சாவகச்சேரியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இம்முறை சாவகச்சேரி நகரசபை மைதானத்தில் நடைபெறுமென தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூட்டமைப்பின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார். இம்முறை மே தின ஊர்வலம் புத்தூர்ச் சந்தியில் இருந்து ஆரம்பித்து சாவகச்சேரி நகரசபை மைதானம் வரையில் சென்று அங்கு மே தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இக் கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர்கள், உளளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
தென்கொரிய தூதுக்குழு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு-
இலங்கை வந்துள்ள தென்கொரிய தூதுக்குழுவிற்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றுமாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய வெளிவிவகார அமைச்சா யூ மயூங் – ஹவான் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் நால்வர் கைது-
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது போலியான இறப்பர் முத்திரை மற்றும் ஆவணங்களை கைப்பற்றியதுடன்;, அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக ஆவணங்களை தயாரித்ததாகவும், இவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வவுனியா தலைமைப் பொலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
புலிகளின் சுவரொட்டி அச்சிட்ட கணினி ஆசிரியர் கைது-
புலிகள் அமைப்பின் மீள் உருவாக்கித்தின் பொருட்டு சுவரொட்டிகளை அச்சிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கணினி ஆசிரியர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19ஆம் திகதி இவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் முன்னாள் புலி உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் யாழ் மானிப்பாயில் அமைந்துள்ள அவரது கணினி நிறுவகத்திற்கும் சீல் வைத்துள்ளதுடன் அங்குள்ள கணினிகள், மடி கணினிகள் பலதையும் குற்றத் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
வடக்கின் நிலைமை குறித்து தென்கொரிய பிரதிநிதிகள் ஆராய்வு-
இலங்கையில் மோதல்கள் நிறைவடைந்த பின் பல வகையிலும் பாரிய முன்னெற்றங்கள் காணப்பட்டுள்ளதாக தென்கொரிய அரசின் விசேட பிரதிநிதி யு மியுன் க்வான் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்றுமுற்பகல் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்ட விதம் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட விதம் தொடர்பாக தென்கொரிய பிரதிநிதிகள் தகவல் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது, வடக்கிற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி, தென்கொரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மண்டைதீவில் இளம் பெண் கடத்தல் தொடர்பில விளக்கமறியல், பிணை-
யாழ். மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச்செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த பெண் உட்பட 6 பேரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரபிணையில் செல்லவும், பிரதான சந்தேகநபரை மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன், மேற்படி நபர்களின் வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் சான்றிதழை கிராம அலுவலரிடம் பெற்று தம்மிடம் சமர்ப்பிக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவையும், குறித்த வாகன சாரதியையும் கடத்தப்பட்ட பெண்ணையும் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.
ஐரோப்பிய நாடுகளில் பணிப்பெண்களுக்கு வேலைவாய்ப்பு-
ஐரோப்பிய நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான வேலை வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீட்டுப் பணிப்பெண் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார். 25 – 45 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களுக்கே இந்த வேலைவாய்ப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக தகவல் அறிய, 0773 148 927 , 0773 983 536 மற்றும் 0775 489 506 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பு ஏற்படுத்துமாறு அவர் கேட்டுள்ளார். மூன்று வாரகால பயிற்சியின் பின் மொழி தேர்ச்சிப் பயிற்சியில் சித்திபெறும் பெண்களை எவ்வித கட்டணமும் இன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு பணிப் பெண்களாக அனுப்பி வைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சிறை பாதுகாப்புக்காக புதிய துப்பாக்கிகள் கொள்வனவு-
சிறைச்சாலைகள் பாதுகாப்புக்காக புதிய துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. 305 புதிய துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரசிறி பல்லேகம தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் திணைக்கள பாதுகாப்புச் செயலாளரிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய துப்பாக்கிகளை பெற்றுக் கொள்வதற்கும் சகல சிறைச்சாலைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சமீது விசாரணை நடத்த நடவடிக்கை-வைகோ-
நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைகோ தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின், பொதுச்செயலாளர் வைகோ சாத்தூரில் நடந்த தேர்தல் பரப்புரையின்போதே இதனை தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குற்றங்களையும் வெளிப்படுத்துவதற்கு இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என வைகோ உறுதியளித்துள்ளார்.