வவுனியா வடக்கின் அபிவிருத்தி குறித்து ஜி.ரி. லிங்கநாதன் ஆலோசனை-
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் 2014.04.22 செவ்வாயன்று காலை 10.30 மணியளவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான உனைஸ் பாரூக், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்களான இந்திரராஜா, தியாகராஜா கலந்துகொண்ட கூட்டத்தில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியாவின் முன்னைநாள் உப நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆலோசனைகளைத் தெரிவித்தார். அவர் தெரிவித்த விடயங்களாவன, பிரதேச ரீதியாகக் காணப்படும் வீதி அபிவிருத்தித்திட்டங்களை உடனடியாக திருத்தங்கள் செய்து மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதுடன் உள்ளுர் போக்குவரத்து வசதிகளை நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மேற்கொள்ள இரண்டு பேருந்துகளை நிறுத்தவேண்டும். அத்துடன் நெடுங்கேணிப் பிரதேச கல்வி நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும். மற்றும் நெடுங்கேணிப் பாடசாலை 1000ம் பாடசாலைத் திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டதனால் அதற்கு தனியான ஆரம்பப்பாடசாலையை ஆரம்பிப்பதற்காக பழைய வைத்தியசாலைக்குரிய காணியை மாகாண சுகாதார அமைச்சும் மாவட்ட சுகாதார திணைக்களமும் வழங்குவதற்கு உறுதியளித்தமைக்கு இணங்க வலயக் கல்விப்பணிப்பாளர் கோரிக்கை கடிதம் ஒன்றினை சுகாதாரத் திணைக்களத்திற்கு அனுப்பவேண்டும். மேலும் சிறு குளங்களை புனரமைப்பது அல்லது குளங்களை இணைப்பதனூடாக பாரிய நீர்பாசனத்திட்டத்தை உருவாக்கி மேட்டு நிலச்செய்கையை ஊக்குவிப்பதுடன் நன்நீர் மீன்பிடிச்செய்கையை அபிவிருத்தி செய்யமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய வீட்டுத்திட்டம் குறித்த காணி தொடர்பிலும், விளையாட்டுக்கழக அபிவித்தி தொடர்பான விடயங்கள் பற்றியும் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.