கோபியுடன் சேர்ந்து தேவியனும் கொல்லப்பட்டார்.-
இராணுவத்துடன் வவுனியா, நெடுங்கேணியில் வைத்து இடம்பெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தேவியன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராதா படையணியின் முக்கிய விமானி ஆவார் என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள் இலங்கை இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்திய போது அதை செலுத்தியவர்களில் ஒருவர்தான் தேவியன் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விடுதலைப் புலிகளால் பேரழிவுக்குட்படுத்தப்பட்ட அனுராதபுரம் விமானப் படை தளம் மீதும் கொலன்னாவை பெற்றோலிய கிடங்கு மீதும் விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதலில் விமானியாக செயல்பட்டவர்தான் இந்த தேவியன் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் புலிகளின் 2 விமானங்களும் அழிந்தன. இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு தப்பி சென்றார் தேவியன். ஐரோப்பாவில் இருந்து நெடியவனால் கோபி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தேவியனும் இலங்கைக்கு சென்று இணைந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இலங்கை அரசு கோபியுடன் சேர்ந்து தேவியனைப் பற்றியும் தகவல் தரக்கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில்தான் இன்று நடந்த மோதலில் கோபியுடன் சேர்ந்து தேவியனும் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ஈடுபட்டதாக வன்னி படைத் தலைமையகம் தெரிவித்தது. நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் இடம்பெற் இராணுவ முன்னெடுப்பில் கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இராணுவ வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை. இராணுவ பயிற்சியொன்றின் போதே நான்காவது யுத்த தாங்கி படையணியின் புலனாய்வுப் பிரிவு இராணுவ வீரர் உயிரிழந்தார் குருணாகலைச் சேர்ந்த கே.கே.கமல் ராஜா (வயது 26) என்ற இராணுவ வீரரே இவ்வாறு பயிற்சியின் போது உயிரிழந்தார என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
மூவரின் சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டன- காவல்துறை பேச்சாளர்
அநுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் அரச செலவில் அனுராதபுரம் விஜயபுர பொது மயானத்தில் இன்று சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டதாகவும். இந்த மூவரும் பதவியா பகுதிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் உயிரிழந்ததையடுத்து, இந்தச் சடலங்கள் மீதான மரண விசாரணையை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நடத்தினார் என்றும், அவருடைய உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார் என்றும்;. நீதவானுடைய உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட போதிலும், இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கும், இறுதிக்கிரியைகளில் அவர்கள் பங்குபற்றுவதற்கும், அவரவர் கலாசாரத்திற்கமைவாக கிரியைகளை மேற்கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்ததாகவு காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கின்றார். ஆயினும் காவல்துறையின் ஏற்பாடுகளுக்கமைவாக, இந்த இறுதிக்கிரியைகளில் இறந்தவர்களின் நெருங்கிய குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டார்களா என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. கோபி என்று படையினரால் குறிப்பிடப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் மாமனராகிய செகராசசிங்கம் பாலகுருபரன், கஜீபனின் சடலத்தைப் பார்வையிட்ட போதிலும், இறுதிக்கிரியைகளில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும், தனது மகளும், கஜீபனின் தாயாரும் கலந்து கொண்டார்களா இல்லையா என்பது பற்றிய தகவல் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறினார்
அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர் தீக்குளிப்பு
ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் சிட்னியின் புறநகர்ப் பகுதியில் புதன்கிழமை இரவு தீக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனை ஒன்றில் உயிருக்காக போராடி வருவதாகவும். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்து அகதித் தஞ்சம் கோரினார் என்றும், அவரது கோரிக்கை இரண்டு முறை நிராகரிக்கப்பட்டதாலேயே விரக்தியடைந்த அவர் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. தமது உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு ஆஸ்திரேலியா சென்றடையும் இவரைப் போன்றவர்கள் பலர் விரக்தி நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.