்ளப்படும் முதலாவது விஜயம் இதுவென கூறப்படுகிறது. இலங்கையின் இராணுவத்தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவின் அழைப்பிற்கமைய இலங்கைவரும் அவர் எதிர்வரும் 11ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் அவர் தங்கியுள்ள காலப்பகுதியினில், பாதுகாப்பு மற்றும் அரசியல் உயர் மட்ட தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அதேவேளை, இலங்கையின் பல பாகங்களில் உள்ள பாதுகாப்பு படைத்தளங்களுக்கும் அவர் விஜயம் செய்வார் என பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அதிக வாகன பரிமாற்றம்-
ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் ஊடான வாகன பரிமாற்று வர்த்தகம் முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த இரண்டு வருடங்களில் இந்த துறைமுகத்தில் 79 ஆயிரத்து 147 வாகனங்கள் பரிமாற்றப்பட்டுள்ளன. அத்துடன் 36 ஆயிரத்து 401 வாகனங்கள் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் ஊடாக இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்ப்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இவ்வாறான அதிக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கே இந்த துறைமுகத்தின் ஊடாக அதிக அளவில் வாகன பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு ஜனநாயக கட்சி கோரிக்கை-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபைக்கான விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையாளரை கடிதமொன்றின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது. விருப்பு வாக்குகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு 72மணித்தியாலங்களுக்கு பின்னர் விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டு மற்றுமொரு பட்டியல் வெளியிடப்பட்டதே காரணமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையாளரிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால் இது குறித்து நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் ஏ. மானவடு தெரிவித்துள்ளார்.
தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் வீதியில் விநாயகர்சிலை உடைப்பு-
மன்னார் மாவட்டத்தின் தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் (ஏ32) பிரதான வீதியோரத்தில் அமைந்திருந்த விநாயகர்சிலை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் இன்றுகாலை முறைப்பாடு செய்துள்ளதாக இந்துமத பிரதம குரு ஐங்கர சர்மா தெரிவித்துள்ளார். தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியோரத்தில் பல வருடங்களாக வீற்றிருக்கும் மேற்படி விநாயகப் பெருமானுக்குரிய பூஜை வழிபாடுகளை திருக்கேதீஸ்வர கிராம மக்கள் மேற்கொண்டு வந்தனர். அத்துடன், மேற்படி வீதியூடாக பயணிக்கும் மக்களும் இந்த விநாயகப்பெருமானை வழிபட்டு வந்தனர். இந்நிலையிலேயே நேற்றிரவுஇனந்தெரியாதோரினால் மேற்படி விநாயகர்சிலை சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி வீதியூடாகச் சென்ற மக்கள் விநாயகப்பெருமான் சிலை சேதமாக்கப்பட்டுள்ளமையைக் கண்டு தமக்குத் தெரியப்படுத்தியதாகவும் இந்துமத பிரதம குரு ஐங்கர சர்மா மேலும் கூறியுள்ளார்.
ஆஸி. செல்ல முயற்சித்த 26பேருக்கும் ஒரு கோடி ரூபா பிணை-
ரோலர் படகொன்றில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டபோது இந்தியாவின் அந்தமான் தீவு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 26 பேரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஐ.எம்.பண்டார கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கோடி ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர். இவர்களில் 20பேர் வயது வந்;தவர்களாவர். ஆறு பேர் சிறுவர்களாவர். பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் கடந்த வருடம் ஜுலை 14ஆம் திகதி அம்பாந்தோட்டை கிரிந்த பிரதேசத்திலிருந்து ரோலர் படகொன்றின் மூலமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக 31-7-2013 அன்று குறித்த படகு அந்தமான் தீவில் கரையொதுங்கியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட 26 பேரும் ஸ்பை ஜெட் விமானம் மூலமாக கடந்த புதன்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் பல இலட்சம் ரூபா பணத்தை செலுத்தி அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள கட்டுநாயக்க பிரிவினர் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, மேலதிக நீதவான், 20 பேரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும், சிறுவர்கள் அறுவரையும் பிணையின்றியும் விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.