யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்-தருஸ்மான்-

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படிப்படியாக நீதி கிடைக்கும் என்று, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் தலைவர் மர்சூக்கி தருஸ்மான் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இன்னர் பிரஸ் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு தயாரித்த அறிக்கை ஒன்று ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த குழு மேற்கொண்ட விசாரணை வெற்றிகரமானது என்று கருத முடியுமா? என்று தருஸ்மனிடம் வினவியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். கம்போடிய மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டது. ஆனால் அது படிப்படியாக கிடைத்துள்ளது என்று அவர் மறைமுகமாக இதன்போது பதிலளித்துள்ளார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சமூக தீர்வு காணப்படும் – ராஜ்நாத் சிங்-

xஇலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பதே தமது நோக்கம் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இந்திய மக்களவைத் தேர்தலின் ஆறாம்கட்ட வாக்குப் பதிவு அடுத்த வாரம் தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் திருச்சியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றப்போவதில்லை. அயோத்தியில் இராமல் கோயில் கட்டப்படவுள்ளது, தமிழக மீனவர்கள் மாத்திரமல்லாது இந்திய மீனவர்கள் அனைவரது நலனையும் கருத்திற்கொண்டு தேசிய மீனவர் நல ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது. இம்முறை மக்களவைத் தேர்தலில் தமது கட்சி 300ற்கும் மேற்பட்ட ஆசங்களை கைப்பற்றி வெற்றிவாகை சூடும். நரேந்திர மோடி அடுத்த பிரதமராக பதவியேற்பார். புதிய அரசை உருவாக்க அ.தி.மு.க, தி.மு.க அல்லது வேறு கட்சிகளின் தயவு தேவைப்படாது என பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆஸியில் இலங்கை அகதிகளின் உரிமை மறுப்பு-

australiaஅவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் தமது அடிப்படை ஜனநாயக மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைவிதித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி அங்குள்ள இலங்கை அகதிகள் தங்களை நேர்மையான அகதிகள் என்பதை நிரூபித்து அகதி அந்தஸ்தினை பெற்றுக்கொள்ள சட்டரீதியான மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சோசலிச நிபுணர்களின் இணையத்தளம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த மாதம் அங்குள்ள அகதிகள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு தடை விதித்திருந்தது. இதன்மூலம் அகதிகளின் பாதுகாப்பு வீசாவுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அகதிகள் மேற்கொள்ள வேண்டிய சட்ட நவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இது சர்வதேச அகதிகள் சட்டத்துக்கு எதிரானது என்று அந்த இணையத்தளம் மேலும் சுட்டிக்காட்டியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடற்படையினரால் முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயரவில்லை – பாதுகாப்பு அமைச்சு-

கடற்படையினர் முகாம்கள் அமைத்தமையால் முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயரவில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வில்பத்து வனப் பகுதியில் குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் கடற்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டமை காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் என சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இக் குற்றச்சாட்டை இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய நிராகரித்துள்ளார். முள்ளிக்குளம் மற்றும் மரிச்சுக்கட்டி ஆகிய பகுதிகளில் கடற்படையினர் முகாம்களை அமைத்த காரணத்தினால் ஒரேயொரு முஸ்லிம் குடும்பம் மட்டுமே இடம்பெயர்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த அந்த குடும்பம் வில்பத்து வனப் பகுதியில் குடியேறவில்லை என அவர் கூறியுள்ளார். கடற்படையினர் தமது காணிகளை சுவீகரித்தமையால் வில்பத்து வனப்பகுதியில் குடியேறியுள்ளதாக முஸ்லிம்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், கடற்படையினர் குறித்த முஸ்லிம் குடும்பங்களின் காணிகளை சுவீகரிக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பி.பி.சி செய்தியாளரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு-

imagesபி.பி.சி செய்தி சேவையின் இலங்கைக்கு செய்திகளுக்கு பொறுப்பான ஊடகவியலாளர் சார்ள்ஸ் ஹெவுலனுக்கு அரசாங்கம் வழங்கிய இரண்டு வருடத்திற்கான வீசா அனுமதி நீடிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் காலவதியாகவும் அவரது வீசா அனுமதியை புதுப்பிக்க அவர் விண்ணப்பித்திருந்த போதிலும், வரகக 3மாத வீசாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அமைச்சின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதேவேளை, மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் வீசா அனுமதி முடிவடைந்த பின்னர், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் 2,700 தற்கொலைகள்-

இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 2,700 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 80 வீதமானவர்கள் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார். கடந்த வருடம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள் தொடர்பான தகவலே அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கதிர்காமம் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு-

yகொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் கதிர்காமம் நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். கதிர்காமம் நகருக்கு அருகில் உள்ள தெட்டுகம வாவியில் வேன் ஒன்று வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இன்றுகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 3 பெண்களும் 2 ஆண்களுமே பலியாகியுள்ளனர். சம்பவத்தில் 7வயது சிறுவன் காயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கண்டி, அம்பதென்ன பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு இலக்காகியுள்ளனர்.

அமெரிக்க விளையாட்டுத்துறை தூதுவர்கள் விஜயம்-

அமெரிக்காவின் இரண்டு விளையாட்டுத்துறை தூதுவர்கள் இலங்கை;கு விஜயம் செய்யவுள்ளனர். தாமிக்கா வில்லியம்ஸ் மற்றும் எட்னா கெப்பெல் ஆகியோரே இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அமெரக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்கள் எதிர்வரும் 21ம் திகதிமுதல் 25ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த காலப்பகுதியில் கொழும்பு காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மகளிர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்தித்து, பல்வேறு பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

மாங்குளத்தில் குண்டு மீட்பு-

மாங்குளம் திரிபுரம் பகுதியிலுள்ள காணியொன்றின் கிணற்றிற்கு அருகில் ஆர்.பி.ஜி. ரக குண்டொன்று மீட்கப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வளவின் உரிமையாளர் கொடுத்த தகவலிற்கமைய அவ்விடத்திற்கு இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று அக்குண்டை வெள்ளிக்கிழமை செயலிழக்கச் செய்ததாக மாங்குளம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 64வயது மூதாட்டி கைது-

கிளிநொச்சியில் 64 வயதுடைய மூதாட்டியொருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்மாவதி எனும் மூதாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் மூதாட்டியை வவுனியாவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அண்மைக்காலமாக புலிகளை மீள் உருவாக்க முயற்சி செய்கின்றனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் பல பொதுமக்களை பாதுகாப்பு தரப்பினர் கைதுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.