மூளாய் விக்டோறி விளையாட்டு கழகத்துடன் சந்திப்பு-

Moolai Victory Sports club (4)Moolai Victory Sports club (1)22.04.2014 செவ்வாய்க்கிழமை அன்று யாழ். மூளாய் விக்டோறி விளையாட்டுக் கழகத்தினருடன் வலிமேற்கு பிரதேச தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்பின்போது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையான விளையாட்டுத்திடல் இன்மை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் மூளாய் பகுதியில் இரண்டு அரச பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் இருந்தும் இன்றுவரை நிரந்தரமான ஒர் விளையாட்டு திடல் இதுவரை இல்லை. இதனால் இளைஞர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உட்படுகின்றனர். இதுவரை பலரிடமும் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் எந்த ஒரு பரிகாரமும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் மூளாய் பகுதியிலுள்ள கொத்தித்துறைக்கு முன்பாகவுள்ள அரச காணி பயன்பாடற்ற நிலையில் உள்ளமையை பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களுக்கு நேரடியாக காண்பித்ததோடு விளையாட்டு மைதானத்திற்கான உத்தேச வரைபடத்தினையும் கையளித்தனர். இந் நிலையில் உரிய அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதாக தவிசாளர் தெரிவித்தார்.

ஊர்காவற்றுறையில் பாரிம்பரிய விளையாட்டு விழா-

KaytsKayts (4)Kayts (3)Kayts (2)யாழ். தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் 23.04.2014 புதன்கிழமை அன்று பிரதேச பொலிஸ் திணைக்களமும் சமூர்த்தி அதிகார சபையும் இணைந்து புத்தாண்டை முன்னிட்ட இலங்கையின் பாரம்பரிய விளையாட்டு விழாவை நடத்தியுள்ளன. சமுர்த்தி முகமையாளர் திருமதி வி.அறிவரசி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி அன்ரன் யோகநாயகம், கணக்காளர் திருவருட்செல்வன் மற்றும் ஊர்காவற்றுறை தலமைப்பீட பொலிஸ் அதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிற்கும், இலங்கைக்கும் இடையில் அணுசக்தி திட்டம்-

Sri-lanka_Russia_Nuclearரஷ்யாவிற்கும், இலங்கைக்கும் இடையில் அணுசக்தி தொடர்பான அறிவை பரிமாற்றிக்கொள்ளும் வகையிலான செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, ரஷ்யாவின் அணுசக்தி அதிகார சபையின் பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அணு ஆராய்ச்சி ஆய்வு கூடமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது. அணுசக்தி தொடர்பான வளங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்காக பாடசாலைகளில் அணுசக்தி தொடர்பான பாடவிதானங்களை அதிகரிக்க உள்ளோம். செயன்முறை ரீதியில் விடயங்களை கற்க வேண்டியுள்ளது. அதற்கேற்ப ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான வசதிகளும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது என கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்த்தன மேலும் கூறியுள்ளார்.

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்த பீ.சிதம்பரம் கருத்து-

P.chidamparamதமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் இந்த முறை எதிர்பாராத வகையில் அமையும் என இந்திய மத்திய அமைச்சர் பீ.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களின் வாக்குப் பதிவுகள் இன்றுகாலை ஆரம்பமாகின. 9 கட்டங்களாக நடைபெறும் இந்;திய பொதுத் தேர்தலின் ஆறாம் கட்டமாக இன்று தமிழ் நாட்டில் தேர்தல் இடம்பெறுகின்றது. காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்புகள் மாலை 6 மணி வரையில் இடம்பெறுகிறது. இந்த முறை தமிழகத்தில் ஆறு அணிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் இன்றுகாலை தமது வாக்கினை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பீ.சிதம்பரம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், கமியுனிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி கட்சி என்பன தனித்து போட்டியிடுகின்றன. அதேநேரம் வை.கோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திரவிட கழகம் என்பன பாரதீயே ஜனதா கூட்டணியில் போட்டியிடுகின்றன. புதுச்சேரி மற்றும் தமிழக மாநிலங்களில் இருந்து 40 உறுப்பினர்கள் இந்த தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கோரிக்கை-

இலங்கையினுள் தேசிய ஒன்றுமையை கட்டியெழுப்ப வேண்டும் எனின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமாஜவாதி மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் 5 இடதுசாரி கட்சிகள் இணைந்து அமைக்கப்பட்ட இந்த சமாஜவாதி மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் ஊடகவியாளர் சந்திப்பை நடத்தியது. இதன்போது கருத்து வெளியிட்ட ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயகார இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு படையினரின் தலையீட்டினால் தேசிய ஒன்றுமையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பளையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு-

பளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை 5.30அளவில் இடம்பெற்றுள்ளது. ரயில் கடவையில் பணியாற்றும் 26வயதான தங்கராசா சாந்தகுமார் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பளை இத்தாவில் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ வாகனம் மோதி விபத்து, 14பேர் காயம்-

மன்னார் – தள்ளாடி பாலத்திற்கு அருகில் நேற்றுமாலை இராணுவத்தினரின் உழவு இயந்திரம், கெப் வாகனத்துடன் மோதியதில் 14பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுள் 11பேர் இராணுவ வீரர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் நேற்றுமாலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பயண அறிவுறுத்தல், பிரித்தானியா புதுப்பிப்பு-

பிரித்தானியா இலங்கை தொடர்பான தமது பயண அறிவுறுத்தலை புதுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தரின் உருவப்படுத்தை கையில் பச்சைக்குத்தி இருந்தமைக்காக பிரித்தானியாவின் பிரஜை ஒருவரை நாடுகடத்த இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, புத்தரின் உருவப்படம் உள்ளிட்ட பௌத்த மதம் சார்ந்த எந்த உருவங்களையும் உடலில் பச்சைக் குத்தியவர்கள் இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.

பொதுபல சேனாவின் கோரிக்கை-

பௌத்த புத்தகங்களை தவிர நாட்டின் ஏனைய விடயங்கள் தொடர்பில் அச்சிடப்படும் புத்தகங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொதுபல சேனா அமைப்பு, பாதுகாப்பு பிரிவிரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பௌத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சில புத்தகள் நாட்டில் வெளியாகின்றன. அவை தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய விசாரணைக்கு இலங்கைப் பொலீஸ் ஒத்துழைப்பு-

சிறுநீரக வியாபாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு, இந்திய குற்றத்தடுப்பு பிரிவின் விசேடகுழு உதவிகோரும் பட்சத்தில் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இலங்கையை மையப்படுத்தி சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக வியாபாரம் தொடர்ப்பில் ஐதராபாத் காவற்துறையினர் விசாரணை மேற்கொள்ளவதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகின. இது குறித்து கூறும்போதே காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறுநீரக வியாபாரம் தொடர்பில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக இந்திய விசேட குழு இலங்கை வரள்ளதாக கூறப்படுகிறது.

பேஸ்புக், 4 மாதங்களில் 500 முறைப்பாடுகள்-

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் குறித்து 500ற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகளில் 80மூ போலி பேஸ்புக் கணக்குகள் குறித்தவை என பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். மற்றையவர்களின் பேஸ்புக் கணக்கிற்குள் பிரவேசித்தல் மற்றும் பேஸ்புக் கணக்கை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளன.