வெளியுறவுக் கொள்கைதான் தலையீடுகளுக்கு காரணமென்பதை உணர வேண்டும்-மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் சுட்டிக்காட்டு-
30.04.2014 அன்று திருகோணமலை நகராண்மைக்கழக பொது மண்டபத்தில் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர் ஒருங்கிணைப்புக் கூட்டம் இடம்பெற்றபோது வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் குறிப்பிட்டதாவது. மதிப்புக்குரிய எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் ஜயா அவர்களே, செயலாளர் கௌரவ மாவை. சோ.சேனாதிராசா ஜயா அவர்களே, வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் ஜயா அவர்களே, கௌரவ சுரேஸ் பிரேமச்சந்திரன், கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ வடமாகாணசபை அவைத்தலைவர் சிவஞானம், கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ தண்டாயுதபாணி அவர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, மாகாணசபை உறுப்பினர்களே அனைவருக்கும் முதற்கண் வணக்கம். ஜ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாடுகளும் சம்பந்தமாக நான் ஒரு முக்கியமான விடயத்தை தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வரலாம் என நினைக்கின்றேன். அமெரிக்கா தலமையிலான நாடுகளினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இலங்கைக்கான தீர்மானத்தின் வெற்றிக்காக தமிழ் தேசியக் கூட்டமைபின்; தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் மற்றும் கௌரவ மாவை.சோ.சேனாதிராசா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ சுமந்திரன், கௌரவ ஸ்ரீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கௌரவ அனந்தி, கௌரவ சிவாஜிலிங்கம் அதனைப் போன்று புலம்பெயர்ந்த அமைப்புக்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
1977ம் ஆண்டுக்குப் பின்னர் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜேயவர்தன அவர்களினால் வெளியுறவுக்கொள்கை காரணமாக இந்தியத் தலையீடு எமது இனப்பிரச்சனை சார்பாக தலையிட வைத்தது. அதே போன்று இன்றைய மகிந்த அரசின் வெளியுறவுக் கொள்கை காரணமாகவே அமெரிக்க தலையீடு இன்று இலங்கைக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதேவேளை இன்றைய ஆதரவு தமது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு சார்பாக மாற்றும் இடத்து நிச்சயமாக அமெரிக்க தன் நலம் கருதி எம்மை கைவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதில் எமக்கு மிகவும் பாதகமான இன்னுமோர் விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
1990,1992 காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் உடைவதற்கு முற்பாடு எங்களுடைய இன விடுதலைப் போரட்டத்தில் பக்கபலமாக நின்று ரஷ்யா, சீனா, கீயூபா,வியட்னாம், வெனிசுவெலா, எல்சவ்டோ, குர்கிஸ்தான், பாலஸ்தீன், லெபனான், சிரியா, லிபியா, மற்றும் இந்திய கொமினேசுக்கள் ஆகிய நாடுகள் செயற்பட்டு இருந்தவை ஆகும.; ஆனால் இன்று எமது துரதிஸ்ரம் இந்த நாடுகள் அனைத்தும் இன்றைய இலங்கை அரசுக்கு சார்பாகவுள்ளன.
எனவே தமிழ் தேசியத் கூட்டமைப்பின் உயர் தலைவர்கள் நான் மேற்குறிப்பிட்ட நாட்டுப் பிரதிநிதிகளுடன் எமக்கும் அவர்களுக்கும் இடையில் கடந்தகாலத்தில் இருந்த பரஸ்பர நல்லுறவை எடுத்தியம்பி எதிர்வரும் காலத்தில் சர்வதேச ரீதியாக எமக்கு வரும் ஆதரவை கோருமாறும,; தொடர்ந்து இதுவிடயம் தொடர்பாக எமக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ளுமாறும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
(ஜி.ரி.லிங்கநாதன், வடமாகாணசபை உறுப்பினர், வவுனியா வடக்கு) 01.05.2014.