தமிழ் பெண்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் தொடர்பில் ஐ.நா பிரதிநிதி கவலை-

UNஇலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் கவலையடைவதாக, மோதல்களின்போது இடம்பெறுகின்ற பாலியல் கொடுமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பங்குரா தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித்த கோஹன்னவுடன் கலந்துரையாடி இருப்பதாகவும், இவ்விடயத்தில் இலங்கை அரசு பொறுப்புக் கூற வேண்டும் என தாம் அவரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் பங்குரா மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி கையாளப்படுகிறது-அமைச்சர் பீரிஸ்-

GL-Peirisதிட்டமிடப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்காக வெளிநாடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க தொகைகளில் நிதி கையாளப்படுவதற்கான சாட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பயங்கரவாத நிதியத்திற்கான நிதியை சேகரித்தல், பயங்கரவாத்தை மீளமைப்பு திட்டங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதுபற்றி சர்வதேச ராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமெனவும அமைச்சர் குறிப்பிடடுள்ளார்.

புலிகளின் மீளிணைவு தொடர்பாக மேலும் ஒருவர் கைது-

imagesCA47OAWZகோபி, அப்பன் மற்றும் தேவியனுடன் இணைந்து செயற்பட்டதாக கூறப்பட்டு, மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக, பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவரும் ஏனைய மூவரும் இணைந்து வடக்கில் புலிகளை மீளுருவாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோர் அண்மையில் வவுனியா நெடுங்கேணி பகுதியில் வைத்து இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று கைதான யாழ் குருநகர் பீச் வீதியைச் சேர்ந்த அருளானந்தன் டினேஸ்குமார் என்பவர் கோபியின் உறவினர் எனவும், இவர் கோபி உள்ளிட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

நெடியவனைக் கைதுசெய்யும் விடயம் தொடர்பாக நோர்வே ஆராய்வு-

downloadபுலிகளின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் சிவபரன் நெடியனை கைது செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கை குறித்து நோர்வே ஆராய்ந்து வருகின்றது. நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு அந்நாட்டின் அரச வானொலிக்கு இத்தகவலை வெளியிட்டுள்ளது. நெடியவன் உள்ளிட்ட 40 புலிகளுக்கு எதிராக இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன அண்மையில் தெரிவித்திருந்தார். நெடியவனை கைது செய்ய உதவுமாறு இலங்கை நோர்வேயிடம் கோரி இருப்பதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் இந்த கோரிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் நோர்வே அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மேலும் கூறப்படுகின்றது.

57ஆவது ஒழுங்கைக்கு ‘சங்கம் ஒழுங்கை’ என பெயர் மாற்றம்-

57th Lane Sangam Laneகொழும்பு-06, வெள்ளவத்தையிலுள்ள 57ஆவது ஒழுங்கை ‘சங்கம் ஒழுங்கை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி வை.கங்கைவேணியன் (வேலணை வேணியன்) தெரிவித்துள்ளார். இந்த ஒழுங்கையின் பெயரை மாற்றுவதற்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகிய இருவர் மட்டுமே உதவிபுரிந்ததாக தெரிவித்த கங்கைவேணியன் அவ்விருவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 23.04.2014 இல் வெளியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் ஒரே நாளில் 6 பேர் கைது-

imagesCA5PZGM2யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட புலனாய்வுப் பிரிவினரின் தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெல்லியடிப் பகுதியி; 3 பேரும், சாவகச்சேரியில் 2பேரும், கொடிகாமத்தில் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டதுடன், அவர்களை பொலிஸார் நீதிமன்றங்களில் இன்று ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வட மாகாண பெண்களை பொலீஸில் இணைக்க நடவடிக்கை-

woman polcie 01வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளும் செயற்திட்டம் ஆரம்பித்துள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது- யாழ், மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நான் கடமையேற்ற காலப்பகுதியில் யாழ்,மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகவும் குறைவாக உள்ளதாக பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த விடையம் தொடர்பாக நான் ஆராய்ந்து பார்த்ததில் யாழ் மாவட்டத்தில் மட்டும் அல்லது வட மாகாணத்திலேயே இந்தக் குறைபாடு உள்ளமை கண்டறியப்பட்டது. இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்து பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்காக அதிகளவு தமிழ் பெண்களை பொலிஸ்துறையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் பொலிஸ் துறையில் இணைந்து கொள்ளும் தமிழ் பெண்கள் உயரதிகாரிகளால் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற ஒரு தவறான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொலிஸ் துறையில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் உங்கள் பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளிடம் சென்று பேசி உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும். இதேவேளை வட மாகாணத்தில் தற்போது 400 பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் 100 பெண் பொலிஸ் பரிசோதகர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அவ்வாறு குறித்த 500 விண்ணப்பங்களும் கிடைக்கும் பட்சத்தில் வடமாகாணத்திலேயே இவர்களுக்கான பயிற்சிகல்லூரி ஒன்றை அமைத்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.