கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்க ஐவர் கொண்ட குழு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்குரிய நடவடிக்கைளை முன்னெடப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருமலை நகரசபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (29.04.2014) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ் சிறீதரன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், கே. கருணாகரம்(ஜனா), ஹென்றி மகேந்திரன், புளொட் சார்பாக செயலாளர் சு.சதானந்தம், கந்தையா சிவநேசன்(பவன்), ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், இரா.துரைரெட்ணம் ஆகியோர் பங்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் புலிகள்மீதான தடை நீடிப்பு-
புலிகள் இயக்கம் சர்வதேச ரீதியாக தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர்ந்த மக்கள், புலிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் தொடர்பாடல் சாதனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நிதி திரட்டப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள வருடாந்த தீவிரவாதம் சம்பந்தமான அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ல் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டாலும், 2013முதல்; அந்த இயக்கம் மீண்டும் இலங்கையில் மீளுருவாகுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவற்றை அரசாங்கம் பயன்படுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சட்டம் சில தருணங்களில் முறைக்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளையும் அமெரிக்கா உள்ளடக்கி இருக்கிறது. இதன்மூலம் புலிகளுக்கு எதிரான அமெரிக்காவின் தடை தொடர்;கின்றது.
புலி உறுப்பினர்களை சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரிகள் கௌரவிப்பு-
வவுனியா நெடுங்கேணி பிரசேத்தில் ஏப்ரல் 11ஆம் திகதி புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்பட்ட கோபிதாஸ், அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரையும் சுட்டுக் கொன்றதுடன் திறமையாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத் தலைமையகத்தில் நேற்று நடந்த இந்நிகழ்வில் வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, சிறப்புப் படைப்பிரிவின் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.எம்.வை.ஜே.ரத்நாயக்க, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் கேணல் ரி.எஸ்.சாலி, 2வது சிறப்புப்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி லெப்.கேணல் எம்.பி.கே.எல்.அமரசிங்க, லெப். டி.எம்.திசநாயக்க, கோப்ரல் தினேஸ்குமார, கோப்ரல் ஜெயசிங்க, கோப்ரல் கமகே ஆகிய எண்மரே கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு, ஒருவர் பலி-
தமிழ்நாடு, சென்னை மத்திய ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்றுகாலை குண்டு வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12பேர் காயமடைந்துள்ளனர். பெங்களூரில் இருந்து புறப்பட்ட கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்றுகாலை 7.30 மணியளவில் சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு வந்தது. 9ஆவது நடைமேடைக்கு ரயில் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் எஸ்-4, எஸ்-5 பெட்டிகள் சேதமடைந்தன. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 24வயதான இளம் யுவதி பலியானார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிரான தடை, கனடா புறக்கணிப்பு-
இலங்கை அரசாங்கத்தினால் 16 புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை, தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என கனடா தெரிவித்துள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் இதனைத் தெரிவித்துள்ளார். 16 புலம்யெர்ந்த அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு எதிராக அண்மையில் அரசாங்கம் தடை விதித்திருந்தது. எனினும் இந்த அமைப்புகள் 16ம் ஏனைய தனி நபர்களும் கனடாவில் சுயாதீனமாக இயங்க முடியும் என்று அமைச்சர் ஜோன் பெயார்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போன மூதூர் மாணவிகள் கண்டுப்பிடிப்பு-
திருகோணமலை மூதூர், சம்பூர் – சேனையூர் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் முதல் காணாமல்போன பாடசலை மாணவிகள் மூவர் நேற்றுமாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று முன்தினம் சம்பூர் பொலீஸ் நிலையத்தில், அவர்களின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மட்டக்களப்பு – ஏறாவூர் கிராம அதிகாரியினால் ஏறாவூர் பொலீஸ் நிலையத்தில் குறித்த மாணவிகள் மூவரும் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த மாணவிகளில் ஒருவரது மாமியின் வீட்டில் அவர்கள் தங்கியுள்ளனர் என கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கிராம சேவையாளரினால் பொலீசாரிடம் கொண்டு வந்து மாணவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகள் பற்றி தெளிவுபடுத்தல்-
இலங்கையினால் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் மாற்று அரசாங்கம் ஒன்றை உருவாக்க பிரித்தானிய தமிழர் அமைப்பு, உலக தமிழர் அமைப்பு உள்ளிட்ட புலிகளிளுடன் தொடர்புடைய 16 அமைப்புகளை தடை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது. அதுபோல் நெடியவன் உள்ளிட்ட 430 விடுதலை புலி செயற்பாட்டாளர்களை கைது செய்யுமாறு அரசாங்கம் சர்வதேச காவல்துறையிடம் அறிவித்துள்ளது. அத்துடன் நெடியவன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கு மார்க்க ரயில் சேவையில் பாதிப்பு-
வடக்கு ரயில் மார்க்கத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது. இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது. குருநாகல் – பொத்துஹெர ரயில் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தினால் சேதமடைந்த ரயில் மார்க்கத்தை புனரமைத்தல் மற்றும் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இன்று முற்பகல் பயணிக்கவிருந்த தூரசேவை ரயில்களின் போக்குவரத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் நிலையம் கூறுகிறது. இதன்படி யாழ்தேவி, உட்பட மூன்று ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை பொதுஹெரவில்இடம்பெற்ற ரயில் விபத்தினைத் தொடர்ந்து கொழும்பு – கோட்டையில் இருந்து பளை வரை சென்ற ‘தேசத்தின்மகுடம்’ கடுகதி ரயிலின் சாரதி, உதவியாளர் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பொத்துஹெர ரயில்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சமிஞ்சை வழங்குனர் ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரச தாதி உத்தியோகஸ்தர்களின் பணிப்புறக்கணிப்பு-
நாடாளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் அரச தாதியர் உத்தியோகஸ்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாக யாழ். போதனா வைத்தியசாலை தாதிய கிளைச்சங்கமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய கிளைச்சங்கத்தை சேர்ந்த தாதியர்கள் இன்றுகாலை 7 மணிமுதல் வைத்தியசாலையின் புதிய கட்டடத்தொகுதிக்கு முன்பாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் தொடர்பாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் உபதலைவர் சிவயோகம் கருத்து தெரிவிக்கும்போது, தாதிய மாணவர்களுக்கு மருத்துவ மாது பயிற்சி நெறியினை மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் வழங்க மறுக்கின்றனர். அதேவேளை மகப்பேற்று விடுதிக்கு தாதியர்கள் சென்றால் வைத்திய நிபுணர்கள் வெளிநடப்பு செய்கின்றனர். தாதியர்களுக்கான மகப்பேற்று மருத்துவ மாது பயிற்சி நெறியினை வழங்க சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அப் பயிற்சி நெறியினை மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் தாதியர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். இப்பயிற்சி நெறியானது மூன்று வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு தேர்வு அடிப்படையில் வழங்கப்படும். அப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த பின்னர் தாதியர்கள் வைத்தியர்களுக்கு நிகரான வேதனத்தை பெறமுடியும். வைத்தியர்களுக்கு நிகரான வேதனத்தை தாதியர்களும் பெற்றுவிடுவார்கள் என்னும் காரணத்தால் தான் வைத்திய நிபுணர்கள் இப் பயிற்சி நெறியினை வழங்க மறுக்கின்றனர். ஆனால் இப் பயிற்சி நெறியினை தாதியர்கள் பெறுவதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையினை ஆற்ற முடியும். எனவே எமக்கான இந்த பயிற்சி நெறிக்கு தடையாக இருக்காமல் வைத்திய நிபுணர்களால் எமக்கான பயிற்சி வழங்கப்பட வேண்டும் என கோரியே நாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம். எமக்கான பயிற்சி நெறி வழங்கப்படும் வரை எமது போராட்டம் காலவரையின்றி நாடளாவிய ரீதியில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.