கொழும்பில் தமிழர்கள் மீண்டும் குறி வைப்பு-

colombo 'கொழும்பு நகரில் அண்மைக்காலமாக தமிழ் மக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் வழிப்பறி நடவடிக்கைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. குறித்த சில இனந்தெரியாத நபர்களால் தாம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறியும் அடையாள அட்டையைக் காட்டுமாறு மிரட்டியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்கிஸை பகுதியில் இரு தமிழ் ஆசிரியைகள் அணிந்திருந்த ஆபரணங்களை அபகரிக்க முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் கல்கிஸைப் பகுதி தமிழ்ப் பாடசாலையொன்றில் பணியாற்றுகின்றேன். காலை வேளையில் பிரதான பாதையைக் கடக்க முற்பட்ட சமயத்தில் நெடிய தோற்றத்துடன் பின்னால் ஒருவர் அழைத்தார். தான் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், விசாரணையின் பொருட்டு எனது அடையாள அட்டையை காண்பிக்குமாறும் அதிகாரத் தொனியில் கேட்டார். உடனே நானும் அடையாள அட்டையைக் காட்டினேன். இணைக்கும் நொடியில் அவருடன் இணைந்து கொண்ட இன்னொருவர் எனது கையிலிருந்த மோதிரத்தை கழற்றுமாறும் மிரட்டினார். அதிர்ஷ்டவசமாக பின்னால் வந்த பொலிஸ் வண்டியைக் கண்டதும் இருவரும் விரைந்து சென்று விட்டார்கள். இவ்வாறானதொரு சம்பவம் என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியை ஒருவருக்கும் இடம்பெற்றுள்ளது எனக் கூறினார்.

இலங்கை வர்த்தகக் குழு ஓமானுக்கு விஜயம்-

omanஇலங்கையின் வர்த்தகக் குழு ஒன்று ஓமானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. நான்கு நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் இக்குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வர்த்தக சம்மேளனத்தினரின் அனுசரணையில் குழுவின் விஜயம் அமைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது. சுற்றுலாத்துறை, மருந்துப் பொருள் வர்த்தகம், பழங்கள் மற்றும் மரக்கறிவைக ஏற்றுமதி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகத்துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கனேடிய பாடசாலையில் புலிகளின் கொடிக்கு தடை-

imagesCA47OAWZபுலிகளின் கொடியை கனேடிய உயர்கல்வி பாடசாலை ஒன்று தடை செய்துள்ளது. தென்மேற்கு ஒன்டோரியோவில் உள்ள பாடசாலை ஒன்று இந்த தடையை ஏற்படுத்தியுள்ளது. குமார் மார்கண்டு என்று மாணவர் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களாக புலிகளின் கொடியை தமிழர்களின் கொடி என கூறி, அந்த பாடசாலையில் இடம்பெறும் வருடாந்த பேரணியில் காட்சிப்படுத்தி வந்துள்ளார். எனினும் கடந்த வெள்ளிக்கிழமை இந்த கொடியை அங்கு காட்சிப்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கமலேஷ் சர்மார் சந்திப்பு-

kamalesh sharmaபொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கும், நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. லண்டனில் உள்ள பொதுநலவாய நாடுளின் தலைமையகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது சட்டத்துறை சீர்த்திருத்தங்கள் மற்றும் நியமனங்கள் பற்றி பேச்ப்பட்டதாக தெரியவருகிறது.

அலுகோஸ் என்ற பெயரை மாற்றம் செய்ய நடவடிக்கை-

alugusuதூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை தூக்கிலிடும் அலுகோஸ் என்ற பெயரினை மாற்றுவதற்கு தீர்மானித்துளளது. தூக்கு மேடையினை தயார் நிலையில் வைத்திருப்பவர் மற்றும் தூக்குத் தண்டனையினை நிறைவேற்றுபவர் அலுகோஸ் என அழைக்கப்பட்டு வந்தவர். எனினும் அலுகோஸ் என்ற பெயரை கௌரவமளிக்கும் வகையிலான பெயருக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய கூறியுள்ளார். உரிய பெயர் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மொழி நிபுணர்களின் சேவை பெறப்படும் என கூறப்பட்டுள்ளது. அண்மையில் இந்த பணிக்காக தெரிவான நால்வர், சில வாரங்களின் பின், தமது பதவியிலிருந்து முன் அறிவித்தல் இன்றி விலகிச் சென்றுள்ளனர். அலுகோஸ் என்ற சொற்பதத்திற்கு ஈவிரக்கமற்ற பாவச்செயல் போன்ற கருத்தை கொண்டுள்ளதனால் இந்த பதத்தினை மாற்ற திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தாதியர்களின் சேவைப் புறக்கணிப்பு தொடர்கிறது-

Thaathiyar purakanippuநாடெங்கிலும் உள்ள அரச வைத்தியசாலைகளின் தாதியர்கள் தொடர்ந்தும் தங்களின் சேவைப் புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர். மகப்பெற்று வைத்தியம் தொடர்பான பயிற்சி வழங்கல் குறித்து ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக இந்த போராட்டம் நேற்றையதினம் முதல் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் வடக்கு கிழக்கு உள்ளிட்ட 650க்கும் அதிகமான வைத்தியசாலைகள் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தாதியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் தொடரும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய விமானம் தொடர்பில் 11 அல் கெய்டாவினர் கைது-

airகாணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அல் கெய்டா அமைப்பைச் சேர்ந்த 11பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைதான தீவிரவாதிகள் அனைவரும் 22 முதல் 55 வயதுடையவர்கள். இவர்களுள் விதவையொருவரும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் குறித்த விமானம் விழுந்திருக்காலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது காணாமல் போன மலேசிய விமானத்தை இந்த 11 தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய துணைத்தூதுவருக்கு பிரிவுபசாரம்-

INTHIYA THOOTHUVAR PIRIYAVIDAI (2)INTHIYA THOOTHUVAR PIRIYAVIDAI (1)கயானா நாட்டுக்கு மாற்றம் பெற்றுச் செல்லும் இந்திய துணைத்தூதுவர் வி.மகாலிங்கத்திற்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் பிரிவுபசார நிகழ்வு நடாத்தப்பட்டது. நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நேற்று இரவு 6.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து மாமன்றத்தினரால் இந்திய துணைத்தூதுவர் வி மகாலிங்கத்திற்கு பென்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னமும் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் யாழ்.பல்கலைகழக பேராசிரியர்கள் இந்துமா மன்றத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கோபியின் மனைவி விடுதலை-

gopiபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைதுசெய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நால்வரில் இருவர் பெண்கள். இருவர் ஆண்களாவர். நெடுங்கேணியில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவரான கோபி என்கிற கஜீபனின் மனைவி சர்மிளா, கஜீபனின் தாயாருக்கு உதவியாக இருந்ததாக தெரிவிக்கப்படும் புவனேஸ்வரி ஆகிய இரு பெண்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் புலிகளை மீளிணையச் செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள் என்றே கோபி என்ற கஜீபன் உள்ளிட்ட மூவரின் மீதும் அரசு குற்றம் சாட்டியிருந்தது. இச்சம்பவத்தில் பேக்கரி உரிமையாளர் எனக் கூறப்படும் ஒருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பேக்கரியில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொருவரும் விடுதலையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.நா விசாரணைக்குழு தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிப்பு-

UNஇலங்கை தொடர்பில் விசாரணை நடத்தவுள்ள விசாரணைக்குழு குறித்து இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணைக் குழுவுக்கான ஆளணித் தெரிவுகள் தற்போது இடம்பெறுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விசாரணைக்கான வரவு செலவுத்திட்டம் இன்னும் ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வரவு செலவுத் திட்டம் அங்கீரிக்கப்பட்டதன் பின்னர் விசாரணைக்கான நடவடிக்கைகள் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சுவேலியில் மூவர் படுகொலை, சந்தேகநபர் கைது-

ACHCHUVELI KOLAI (2)ACHCHUVELI KOLAI (1)

யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று அதிகாலை வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்றுகாலை கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த முக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆட்டோவை நவக்கிரி பகுதியிலிருந்து மீட்டதாகவும், இந்த ஆட்டோவிற்குள் பெருமளவு இரத்தக்கறைகள் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவரான தனஞ்செயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரே கொலைகளுக்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து, ஊரெழுப் பகுதியில் குறித்த நபர் மறைந்திருந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படவில்லை. இந்தக் கொலை தொடர்பாக அயலவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தர்மிகா திருமணமாகி ஒரு பிள்ளையின் தயாராவர். இவர் தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டுப் பிரிந்து பிள்ளையுடன் தனது தாய் சகோதரர்களுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கணவன் இவர்களது வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டதுடன் உங்கள் அனைவரையும் வெட்டிக் கொல்லுவேன் என கூறிச்சென்றதாகவும், அதன் பின்னரே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளதால், அவரே இக்கொலைகளை செய்திருக்கலாம் எனவும் அயலவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். அதேவேளை சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்ததாகவும் இன்னும் ஒரிரு தினங்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையிலையிலேயே இக்கொலைகளை செய்துவிட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்திருக்கலாம் எனவும் அயலவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.