ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானிக்கவில்லை-ரணில்-

ranil01நாட்டின் எதிர்காலம் குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கு மற்றும் இலக்கு பற்றி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் பாரிய மோசடிகள் குறித்து கீழ் மட்டத்தில் இருந்து தெளிவுபடுத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது இருக்க எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின் அது குறித்து தீர்மானிக்கப்படும். ஐ.தே.கட்சி ஆட்சியில் 17வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு 18வது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரவை, பாராளுமன்றம், ஜனாதிபதிக்கு மேல் அதிக அதிகாரம் கொண்ட முறை ஒன்றை ஏற்படுத்துவோம். கல்வி, சுகாதாரம், நிதித் துறையில் பாரிய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

சர்வதேச பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம்-

sarvadesa piramukarஇலங்கையில் இடம்பெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு சர்வதேச பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். நேற்று இரவும் அதனை தொடர்ந்து இன்று அதிகாலையும் அவர்கள் இலங்கை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியன்மார் குடியரசின் சமூக நவன்புரி அமைச்சர் மியேடி ஒங் கிங் மற்றும் நேபாள குடியரசின் சுகாதார துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் புருசோத்தம் பாவுமோல் ஆகியோர் இலங்கை வந்தடைந்துள்ளனர. உலக இளைஞர் மாநாடு நாளை முதல் 10ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்-

aarpattamவட மாகாண ஆளுனர் அலுவலகத்துக்கு முன்பாக ஆசிரியர்கள் சிலர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பித்து ஒரு மணித்தியாலம் வரை நீடித்திருந்தது. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றிவரும் தமக்கு சொந்த இடங்களுக்கான இடம்மாற்றத்தை வழங்குமாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

உள்ளுராட்சி மன்றங்கள் பற்றி பவ்ரல் அமைப்பு ஆய்வு-

paffrelஉள்ளுராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய எல்லை வரையறைகள் தொடர்பில் அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு பவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எல்லை வரையறைகளை பக்கசார்பின்றி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முகமாக செயற்படுத்தியுள்ளார்களா என ஆராயும் நோக்கில் இந்த கலந்துரையாடல் அமையும் என்று பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் றோஹன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற சட்டமூலத்திற்கு அமைய வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை பற்றி தமக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும், எனவே, பொதுமக்கள் ஜனநாயக உரிமைகளை நிறைவேற்றும் வண்ணம் அவை அமைந்துள்ளதா என்று அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

3ஆயிரம் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம்-

kalvi amaichchuஇந்த வருடத்தில் மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்களை சேவையில் சேர்த்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேசிய கல்வியற் கல்லுரிகளில் இருந்து நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்திய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவாகும் ஆசிரிய பயிலுனர்கள், கிராம புறங்களில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் பணிக்கமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். கிராமபுற பாடசாலைகளில் நிலவி வரும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு இது உதவும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுபல சேனா, ஜாதிக பல சேனாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை-

law helpபொதுபல சேனா, ஜாதிக பல சேனா ஆகிய இரு அமைப்புக்களும் சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயற்படக் கூடாது என கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு நிப்பொன் ஹோட்டல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதான நீதிவான் திலின கமகே இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளார். இவ்வழக்கு விசாரணையின்போது பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட நால்வரை தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்ததுடன் எதிர்வரும் ஜுன் 9ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறு பணித்துள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயற்சி;, இலங்கை மறுப்பு-

ranuwa pechchaalarபாகிஸ்தானின் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்பினருக்கு இலங்கையில் ஆயுத பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் செய்திக்கு இலங்கை இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த கூற்று ஆதாரமற்றது என தெரிவித்த இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, பயங்கரவாத அமைப்பொன்றுக்கு உதவ வேண்டிய எந்தவொரு தேவையும் இலங்கைக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கவே உகந்த இடம் இலங்கையில் இல்லாத நிலையில், பயங்கரவாத அமைப்பொன்றுக்கு எவ்வாறு பயிற்சியளிப்பது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையின் வட, கிழக்கு உட்பட அனைத்து காட்டுப் பகுதிகளிலும் அடிக்கடி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில், எந்தவொரு குழுவும் சுயமாகவோ அல்லது படை முகாம்களுக்குள் நுழைந்தோ பயிற்சிகளைப் பெற முடியாது என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் வீடுவீடாக இராணுவத்தினர் பதிவு-

iranuvam pathivuயாழ். மானிப்பாய், உடுவில் வீதியிலுள்ள வீடுகளில் நேற்றுக்காலை, இராணுவத்தினரால் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. யாழிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், இந்த பதிவுகள் இடம்பெற்றதாக யாழ். படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நல்லிணக்க மையத்தினால் 1,350 இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான செயற்றிட்டத்திற்காகவே இந்தப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் படைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. மேற்படி செயற்றிட்டத்திற்காக நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் முறையே ஏப்ரல் 17 மற்றும் 27ஆம் திகதிகளில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன,

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு மீண்டும் அகதிகள்-

Refugee_Indiaஇலங்கையைச் சேர்ந்த 10 பேர் சட்டவிரோதமாக படகு மூலம் இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி இலங்கையர்களிடம் தமிழக கியூபிரிவு மற்றும் பொலீஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் சென்றவர்களுள் 5 குழந்தைகள் அடங்குகின்றனர். புலிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக அவர்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும், குறித்த 10 பேரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பிடத்தக்களவு தாதியர் கடமைக்கு சமூகம்-

Thaathiyar purakanippuபணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இன்று குறிப்பிடத்தக்களவு தாதியர்கள் பணிக்கு சமூகமளித்ததாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், பல்வேறு அழுத்தங்களால் ஒரு சில தாதியர்கள் இன்றும் கடமைக்கு திரும்பவில்லை என சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியுள்ளார். மகப்பேற்று பயிற்சி தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டிருந்த பணி பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர். இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நிதி அமைச்சின் செயலர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர தலைமையில் குழுவை நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை பணிப் பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை என அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கமும், அகில இலங்கை தாதியர் சங்கமும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அச்சுவேலி முக்கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்-

achchuveli policeachchuveli kolai (2)யாழ். அச்சுவேலியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் ஜோய் மகாதேவா இன்று உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரினை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தனர். கொலைகளுடன் தொடர்புடையவரென, படுகாயமடைந்துள்ள தர்மிகாவின் கணவர் பொ.தனஞ்செயன் ஊரெழுவில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை கைப்பற்றிய பொலீஸார், ஆட்டோ உரிமையாளரையும் நேற்று கைது செய்தனர். தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியானவருமான மதுசாவை இரண்டாவதாகத் திருமணம் செய்வதற்கு கிடைக்காத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்) படுகொலைகளைச் செய்துள்ளார். இந்நிலையில் இன்றுகாலை சந்தேகநபரை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தினைச் சூழ்ந்துகொண்ட மக்கள் கோரியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் மல்லாகம் நீதிமன்றுக்கு பலத்த பாதுகாப்புடன் சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்டார். மல்லாகம் நீதிமன்றத்திலும் பெருமளவு பொதுமக்கள் சூழ்ந்ததால், அங்கும் பாதுகாப்பு பெருமளவு பலப்படுத்தப்பட்டது.