குருநாகல் பொத்துஹர ரயில் விபத்தில் 75பேர் படுகாயம்-

pothuherapothuhera 05pothuhera 04pothuhera 02குருநாகல்- பொத்துஹர ரயில் நிலையத்தில் இன்றுகாலை 8.45அளவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் 75பேர் படுகாயமடைந்;துள்ளனர். இவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயில் பொத்துஹெர ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அதிவேக ரயில் அதனுடன் மோதியதாக கூறப்படுகிறது. விபத்து காரணமாக வடக்கு பிரதேசங்களுக்கான ஐந்து ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. பளை, வுவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான நெடுந்தூர ரயில் சேவைகளே ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்தவர்களின் பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை இந்த விபத்தே இலங்கையில் அதிகம் நஷ்டத்தை ஏற்படுத்திய ரயில் விபத்து எனவும் இந்த விபத்தினால் 10கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத அதிகாரி பி.எல்.பி. ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேடகுழு ஒன்றினை நியமிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மாணவிகள் மூவரை காணவில்லையென முறைப்பாடு-

muthur missingதிருகோணமலை, சம்பூர் பாடசாலை மாணவிகள் மூவர் காணாமற்போன சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பூர், நோவூர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் நேற்று பாடசாலை சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என பொலிஸில் மாணவிகளின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பூரைச் சேர்ந்த செல்வரட்ணம் சசிந்தா (16), தங்கராசா சங்கீதா (13) மற்றும் அழகராசா சரிதா (12) என்ற மூவரே காணாமற்போயுள்ளனர். இவர்கள் கடத்தப்பட்டுள்ளார்களா அல்லது வேறு ஏதும் பிரச்சினை காரணமாக காணாமற்போயுள்ளனரா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை நேற்று காணாமற்போன நிலையில் மீண்டும் வீடு திரும்பியதாக கூறப்படும் 24வயதான பெண்ணிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள் சந்திப்பு-

northern-untitledவட மாகாணசபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது. திருகோணமலையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது மக்கள் எதிர்நோக்கும் பல பொதுப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது கிழக்கு மாகாணத்துடன் கருத்தொற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் ஒன்றாக செயற்படுவதற்கான தமது விருப்பத்தை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் சந்திப்பு இன்று திருமலையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்;றிருந்தனர்.

இராணுவ வாகனமும், வேனும் மோதி விபத்து, 7பேர் காயம்-

army vehicle accidentarmy vehicle accident (2)--90999இராணுவ கெப் வாகனமும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7பேர் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றுகாலை 6 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 12ஆம் வளைவில் இந்த விபத்து இடம்பெற்றதாக கருவலகஸ்வௌ பொலிஸார் கூறுகின்றனர். காயமடைந்தவர்களில் ஐவர் இராணுவத்தினர் என்றும் ஏனைய இருவரும் மொரட்டுவையைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. வவுனியாவிலிருந்து கொழும்புக்கு பயணித்த கெப் வாகனமும் மொரட்டுவையிலிருந்து யாழ் பயணித்த வேனும் மோதுண்டதிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. சாரதியின் தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்கு காரணமென பொலீசார் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் மே தின நிகழ்வு-

May Day 2014வவுனியாவில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்களும் விவசாய மற்றும் தொழிற்சங்க அமைப்புக்களும் இணைந்து நடாத்தும் மேதின நிகழ்வு நாளையதினம் (01.05.2014) நடைபெறவுள்ளது, அரசியல் கட்சிகள் சாராது நடத்தப்படுகிற இந்த மேதின நிகழ்வின்போது காலை 9.30 மணியளவில் வவுனியா பஸ் நிலையத்தில் ஆரம்பமாகின்ற தொழிலாளர் தின ஊர்வலம் காலை 10.30 மணியளவில் வவுனியா நகரசபையைச் சென்றடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபையில் மேதின பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

கன்னாட்டியில் கடும் காற்று, மழை காரணமாக இடம்பெயர்வு-

vellam idampeyarvuவவுனியா கன்னாட்டி பிரதேசத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் 27 குடும்பங்களைச் சேர்ந்த 76பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை பெய்த காற்றுடன் கூடிய மழையினால் இவர்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடும் காற்றுடன் மழை பெய்தமையினால் வீடுகளுக்குள் மழை நீர் வந்தமையினால் மக்கள் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபமொன்றில் தங்கியுள்ளனர். அவ்விடத்தை உடனடி நலன்புரி நிலையமாக மாற்றி அவர்களுக்கான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகம் செல்லும் அகதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி-

Refugee_Indiaஇலங்கையிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் 10ற்கும் குறைவானவர்களே இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்துக்கு இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளதாக மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இலங்கையில் இருந்து வரும் அகதிகளைப் போன்றே, தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களிலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக தமிழக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சிரேஷ்ட அமைச்சர்களுக்கு 90 சாரதிகள் நியமனம்-

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிரேஷ் அமைச்சர்கள் 10 பேருக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அமைச்சர் செயலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள 127 ஊழியர்களில் 90பேர் சாரதிகள் என கூறப்படுகிறது. நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சாரதிகள் என்பதனால் செயலகங்களின் ஏனைய செயற்பாட்டுகளுக்கு 37 ஊழியர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்நிலையில், மனிதவள அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கையினை ஒரு சிறு பிரிவினரால் மேற்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள மனித வள சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர அறிவு மற்றும் அனுபவமிக்க அதிகாரிகள் அடங்கிய இணைப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறு இந்த காரியாலயத்தை பராமரிப்பதற்கு வருடத்துக்கு 10 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழைச்சேனையில் வெடிபொருள் மீட்பு-

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த வளவினுள் ஜொனி வகை வெடிபொருள் ஒன்றை இன்றுகாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதை தொடர்ந்து பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸார் வெடிபொருளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை செயலிழக்கச் செய்வதற்காக குண்டு செயழிளக்கச் செய்யும் இராணுவப் பிரிவினரின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.