சட்டவிரோதமாக ஆஸி செல்ல முயற்சித்த 64பேர் கைது-
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்றுஅதிகாலை 5.30 மணியளவில் கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளார். இவர்கள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முற்பட்ட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். எனினும், சமீப காலங்களாக எவரும் இவ்வாறு கைதுசெய்யப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கு ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது-
குருநாகல், பொதுஹர ரயில் விபத்தின் பின்னர் வடக்கு மார்க்கத்தில் இன்றுகாலை முதல் அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் மஹவ, குருநாகல் மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களிலிருந்து மூன்று அலுவலக ரயில்கள் பயணத்தை ஆரம்பித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டுகின்றது. இந்த அலுவலக ரயில் சேவைகள் தற்காலிகமாக இரண்டாம் மார்க்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிலையம் கூறுகின்றது. பளை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ள இரவுநேர தபால் ரயில்களும் கொழும்பை நெருங்கியுள்ளன.. பளை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி ரயில் அதிகாலை 5.45க்கு கொழும்பிலிருந்து புறப்பட்டது என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.
தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு நிர்மாணம்-
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கான பத்து மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு சீன அரசாங்கம், 13,400 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு தற்போது சிறிய கட்டடமொன்றிலேயே இயங்கி வருவதால், அப் பிரிவை நாடுகின்ற நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், மக்களுக்கு செயற்திறனுடன் கூடிய தரமான வைத்திய சேவைகளை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மன்னாரிலிருந்து இந்தியா செல்லவிருந்த நால்வர் கைது-
மன்னாரில் இருந்து படகு மூலம் சட்ட விரோதமாக இந்தியா செல்லவிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் வவுனியாவின் பம்பைமடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மன்னார் கடற்கரையில் இருந்து தங்களின் பயணித்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தபோது, கடற்படையினர் அவர்களை கைதுசெய்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.
யாழ். பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்-
யாழ்.பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்யோகத்தர்கள் இன்றுகாலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மாணவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறியே இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர். இதனை முற்றுமுழுதாக மறுத்த மாணவர்கள் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆங்காங்கே தொங்கவிடப்பட்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
புலிகளுக்கு உதவிய தபால் ஊழியர் கைது-
புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் நோக்கில் செயற்பட்டு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பன் என்றழைக்கப்படும் நவநீதனுக்கு உதவியதாக கூறி தபால் ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பன் என்ற புலி உறுப்பினர், அநுராதபுரத்தில் தங்கியிருந்த போது மேற்படி தபால் ஊழியர் அவருக்கு உதவியதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர், தபால் ஊழியராகச் செயற்பட்ட அதேவேளை, திறப்புக்களை வெட்டும் தொழிலையும் செய்து வந்துள்ளார் என பொலீஸார் கூறியுள்ளனர்.
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு-
குருநாகல் – பொத்துஹெர ரயில் விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு, 25,000 ரூபா நஸ்டஈடு வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதன்படி ரயில்வே திணைக்களத்தின் ஊடாக குறித்த நிதி வழங்கப்படவுள்ளதாக ரயில்வே வர்த்தக அதிகாரி ஜீ.டப்ளியூ.எஸ்.சிசிரகுமார குறிப்பிட்டுள்ளார். கடந்த 30ம் திகதி (ஏப்ரல் 30) குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அர்த்தமுள்ள நடவடிக்கை மேற்கொள்ளாமை ஏமாற்றமே-அமெரிக்கா-
பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கடந்த நான்கு வருடங்களில் இலங்கை போதுமான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான உதவிச் செயலாளர் நிஷா தேஷாய் பிஸ்வால் இன்றையதினம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டை இன்னும் நீடித்த அமைதி நோக்கி எடுத்துச் செல்லவும், இலங்கை அரசுடனும் மக்களுடனும் அமெரிக்கா இணைந்து செயற்பட உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 5,646 விதவைகள்-
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் கணவன் இழந்து விதவைகளாக 5,646 பெண்கள் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார். அத்துடன், 1,888 பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். இவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களிலும், ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களிலும், தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் வேலைக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், தன்னார்வு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சுயதொழில் உதவிகள் கடன்கள் மூலம் சுயதொழில்களையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 1 இலட்சத்து 32 ஆயிரத்து 513 பேரில் 12 ஆயிரத்து 756 பேர் முதியவர்களாகக் காணப்படுகின்றனர்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.