இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்-
இன்று உலக பத்திரிகை சுதந்திர தினமாகும். உலக பத்திரிகை சுதந்திர தினமானது பத்திரிகை சுதந்திரத்தை பரப்பும் நோக்கிலும், மனித உரிமைகள் சாசனத்தின் 19ஆம் பிரிவின் பிரகாரம் கருத்து சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு நினைவூட்டவும்; ஐ.நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தின்படி, ஆண்டுதோறும் மே மாதம் 3ஆம் திகதி பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறந்த எதிர்காலத்திற்கான ஊடக சுதந்திரம் 2015ஆம் ஆண்டிற்குப் பின்னராக அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை கூர்ப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நீர் வேலியில் கூட்டமைப்பின் பணிமனை திறந்துவைப்பு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் பிரதேச பணிமனை இன்றுகாலை 9 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்- பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திறந்துவைத்துள்ளார். இந்நிகழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
தாதியர் பணிப்பகிஷ்கரிப்பால் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்-
அரச தாதி உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டின் அநேகமான வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. பிரசவ பயிற்சியினை வழங்குமாறு கோரியே இவர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர். இந்த பிரச்சினன தொடர்பாக சுகாதார அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்தே இன்று இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இரத்தினபுரி, யாழ்பாணம், கராப்பிட்டி, தங்காலை, பொலநறுவை, அநுராதபுரம், மாத்தறை, கலேன் பிந்துனுவௌ, மாத்தளை, களுத்துறை, காலி உள்ளிட்ட பகுதி வைத்தியசாலைகளில் ஸ்தம்பிதநிலை ஏற்பட்டுள்ளது. குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாதி உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர். யாழ்பாணம், இரத்தினபுரி, கராப்பிட்டி, தங்காலை, எல்பிட்டி மற்றும் கம்பளை ஆகிய பகுதி வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது. குருநாகல் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் அவசர பிரிவு கடமைகளில் இருந்தும் விலகியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்-
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஹம்பாந்தொட்டை பொலீஸ் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஐ.தே.கட்சியினர்மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது பொலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலையிலேயே அவர்கள் பொலீஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்க 26 இந்திய மீனவப் பிரதிநிதிகள்-
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் பொருட்டு, இந்தியாவிலிருந்து 26 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கை மீன்பிடித்திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்த பேச்சுவார்த்தைகளின் முதல்சுற்று கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி சென்னையில் இடம்பெற்றது. இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு திகதிகளுக்கு மாற்றப்பட்டு வந்த நிலையில், இறுதியாக இதனை எதிர்வரும் 12ம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை மீனவர்கள் சார்பில் 20 பேர் கலந்து கொள்ளவிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸி செல்ல முயன்று கைதானவர்களிடம் விசாரணை-
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 54பேரும் திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு, இரகசிய பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்;. கடற்படையின் இணையத்தளத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் இருந்து 20 கடல்மைல் தொலைவில் அவர்களின் படகு கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, 54பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 30 ஆண்களும், 11 பெண்களும், 13 சிறார்களும் அடங்குகின்றனர். இந்நிலையில் அவர்கள் இரகசிய பொலீசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் எழுத்துப் பிழைகள் தொடர்பில் ஆய்வு-
அரசாங்க நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் காணப்படும் தமிழ் எழுத்துப் பிழைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். காலி – கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகை ஒன்றில் இவ்வாறு தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றமை தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர்; குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான எழுத்துப் பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின-
குருநாகல், பொத்துஹெர பகுதியில் கடந்த புதன்கிழமை காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பளைக்கான ரயில்சேவை அட்டவணையின்படி இன்று இயங்குவதாகவும் சிறு திருத்தங்கள் இன்று காலையுடன் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பிற்பகல் 2 மணியுடன் ரயில் பாதை முற்று முழுதாக தயாராகுமெனவும் ரயில்வே அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க கூறியிருந்தார்.