அமரர் தோழர் நந்தன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்-

nandan...யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவி பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும், பின்னர் வவுனியா திருநாவற்குளத்தில் வசித்து வந்தவருமான பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்) அவர்கள் இன்று 11.04.2014 வெள்ளிக்கிழமை மரணமெய்தினார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு மக்கள் பணியினை ஆரம்பித்த தோழர் நந்தன், மலையக ஏதிலி மக்களை வடக்கு கிழக்கு எல்லைப் பிராந்தியத்தில் குடியேற்றும் காந்தீயத்தின் பணிகளில் அயராது, அர்ப்பணிப்போடு பாடுபட்டவர். 1982களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) தம்மை இணைத்துக் கொண்டு ஆயுதப் பயிற்சிபெற்ற தோழர் நந்தன், 1983 முதல் 1986 வரையிலான காலப்பகுதியில் கழகத்தின் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்டார். கழகப்பணிகளில் தனது சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி தோழர்கள் மற்றும் மக்களின் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்த சிரேஸ்ட உறுப்பினர் தோழர் நந்தன், கழகத்தின் பணிகளில் தொடர்ச்சியாக மரணிக்கும் வரையில் தனது பங்களிப்பை ஆற்றினார். சில மாதங்களாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் நந்தன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் யாழ். திருநெல்வேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமெய்தினார், அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை-

kopi and towபுலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தெரிவிக்கப்படும் கோபி என்கின்ற பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்கிற நவரத்னம் நவநீதன் மற்றும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தேவியன் (36 வயது) ஆகிய மூவருமே கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களின் தகவல்கள் கூறுகின்றன. வவுனியா, நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பிரதேசங்களில் இம்மூவரும் மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்றிரவு அப்பிரதேசங்களைச் சுற்றிவளைத்த இராணுவ புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபர்களை கைதுசெய்ய முயற்சித்துள்ளனர். இதனையடுத்து சந்தேகநபர்கள், இராணுவத்தினர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கிப் பிரயோகத்திலேயே கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. அத்துடன் சம்பவத்தையடுத்து நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் மிகவும் வறுமைநிலை-பிரித்தானியா-

vada kilakkil varumaiகடந்த 2013ம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவரங்கள் தொடர்பான அறிக்கையை நேற்று பிரித்தானியா வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பகுதிகள் மற்றும் வடமாகாணத்தின் சில பகுதிகளில் பல்வேறு மனித உரிமைமீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. ஊடக சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமைநிலை தொடர்ந்தும் காணப்படுவதாக பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் அலன் டன்கான் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் மில்லேனியம் இலக்குகளை இலங்கை அடைந்து வருகிறது. எனினும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தொடர்ந்தும் வறுமை நிலைமை காணப்படுகிறது என்றார் அவர்.

விபூசிகா ஜெயக்குமாரியை ஒன்று சேர்க்கக் கோரிக்கை-

vaalvakam (2)கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட விபூசிகா மற்றும் அவரது தாயான ஜெயக்குமாரி இருவரையும் ஒன்று சேர்ப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனக் கோரி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபூசிகாவுக்காக ஒரு முறைப்பாடும், அவரது தாயுக்காக மற்றொரு முறைப்பாடும் ஆணைக்குழுவில் நேற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட விபூசிகா மற்றும் ஜெயக்குமாரி இருவரும் ஒரு நாள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபூசிகாவின் எதிர்கால வாழ்க்கை கருதி அவரை, அவரது தாயாருடன் இணைந்து வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும் என விபூசிகா சார்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரத்தில் கடந்த மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து 13வயதான விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயக்குமாரி இருவரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வவுனியாவில் சிறுமியும் தாயாரும் கைது-

வவுனியா ஆசிகுளம், தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகரன் தவமலர் என்கிற 42 வயதுடைய தாயாரும், அவருடைய மகளாகிய யதுர்சினி என்ற 16வயது பாடசாலை மாணவியும் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா கோமரசங்குளம் மகாவித்தியாலய மாணவியாகிய இவர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர தேர்வு எழுதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14வயதான மகள் விபூசிக்காவும் சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிரூட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு உதவி வருகின்றார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதுவரை 65 பேர் இப்படியான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். அவர்களில் 5பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், மிஞ்சியுள்ள 60பேரில் 10பேர் பெண்கள் என்றும் அவர் நேற்று வியாழன்று கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் வாழ்வக மாணவர்கள் நால்வர் சாதாரணதர பரீட்சையில் சித்தி-

vaalvakam (1)யாழ். சுன்னாகம் வாழ்வகத்திலிருந்து நான்கு மாணவர்கள் கல்விப பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர். ஸ்ரீதரன் யோகதாஸ், கலாமோகன் பிரகான், பொன்னம்பலம் தீபன், வில்வராஜா நாளாயினி ஆகியோரே சித்தியடைந்தவர்களாவர். ஸ்ரீதரன் யோதாஸ் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கடந்த தடவை க.பொ.த சாதாரண தர பரீட்சையை எழுத்தியிருந்தார். தோல் நோயொன்றின் காரணமாக இவரது பார்வை குறைவடைந்துகொண்டே போனது. சாதாரண தரப் பரீட்சையை பார்வைக் குறைபாடோடு மிகவும் கஸ்டப்பட்டே எழுதியிருந்தார். இரண்டு கண்களும் தற்போது பார்வையிழந்த நிலையில் சுன்னாகம் வாழ்வகத்தில் தொடர்ந்தும் படிப்பதற்காக தங்கியுள்ளார். இவருக்கு 5ஏ, 2பி, 2சி, 3எஸ் என பெறுபேறுகள் கிடைத்துள்ளன. தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இவர் கற்றலை மேற்கொண்டுள்ளார். வில்வராஜா நளாயினி வன்னிப் போரின்போது இரண்டு கண்களையும் இழந்தார். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மாணவியான இவருக்கு 2ஏ, 2பி. 2சி 1எஸ் என 7 பாடங்களில் சித்திபெற்றுள்ளார்.

கமலேந்திரனின் வெற்றிடத்திற்கு தவராசா நியமனம்-

epdpவடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டிருந்த ஈ.பி.டி.பியைச் சேர்ந்த சின்னத்துரை தவராசா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கந்தசாமி கமலேந்திரன் கொலை குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உறுப்புரிமை நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய எதிர்க்கட்சி உறுப்பினரை நியமிக்குமாறு வடமாகாண சபை தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியிருந்தது. இதன்படி கமலேந்திரனின் வடமாகாண சபை உறுப்பினர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வாக்குகளின் அடிப்படையில் கமலேந்திரனுக்கு அடுத்த இடத்தில் இருந்த சின்னத்துரை தவராசாவை தேர்தல்கள் ஆணையாளர் நியமித்துள்ளார். இதனடிப்படையில் சின்னத்துரை தவராசா எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நியமித்துள்ளது. இந்நிலையில் தாம் விரைவில் வடமாகாண சபையின் உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக தவராசா கூறியுள்ளார்.