சர்வதேச கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்-பிரித்தானியா

imagesCA5L8U3Dஇலங்கை அரசு சர்வதேச சமூகத்தினரின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளதோடு, இலங்கை சர்வதேச சமூகம் தெரிவித்துள்ள விடயம் தொடர்பிலும், மேற்கொள்ள வேண்டிய விடயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைகளின் ஊடாக இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் நல்லாட்சியுடன் கூடிய நாடொன்றை உருவாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. விசாரணையை இந்தியா விரும்பவில்லை-சுஜாத்தா சிங்-

sujatha singhஇலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விசாரணை செய்வதை இந்தியா விரும்பவில்லை என மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாத்தா சிங் சீ.என்.என். செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், உள்ளக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இதனை விடுத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை தமது வரையறைக்கு அப்பாற்பட்டு இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்ள முனைகின்றது. இதனை இந்தியா விரும்பவில்லை. இதேவேளை, தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதையே இந்தியா எதிர்பார்க்கிறது என்பதை இலங்கை நன்றாக அறியும். எனவே, இலங்கையுடன் சிறந்த உறவை பேணுவதை இந்தியா தொடர்ந்து முன்னெடுக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

வட மாகாணசபை செயற்பாட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும்-அமைச்சர் திஸ்ஸவிதாரண-

Tissaவடமாகாண சபையின் செயற்பாட்டுக்கு மத்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவித்தாரன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக தற்போது சர்வதேச அழுத்தங்கள் மேலோங்கியுள்ளன. இதனைத் தவிர்த்துக் கொள்வதற்கு வடமாகாண சபையுடன் மத்திய அரசாங்கம் ஒத்துழைத்து செயற்பட வேண்டும். அத்துடன் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு வினைத்திறனாக செயற்படுவதற்கு, தமிழ் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இதன்மூலமே சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்களை கட்டுப்படுத்த முடியும். நடைபெற்று முடிந்த தேர்தலில் பொதுமக்கள் அரசாங்கத்துக்கு சமிக்ஞை ஒன்றை வழங்கி இருக்கின்றனர். அதனை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியோரை தண்டிக்க தீர்ப்பாயம்-

Jathika Hela Urumayaதமிழ் பிரிவினைவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் தண்டனை பரிந்துரை செய்யவென தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பு, பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன் பிரதிப் பொதுச் செயலாளர், மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். தீர்ப்பாயத்தின் மூலம் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சிகள் மற்றும் அறிஞர்களுக்கு தண்டனை பரிந்துரை செய்யப்பட வேண்டும். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின் அதனுடன் தொடர்புடை அனைத்து தரப்பினரையும் அழிப்பது மேற்குலக வழக்கம். ஆனால் இலங்கை பௌத்த வழக்கத்தின்படி மன்னிப்பு அளித்து மறந்துவிட தீர்மானித்தோம். மேலும் ஆயுத போராட்டத்தின் பின் அதன் அரசியல் பிரிவை தடை செய்யாதிருந்த ஒரே நாடு இலங்கையாகும். சர்வதேச அழுத்தத்தின் மத்தியில் உண்மை கதையை சொல்ல வேண்டியுள்ளதால் தீப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

புலிகளை மீள் கட்டியெழுப்ப உதவிய 65 பேர் கைது-பொலீஸ் பேச்சாளர்-

imagesCA47OAWZபுலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்ததாகக் கூறப்படும் 65 பேர் கடந்த 2 மாதங்களில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்குப் பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதில் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 பெண்களில் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு பணம் இவர்களிடம் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அனைத்து மாகாணங்களுக்கும் விசேட நீதிமன்றங்கள்-அமைச்சர் ஹக்கீம்-

Hekeemசிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக துரிதமாக விசாரிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாகாணங்களிலும் விஷேட நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் தற்பொழுது கொழும்பு, யாழ்ப்பாணத்தில் விஷேட நீதிமன்றம் செயற்படுவதுடன் கண்டி மற்றும் குருநாகலிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளின் இரகசிய தன்மைகளைப் பாதுகாக்கும் வகையில் பிரத்தியேக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. பொதுவாக வழக்ககளில் சந்தேகநபர்களின் புள்ளி விபரங்கள் பேணப்படுகின்ற போதிலும் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் கற்பழிப்பு தொடர்பான குற்றவாளிகள் தொடர்பில் புள்ளிவிபரங்கள் பெறமுடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதிகளுக்கு தொலைபேசி வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை-

telephone facilities for jailசிறைக் கைதிகளுக்கு தொலைபேசி அழைப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் அமைக்கப்படவுள்ள விசேட தொலைபேசி கூடத்தில் சிறைக் கைதிகள் அழைப்புகளை எடுக்க முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். சிறைக்குள் இருந்து கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த இத்திட்டம் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உறவினர்களுடன் உரையாட வாய்ப்பு இல்லாததால் கைதிகள் சட்டவிரோதமான முறையில் கைத்தொலைபேசி பயன்படுத்துகின்றனர். திட்டத்தின் ஆரம்பமாக நாளை கொழும்பின் வெலிக்கடை சிறையில் தொலைபேசி கூடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. தொலைபேசி அழைப்பு எடுக்கும் கைதியின் கைவிரல் அடையாளம் பதிவு செய்யப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள்-

imagesயாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் 5 கடைகள் உடைக்கப்பட்டு சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ள அதேவேளை மேலும் நான்கு கடைகளில் திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். நல்லூர் ஆலயச்சூழலில் நேற்றிரவு இடம்பெற்ற மேற்படி திருட்டுச் சம்பவத்தையடுத்து பெருமளவான பொலிஸார் பிரசன்னமாகியதோடு இராணுவத்தினரும் அங்கு சென்றிருந்தனர். தீவிர விசாரணைகளை மேற்கொண்ட யாழ் பொலிஸார் தடயவியல் நிபுணர்களையும் அழைத்து தேடுதல் நடத்தினர். இதன்போது திருடர்கள் கொண்டு வந்ததாக நம்பப்படும் மதுபான டின் ஒன்று மட்டுமே பொலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை திருமணம் முடிந்து நான்காம் நாள் சடங்கு இடம்பெற்ற வீட்டினுள் புகுந்த திருடர்கள் 15 பவுண் தாலிக்கொடியையும் 12 பவுண் தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர் என கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உரும்பிராயில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

சிறைக் கைதிகளை பார்வையிட புத்தாண்டில் வாய்ப்பு-

velikadaதமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு அவர்களின் உறவினர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குறித்த இரு தினங்களில், காலை 8.30 மணிமுதல் மாலை 4 மணிவரை, சிறைக்கைதிகளை பார்வையிடவும் விரும்பினால் உணவுகளை வழங்கவும் முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார். இதன் பிரகாரம், நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலுமுள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாதாரண நாட்களில் சிறைக்கைதியொருவரைப் பார்வையிட அவரின் உறவினருக்கு சுமார் 10 நிமிடங்கள் மாத்திரமே நேரம் ஒதுக்கப்படும். ஆனால், இந்த புத்தாண்டு தினங்களில் சுமார் 30 நிமிடங்கள் வரை சிறைக்கைதிகளைச் சந்தித்து பேச முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் பொலிஸார் எனக் கூறி கொள்ளை-

kalavuவவுனியா கற்பகபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.10அளவில் வீடொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற நால்வர், தாம்மை பொலிஸார் என கூறி வீட்டினுள் சோதனை நடத்த வேண்டும் என அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த சுமார் 6 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றதாகவும் வந்தவர்கள் கைத்துப்பாக்கி போன்று ஒன்றை வைத்திருந்தாகவும் வீட்டு உரிமையாளர்கள் வவுனியா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலை பிரிமா தொழிற்சாலையில் தீ விபத்து-

prima corporation trincoதிருகோணமலை, சீனக்குடாவிலுள்ள பிரிமா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கான கட்டடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அத் தீயை விமானப்படையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்னொழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.