வலிமேற்கில் கிறிக்கெட் போட்டியும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பும்-
04.05.2014 அன்று யாழ். சங்கானை பிரதேச செயலகத்தின் கிறிக்கட் அணிக்கும் வலிமேற்கு பிரதேச சபை கிறிக்கட் அணிக்கும் தவிசாளர் வெற்றிக் கிண்ணத்திற்கான 20 பந்துப் பரிமாற்றங்களை கொண்ட சிநேகபூர்வ மென்பந்து கிறிக்கட் ஆட்டம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். கௌரவ விருந்தினராக பிரதேச சபை உறுப்பினர்களான சி.ஐயலிங்கம் மற்றும் ப.சபாநாயகம் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர் இவ் விளையாட்டில் பிரதேச செயலக அணியினர் வெற்றிக் கிண்ணத்தினை தமதாக்கிக் கொண்டனர். நிகழ்வின் இறுதியில் கடந்த 2013ம் ஆண்டில் நடைபெற்ற அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான கிறிக்கட் போட்டியில் சங்கானை பிரதேச செயலகம் வெற்றி பெற்றமை தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டவேளை தவிசாளர் தனது மாதாந்த கொடுப்பனவின் வாயிலாக பிரதேச செயலக அணியினருக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார் மேற்படி விளையாட்டு உபகரணங்களை கிராமசேவையாளர் திரு சதாசிவம் வைத்தியநாதன் அவர்கள் தவிசாளரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
வலி மேற்கில் திருமதி ஆறுமுகம் நினைவு நாள், சுயதொழில் உதவி-
கடந்த 04.05.2014 அன்று மறைந்த திருமதி ஆறுமுகம் அவர்களது நினைவுநாள் நிகழ்வு யாழ். வலிமேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன அவர்கள் உரையாற்றும்போது, ஓரு சிறந்த தாய் ஆற்றவேண்டிய கருமத்தினை ஆற்றி ஓர் முன்னுதாரணமாக வாழ்ந்த தாய் திருமதி ஆறுமுகம் அவர்கள் அவரது ஓயாத முயற்சியினால் ஒரு சிறந்த கணித ஆசானை உருவாக்கி அவர்மூலம் பல ஆயிரம் மாணவர்களை கணிதத்துறையிலே உயரச்செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்தப்பணி இத்தாயின் புனிதத்தனமையை எடுத்துக்காட்டும் செயலாகும் வறுமை நிலையையும் பொருட்படுத்தாது தனது மகனின் உயர்வுக்காக உழைத்த இத்தாயின் உயரிய பணியினை ஏனையவர்களும் பின்பற்றுவது மிகச்சிறந்ததாகும் என குறிப்பிட்டார். இந்நிகழ்வில் சங்கானைப் பகுதியினை சேர்ந்த இரு சிறுவர்களின் தாயாகிய இளம் விதவைப் பெண் ஒருவருக்கு கோழிவளர்ப்பு சுய தொழிலை மேற்கொள்ளும் பொருட்டு தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தமது மாதாந்த கொடுப்பனவை சபையோர் முன்னிலையில் வழங்கினார். திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தவிசாளர் பதவிக்கு வந்த 2011ம் ஆண்டிலிருந்து தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய உறுதியின் பிரகாரம் தனது மாதாந்த கொடுப்பனவை மக்களின் பணிக்காக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை-
அவுஸ்திரேலிய பெற்றோர் இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க எண்ணியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட பின் தத்தெடுப்பதற்குத் தகுதியான குழந்தைகள் பற்றிய விபரங்கள் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது. இலங்கை, வியட்நாம், கம்போடிய, கென்யா, பல்கேரியா, லட்வியா உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகளிலிருந்து இவ்வாறான தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் தத்தெடுக்கப்படவுள்ளனர். இதுதவிர, தென்னாபிரிக்காவில் இருந்தும் குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபட் கூறியுள்ளார்.
வலிமேற்கு பிரதேசசபை தவிசாளரின் 100 பஜனைப் பாடசாலைத் திடடம்-
யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 பஜனைப் பாடசாலைத்திட்டம் சித்தன்கேணி கலைவாணி வீதியில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்தில் கடந்த 02.05.2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பித்து வைககப்பட்டது. இந் நிகழ்வில் கலைவாணி சனசமூக நிலையத் தலைவர் அவர்கள் கரிகணண் அச்சகத்தினால் வழங்கப்பட்ட சமய நூல்களை வழங்;கிவைத்தார்.
வெருகல் பிரதேசத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை-
திருகோணமலை இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையோரத்தில் கடற்படை வீரர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் உரப்பையுடன் அப்பிரதேசத்தில் நிற்பதை கண்டு கடற்படை வீரர் அவர்களை நோக்கி சென்றபோது அவர்கள் உரப்பையை விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பையை சோதனையிட்ட கடற்படை வீரர் அந்த பையிலிருந்து ரி.56 ரக துப்பாக்கியையும், தோட்டாக்கள் சிலவற்றையும் மீட்டுள்ளார். இதன் காரணமாக இன்றுகாலை வெருகல் பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸாரும் ,இராணுவத்தினரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இந்த தேடுதல் நடவடிக்கைக்கு பல மோப்ப நாய்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய கூறியுள்ளார்.
ஜூன்முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயற்பட ஏற்பாடு-
புத்தளம், கற்பிட்டி, நுரைச்சோலை, லக்விஜய மின்னுற்பத்தி நிலையம் எதிர்வரும் ஜுன் மாதமளவில் மீண்டும் செயற்படும் பட்சத்தில் 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் டப்ளியு.பி.கனேகல தெரிவித்துள்ளார். முதல்கட்ட மின்னுற்பத்தி தொகுதியில் பல்திறன் மிக்க மின்பிறப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்ட மின்பிறப்பாக்கி தொகுதியில் தற்போது 600 மெகாவாட் மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனிடையே, எதிர்காலத்தில் மூன்றாம் கட்ட மின்பிறப்பாக்கி தொகுதியும் இணைக்கப்படும் பட்சத்தில் மொத்தமாக 900 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும். நாடு முழுவதுக்குமாக 2ஆயிரம் மெகாவாட் மின்சார தேவை நிலவுகின்ற தருணத்தில் நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம் அதற்கு பாரிய பங்கினை வகிப்பதாக மின்சார சபையின் தலைவர் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு தயாராகுமாறு, ஜனாதிபதி பணிப்பு-
ஊவா மாகாண சபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலை அடுத்து ஜனாதிபதியினால் அறிவுறுத்தல் கோவையொன்று வழங்கிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டுக்கொலை–
குருநாகல் தம்புள்ள வீதியில் முத்தெட்டுகல பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிசார் இருவர் கடத்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்; ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வேனில் வந்த சிலரால் நேற்று இரவு குறித்த இரண்டு பொலிசாரும் கடத்தப்பட்டு, படகமுவ வனப்பகுதியக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களது உத்தியோகபூர்வ உடைகள் களையப்பட்ட நிலையில் இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதன் பொருட்டு 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச இளைஞர் மாநாடு ஆரம்பம்-
சர்வதேச இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம், ருகுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகியுள்ளது. 28 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் விவகார அமைச்சர்கள், 62 நாடுகளின் இளையோர் விவகார சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பல பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். சர்வதேச இளைஞர் மாநாடு எதிர்வரும் 10 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பட்டதாரிகளின் மேன்முறையீட்டு ஆவண பரிசீலனை இரத்து-
மன்னாரில் இன்று நடைபெறவிருந்த பட்டதாரிகளின் மேன்முறையீட்டு ஆவண பரிசீலனை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அரச சேவையில் பட்டதாரிகளை உள்வாங்கும் பொருட்டு, 2012ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதிக்கு முன்னர் பட்டம் பெற்றவர்களின் ஆவண பரிசீலனை இன்றையதினம் இடம்பெறுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, குறித்த ஆவண பரிசீலனை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். ஆவண பரிசீலனை நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் வழங்குவோருக்கு சன்மானம்-
குருநாகல் தம்புள்ள வீதியில் முத்தெட்டுகல பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலீசார் இருவர் கடத்தப்பட்ட நிலையில், சுடப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தகவல் வழங்குவதுடன், சந்தேகத்திற்குரியவர்களை அடையாளம் காட்டுவோருக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹ அறிவித்துள்ளார்.. இதுவரை சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான கோவைகள் குற்ற விசாரணை திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் பலியானதுடன், பிறிதொருவர் காயமடைந்திருந்தார்.
கச்சத்தீவு வழக்கு ஒத்திவைப்பு-
கச்சத்தீவை இலங்கை அதிகாரத்தில் இருந்து மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். எனினும் கடந்த விசாரணையின் போது, இது தொடர்பில் விளக்கமளிக்க கால அவகாசம் தேவை என்று, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மனுத்தாக்கல் செய்திருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை இரண்டு வாரங்களின் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக இந்திய உச்ச நீதிமன்றம் நேற்றையதினம் அறிவித்துள்ளது.
தாவடி பகுதியில் ஆயுதங்கள் மீட்பு-
யாழ்.தாவடி தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றிலிருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி இராணுவத் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது. ஜே-192 கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள இப் பிரதேசத்திலிருந்து யூரியா பையினுள் கட்டப்பட்டிருந்த 5 ஆயிரம் ரி.56 துப்பாக்கி ரவைகள், இதர தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் என்பன மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த காணியயை உரிமையாளர்; துப்புரவு செய்தபோது, ஆயுதங்கள் இருப்பதைக் கண்ணுற்று 511 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தினைத் தொடர்ந்து இராணுவத்தினர் அவ்விடத்திற்குச் சென்று குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகம் 16இல் மூடப்படுமென அறிவிப்பு-
யாழ் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 21ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என மாணவர்களுக்கு அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களிலும் மற்றும் மாணவர்கள் விடுதிகளிலும் இது தொடர்பான அறிவித்தல் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாக துண்டுப்பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் தினம் மே 18ம் திகதி தமிழர்கள் மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையால் யாழ்.பல்கலையிலும் அது நினைவுகூரலாம் என்ற காரணத்தினால் இவ்வாறான விடுமுறை அறிவிக்கபபட்டிருக்கலாம் என மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.