சூரிச் மாநிலத்தில் புளொட்டின் மே தின ஊர்வலம்-
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வின்போது தமிழ் இனத்தின்; பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், மறுக்கப்பட்டு வரும் இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே, அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம், போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.
காலை 10 மணியளவில் சூரிச் பிரதான புகையிரத நிலையத்துக்கு அண்மையில் உள்ள (சீல் போஸ்டுக்கு) LAGER Strasse எனும் இடத்தில் இன்றைய மேதின ஊர்வலம் ஆரம்பமாகி பிற்பகல் 1மணியளவில் BüRKLI Platz என்ற இடத்தில் நிறைவடைந்தது. இம் மேதின ஊர்வலத்தில் புளொட் அமைப்பின சுவிஸ்கிளை தோழர்கள், ஆதரவாளர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இம் மேதின ஊர்வலத்தில் ஜெர்மனியிலிருந்து கலந்துகொண்ட தோழர் ஜூட் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பல்வேறு நெருக்கடிகள், சிரமங்களுக்கு மத்தியிலும் வருடாவருடம் புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையினர் இந்த மேதின ஊர்வலத்தை நடத்தி வருவதும், இநநிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்று உரிமைக்குரல் கொடுப்பதும் மிகவும் மகிழ்ச்சிக்குரியதும், சிறப்பான விடயமும் ஆகும் அத்துடன், இம்முறை அரசியல் தீர்வு தொடர்பில் கோசங்கள் எழுப்பப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன், சுவிஸ் கிளையினரின் பங்கேற்புடன் சூரிச்சில் வருடா வருடம் நடாத்தப்படும் மேதின ஊர்வலம் மற்றும் அவற்றில் பெருவளவானோர் பங்கேற்பது தொடர்பிலும் இன்றைய மேதின ஊர்வலம் பற்றியும் பல ஊடகவியலாளர்கள் இன்றைய மேதின ஊர்வலத்தினைத் தொடர்ந்து புளொட் அமைப்பு சார்பில் பங்கேற்றிருந்தவர்களிடம் கேள்விகளை கேட்டபொழுது, புளொட்டின் சுவிஸ் கிளையைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சன் அவர்கள், அவற்றிற்கான பதில்களை விரிவான விளக்கங்களுடன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இன்றைய மேதின ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் சுவிஸ்கிளையினர் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.