தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு-
நாளை நடைபெறவிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெறவிருந்த இந்த கூட்டம், திருகோணமலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் அடுத்தமாதம் முற்பகுதியில் இக்கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும், இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அண்மைய தென்னாப்பிரிக்க விஜயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிமேற்கு பிரதேசசபை தவிசாளரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி-
புத்தாண்டென்பது பூமி சூரியனை சுற்றி மீண்டும் அடுத்த சுற்றில் பிரவேசிக்கும் தொடக்க நாள் ஆகும். இந்த வகையில் இதுவரையில் பட்ட துன்பங்களையும் வடுக்களையும் வரலாற்றின் வழிகாட்டியாக கொண்டு தழிழ் மக்களாகிய நாமும் புதிய சாதனைகளை படைத்து வலி தந்தவர்களை தோற்கடிக்க புறப்படும் புதிய நாளாக மனதிற் கொண்டு மகிழ்வுடன் வரவேற்க தயாராக வேண்;டும். வரலாற்றில் உலகில் வளர்ச்சி அடைந்த பல சமுதாய கட்டமைப்புக்களில் காலத்தினை கணிப்பீடு செய்ய பல காலக்கணிப்பீட்டு முறைகள் இருந்துள்ளன. இவற்றில் பல கணிப்பீட்டு முறைகள் இன்று செல்வாக்கு இழக்கப்பட்டு விட்டது. சில வேண்டும் என்றே அழிக்கப்பட்டு விட்டது. ஆயினும் தழிழர்களாகிய எமது காலக்கணிப்பீட்டு முறை இன்றும் எவராலும் அழிக்கப்படமுடியாத ஒன்றாகவே நிலை பெற்றுள்ளது. இது எமது இனத்தின் மாபெரும் அடையாளம் ஆகும். இதன் பிரகாரம் மலரும் சித்திரை புத்தாண்டானது தமிழ் மக்களது துன்பஙகள் துயரங்களை துடைத்தெறியும் நல் ஆண்டாக மலரவும் இதுவரை காலமும் இழந்த பலவற்றிற்கான பலன்களை அறுவடைசெய்யும் நல் ஆண்டாகவும் மாற்றமுறவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
புதிய உயர்ஸ்தானிகர்கள் நியமனம்-
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பேராசிரியர் சுதர்ஷன் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கை உயர்ஸ்தானிகராக இருந்த பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஜெர்மன் நாட்டுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் யுவதி கொலை, சிவில் பாதுகாப்பு படையினருக்கு விளக்கமறியல்-
கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் யுவதி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான சிவில் பாதுகாப்பு படைவீரரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் சி. சிவசுப்பிரமணியம் முன்னிலையில் சந்தேகநபர் இன்றுகாலை ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த 28 வயதான யுவதி ஒருவர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சி புன்னைநீராவி பகுதி கிணற்றில் இருந்து, கழுத்தில் வெட்டுக் காயங்களோடு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவர் சந்தேகநபருடன் கொண்டிருந்த காதல் தொடர்பினால் கர்ப்பமுற்றிருந்தார் எனவும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தும் நோக்கில் கிளிநொச்சி சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அத்துடன் சம்பவ இடத்திற்கு அருகில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புப் படை முகாமில் கடமையாற்றிய படைவீரர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைதுசெய்ததுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்தி ஒன்றையும் கைப்பற்றியிருந்தனர்.
பொலன்னறுவையில் பாரிய விபத்து; 9 பேர் பலி-
பொலநறுவை மாவட்டம் அரலகங்வில அளுத்ஒயா பகுதியிலுள்ள இசெட் ஈ வாய்க்காலுக்குள் லேண்ட் மாஸ்டர் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பகல் 12.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும், இரண்டு ஆண்களும், இரண்டு சிறுவர்களும் சிறுமி ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களுடன் நீரில் மூழ்கிய மேலும் எட்டு பேர் காப்பாற்றப்பட்டு அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தெஹியத்தகண்டிய, நிக்கவத்த, லந்த பகுதியிலிருந்து அரலகங்வில செவனபிட்டிய பகுதிக்கு சென்றுகொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
டிபெண்டர் வாகனம் விபத்து, இரு கடற்படையினர் பலி-
திருகோணமலை புடவைக்கட்டு மதுரங்குடா பிரதேசத்தில் சென்றுகொண்டிருந்த கடற்படையினரின் டிபென்டர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு கடற்படையினர் மரணமடைந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் உள்ள பள்ளங்களில் வாகனத்தை விழவிடாது காக்க முற்பட்டபோதே திடீரேன வாகனம் நடுவீதியிலேயே தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.