பிரதி தலைவர் பதவியிலிருந்து குமரகுருபரன் நீக்கம்-
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் பதவியிலிருந்து நல்லையா குமரகுருபரன் நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரின் கட்சி அங்கத்துவமும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என அக்கட்சி அறிவித்துள்ளது. இதன்படி ஜனநாயக மக்கள் முன்னணியை தேசிய ரீதியாகவும் சர்வதேசிய ரீதியாகவும் எந்த ஓர் ஊடக, சமூக, அரசியல் தளத்திலும் பிரதிநிதித்துவம் செய்யும் தகைமை உடனடியாக என்.குமரகுருபரனிடம் இருந்து அகற்றப்படுகிறது என்று அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக ஏற்றுக்கொள்ளாமை, பொறுப்புவாய்ந்த பிரதி தலைவர் பதவியில் இருந்தபடி கட்சியின் அரசியல்குழு எடுக்கும் தீர்மானங்களை ஊடகங்களில் பகிரங்கமாக விமர்சனம் செய்தமை, தேர்தலின்போதும் தேர்தலின் பின்னரும் கட்சியில் தனக்கு இருக்கும் கூட்டுப்பொறுப்பை பகிரங்கமாக மீறியமை மற்றும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களை முன்வைத்தே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குமரகுருபரன் நீக்கப்பட்டதையடுத்து கட்சியின் உபதலைவர் வெற்றிடத்துக்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக கடமையாற்றிய வேலணை வேணியன், நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தருபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்-
பொலிஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தொடர்பில் சரியான தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. கோபி, இவர் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் கஜீபன் பொன்னையா செல்வநாயகம் அல்லது காசியன் என அழைக்கப்படுவதுடன், 31 வயதுடைய இந்த நபர் 6 அடி உயரமும் பொது நிறமும் கொண்டவர். அப்பன். இவர் புலிகள் இயக்கத்தின் புலனாவுப் பிரிவின் நவரெத்தினம் நவநீதன் அல்லது அப்பன் என அழைக்கப்படுவதோடு 36 வயதுடைய இவர் 5 அடி 2 அங்குலம் உயரமுடையவர். தேவன். இவர் ராதா படையணியின் விமானி என்பதோடு, அனுராதபுரம் விமானப்படை முகாமை தாக்கிய நபர்களில் இவரும் ஒருவர். இவர் தேவன் என அழைக்கப்படுகிறார். இவர்கள் பற்றிய ஏதேனும் தகவல் கிடைக்குமிடத்து 0112451636 எனப்படும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 0112321838 எனப்படும் தொலைநகல் ஊடாகவோ தகவல் தரும்படி பொலிஸார அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நந்தகோபனிடம் தொடர்ந்து விசாரணை-
மலேஷியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட புலிகள் அமைப்பின் சந்தேகநபர் நந்தகோபனிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக்காவலின்கீழ், சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறியுள்ளார். புலிகள் அமைப்பின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய புலி உறுப்பினரான நந்தகோபன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைதுசெய்யப்பட்டார். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி, வெளிநாடு செல்ல முயற்சித்தபோது, மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டு, ஆறு மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த நந்தகோபன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். யுத்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் இலங்கையில் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து நந்தகோபனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என பொலீஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம்-அமைச்சர் பீரிஸ்-
ஐக்கிய நாடுகளின் சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காதென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் வெளிவிவகார அமைச்சர் இவ்விடயத்தினை கூறியுள்ளார். சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் நியாயம் உள்ளிட்ட சிக்கல்களினால் ஐ.நாவின் விசாரணையை, அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அரசின் ஒத்துழைப்பு இல்லாது, விசாரணைகளுக்காக எவரும் நாட்டிற்கு வருகைத்தர முடியாது என அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் வெடிபொருட்கள் மீட்பு-
மட்டக்களப்பு வாகனேரி மாந்திராறு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சட்டவிரோத வெடிபொருட்கள் இன்றுகாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மெகசீன்களும், டீ-55 ரக குண்டுகள் சிலவும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் புதைகுழி, பண்டைய மயான பூமி-
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அடங்கிய புதைகுழி, ஒரு தொகை சடலங்களை ஒருங்கே கொண்ட மனிதப் புதைகுழி அல்லவென தொல்பொருள் அகழ்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேசிய மரபுரிமங்கள் தொடர்பான அமைச்சர் ஜகத் பாலசூரிய இத்தகவலை வெளியிட்டுள்ளார். குறித்த மனித எச்சங்கள் 1930ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதைக்கப்பட்டவையாகும். அது பண்டைய மயான பூமி எனவும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையுடன் விமான சேவை-
அபுதாபியை தளமாகக் கொண்டுள்ள ரொட்டனா ஜெட் விமான சேவை இலங்கையுடனான விமான சேவையினை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் ஊடாக கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையங்கள் சர்வதேச ஜெட் சேவையுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியின் அல் பற்றீன் விமான நிலையத்தில் இருந்து வாரத்திற்கு மூன்று சேவைகளை இலங்கையுடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மலேசிய விமானம் மாயமாகி ஒரு மாதம் நிறைவு-
மலேசியா பயணிகள் விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. விமானம் கடலுக்குள் விழுந்ததாக அறிவிக்கப்பட்டாலும் அதற்கான தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. விமான கருப்புப் பெட்டியின் பேட்டரி இன்றுடன் செயலிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அதை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக அவுஸ்திரேலிய அரசு, இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து சில சிக்னல்களை கண்டறிந்ததாக கூறியது. விமான கருப்புப் பெட்டியிலிருந்து வரும் சிக்னல்களாக கருதப்பட்டு, அதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பெர்த் பகுதிக்கு வடமேற்கே உள்ள கடல் பகுதியில் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மலேசிய பயணிகள் விமானம், சிலமணி நேரங்களிலேயே காணாமல் போனது. பல்வேறு விசாரணைகளை அடுத்து, செயற்கைக் கோள்களின் தகவல்கள் அடிப்படையில் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசியா அறிவித்தது. இந்நிலையில், பயணிகளின் நிலை பற்றி எதுவும் தெரியவராததால், உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடலுக்குள் விமானம் விழுந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானோர் அதனை ஏற்க மறுக்கின்றனர்.