இன்று உலக செஞ்சிலுவை தினம்-
உலக செஞ்சிலுவை தினம் இன்றாகும். செஞ்சிலுவைச் சங்கத்தை ஸ்தாபித்த ஜீன் ஷென்றி டுனன்ற் என்பவரின் பிறந்த தினமான மே 8ஆம் திகதி சர்வதேச ரீதியில் செஞ்சிலுவை தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1859ஆம் ஆண்டு ஆஸ்திரிய படைகளுக்கும், பிரான்ஸ் படைகளுக்கும் இடையே வட இத்தாலியிலுள்ள சோல்பரினோவில் இடம்பெற்ற யுத்தத்தின் கொடூரத்தை நேரிற்கண்டு வேதனையடைந்த ஜெனீவா நகர இளைஞன் ஹென்றி டுனன்ற்றுக்கு ஏற்பட்ட எண்ணக்கருவின் பிரதிபலிப்பே செஞ்சிலுவைச் சங்கம் ஆகும். இந்தப் போரின் விபரீதங்களை உணர்த்த ‘சோல்பரினோவின் நினைவுகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்ட அவர், அதன்மூலம் கருணை பொங்கும் நெஞ்சங்களை வசமாக்கி செஞ்சிலுவை சங்கம் உருவாக வேண்டியதன் அவசியத்தை உணரச் செய்தார். இந்த அடிப்படையில் 1863 ஆம் ஆண்டு செஞ்சிலுவை சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.. பாரபட்சம் இன்றி பாதிக்கப்படுவோருக்கு மனிதாபிமானத்தோடு உதவ வேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில்;சென்று பணிபுரிய, பாதிப்புகளை தடுக்க அல்லது அவற்றின் பரிமாணத்தைக் குறைக்க தேசிய, சர்வதேச ரீதிகளில் செஞ்சிலுவை இயக்கம் பாடுபட்டு வருகின்றது.
ஐ.நா பொதுச்சபைத் தலைவர் ஜனாதிபதி சந்திப்பு-
15ஆவது சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைத் தலைவர் கலாநிதி ஜோன் டபிள்யூ ஆஷ் நேற்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இதன்போது, ஆஷ் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தியை நேரில் காண முடிந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஐ.நா பொதுச் சபையின் தலைவர், சர்வதேச இளைஞர் மாநாட்டை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி ஆற்றிய உரையினைப் பாராட்டியுள்ளார். 30 வருடகால பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இலங்கை தெளிவானதொரு முன்னேற்றத்தினை அடைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவிற்குப் பிறகு, துரித அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
பொலீஸ் அதிகாரிகளை கௌரவிக்க ஏற்பாடு-
வடக்கில் 70 பேர் கைது செய்யப்படவும், கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்படவும் காரணமாக அமைந்த ஐந்து பொலீஸ் உறுப்பினர்கள் பொலீஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனினால் கௌரவிக்கப்படவுள்ளனர். கிளிநொச்சி பளை பகுதியில் வைத்து கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இருவரை குறித்த அதிகாரிகள் கைதுசெய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக்கப்படுவதாக பொலீசார் தீர்மானித்தனர். இதனைத் தொடர்ந்து வடக்கில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 70பேர் வரையில் கைது செய்யப்பட்டனர். அத்;துடன் கோபி அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூன்று பேரும் வவுனியாவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு ஆரம்பமாக அமைந்த கிளிநொச்சியில் சுவரொட்டிகளை வைத்திருந்தவர்களை கைதுசெய்தமைக்காக, பளை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியும், அதன் நான்கு கான்ஸ்டபில்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
யாழ், கிளிநொச்சி மக்களுக்கு கூட்டமைப்பு அவசர வேண்டுகோள்-
வடக்கிற்கு வெளியே வாழும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள வாக்காளர் இடாப்புப் பதிவில் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் தேர்தல் இடாப்புக்கள் வருகின்ற போது தயவுசெய்து நீங்கள் யாழிலும் கிளிநொச்சியிலும் உங்கள் வீடுகள் இருக்குமாக இருந்தால், அங்கு சென்று உங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வாக்காளர் பதிவின் மூலமாக ஒரு ஆசனத்தையே கூட்டக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்ற காரணத்தினால், இதனை மிக முக்கிய பொறுப்பாக ஏற்று, உங்களுடைய வீடுகளின் முகவரிகளை கொடுத்து, வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்ளுங்கள் என கூட்டமைப்பு கேட்டுள்ளது.
இலங்கையுடன் இந்தியா வர்த்தகம்-
உள்நாட்டு நாணய அலகுடன் இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருகிறது. இந்திய வர்த்தக இணையத்தளம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியா சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை அமெரிக்க டொலர் அலகில் மேற்கொண்டு வருகிறது. இதனால் உள்நாட்டு ரூபாவின் பெறுமதி இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுடன் உள்நாட்டு ரூபா அலகில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது.
சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கு அழைப்பு-
சிறிலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் நாளை நடைபெறவுள்ள விசேட சந்திப்பு ஒன்றின் நிமித்தம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது உத்தேச தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவ துறைசார் பட்டதாரிகளுக்கு நியமனம்-
வரையறுக்கப்பட்ட பயிற்சிகளுக்காக மேலும் 354 மருத்துவ துறைசார் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 13ம் திகதி அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளைகாலை 9 மணிமுதல் பொரளை மருத்துவ ஆய்வு கூடத்தில் இடம்பெறவுள்ளது. அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் அவற்றின் பிரதிகளுடன் நாளை வருகைதர வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்கள் மருத்துவ பீடத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட மருத்துவ சபையின் சான்றிதழுடன் சமூகமளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தவிர, பயிற்சிகளுக்காக இரண்டாயிரத்து 500 தாதியர்களுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் 3,504 வீடுகள் கையளிப்பு-
இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் 8,350 வீடுகள் அமைக்கும் நடவடிக்கையில் 3,504 வீடுகள் பூர்த்தியாக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய அரசினால் செயற்படுத்தப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் 8,350 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. அதன்படி தற்போது 3,504 வீடுகள் அமைக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2,636 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன் 2,210 வீடுகளுக்கான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த வீட்டுத்திட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 540 வீடுகளும், கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 1,914 வீடுகளும், பூநகரிப் பிரதேச செயலக பிரிவில் 768 வீடுகளும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 282 வீடுகளுமாக 3,504 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களாக மூவர் நியமனம்-
உயர் நீதிமன்ற நீதியரசர்களாக மூவர் நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். மேன் முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதவான் சிசிர த அப்றூ மேன் முறையீட்டு நீதவான் சரத் த அப்றூ ஜனாதிபதி சட்டத்தரணி பிரயந்த சமரகோன் ஆகியோரே இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான டீ.எஸ். விஜேசிங்க, ஆதர் சமரசேகர இக்ராம் மொஹமட்சேனக வல்கம்பாய ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
சமூக வலைத்தளங்களுக்கு தடை இல்லை-ஜனாதிபதி-
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக இணையத்தளத்தில், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி, பேஸ்புக்கில் தனக்கு 3 லட்சம் பேரின் விருப்பங்கள் இருப்பதாகவும் டுவிட்டரில் 25ஆயிரம் பேரின் விருப்பங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி அப்படி இருக்கையில் ஏன் சமூக வலைத்தளங்களை தடைசெய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு-மாவை சேனாதிராஜா-
யாழ் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்படுகின்றமை மற்றும் பேராசிரியர் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்குப் பின்னால் இராணுவத்தினருக்கு சம்பந்தம் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில், யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் நாளேடுகளில் வெளிவந்துள்ளன. நேரடியாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதற்கு மேலாக 16ஆம் திகதிமுதல் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும், விடுதிகளிலிருந்து மாணவர் வெளியேற வேண்டும் எனவும் பதிவாளர் அறிவித்தல் கொடுத்துள்ளார். ஆனால் பதிவாளர் விடுமுறையில் இருப்பதாகவும் அவர் அந்த அறிவித்தலைத் தான் விடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் என்றும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்துடன் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள், மாணவர் தலைவர்களை யாழ். மாவட்ட இராணுவத் தளபதி நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடியும் உள்ளார். இவ்வாறான செயற்பாடுகளை நோக்கும்போது யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்திருப்பது தெரியவருகிறது. பல்கலைக்கழகம் மூடப்படுவதையும் பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விடுக்கபட்டுள்ள கொலைமிரட்டல் சம்பவத்தையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் துணைவேந்தர் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார். இத்தகைய இராணுவத் தலையீடுகள், மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும், மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரை அச்சுறுத்துவதாகவும் அமையும் எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.